ஆன்மிகம்

பொய்கையாழ்வார்: பெருமாளின் சங்கு

ராஜேஸ்வரி ஐயர்

பொய்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களில் முதலாழ்வார்கள் மூவருள் ஒருவர். காஞ்சிபுரத்தில் ஐப்பசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் திருவெஃகா என்னும் ஊரிலுள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலைச் சேர்ந்த பொய்கையில் பிறந்தவர்.

இவரால் அந்தாதியாகப் பாடப்பட்ட நூறு பாடல்களும் முதல் திருவந்தாதி எனப்படுகின்றது. முதன்முதலில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் பாடியவர். பொற்றாமரைப் பொய்கையில் அதாவது திருக்குளத்தில் தோன்றியதால் பொய்கையாழ்வார் எனப் பெயர் பெற்றார்.

ஆழ்வார்களில் சிலர் திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஏதேனும் ஒன்றின் அம்சமாகப் பிறந்தவர்கள் என்பது வைணவக் கொள்கை. இதன்படி பொய்கையாழ்வார் பாஞ்சஜன்யம் எனப்படும் பெருமாளின் சங்கின் அம்சம் ஆவார்.

இவர் பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்னும் ஆழ்வார்களுடன் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவராவார். இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்க துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். உண்டியே உடையே என உகந்தோடும் மக்களோடு கலவாமல் ஒரு நாள் இருந்த இடத்தில் ஒரு நாள் இராமல் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே சஞ்சரித்துக்கொண்டிருந்தனர். பெருமாள் இவர்கள் மூவருக்கும் ஓர் இல்லத்தின் இடைகழியில் ஒரே சமயத்தில் காட்சியளித்தார் என்பது பிரபலமான வைணவ வரலாறு.

அவ்வானந்தம் மிகுந்து செய்யுள் வடிவமாக வெளி வரலாயிற்று. அச்செய்யுள் தொகுதி முறையே முதல், இரண்டாம், மற்றும் மூன்றாம் திருவந்தாதியாக உருவானது. இதில் முதல் திருவந்தாதி பொய்கையாருடையது. இதில் முதல் பாசுரத்திலேயே,

வையம் தகளியா வார்கடலே நெய்யாக,

வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,

என்று

இடராழி நீங்குகவே

என்று பாடிக் களிக்கிறார். வைணவப் பெரியவர் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்கமானது இயற்கையோடு கூடிய இறைவன் குறித்த நற்சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது. `பூமியானது திட வஸ்துவாயிருப்பதால் அதைத் தகளியாகவும், கடலானது திரவ வஸ்துவாயிருப்பதால் அதை நெய்யாகவும், ஸூர்யன் ப்ரகாச ஸ்வரூபனாயிருப்பதால் அவனை விளக்காகவும் ரூபித்து அருளிச்செய்கிறார்.

இதுவரையில் எம்பெருமானைத் துதியாதிருந்ததனாலுண்டான வருத்தம் நீங்குவதற்காக என்றும், துதிக்கவொட்டாமல் பிரதிபந்தகமாயிருந்த பாவங்கள் தொலைவதற்காக என்றும், இப்பிரபந்தத்தைக் கற்று ஸம்ஸாரிகளும் துயர் தீர்ந்து வாழ்வதற்காக என்றும் மூன்று படியாக உரைக்கலாம்’ என்கிறார்.

பெருமாளை இது வரை வணங்கவில்லையே என்று யாரும் வருந்த வேண்டாம். இப்போது இப்பாசுரத்தை படித்து உலகத் துயரங்களில் இருந்து விடுபடலாம் எனப் பொருள்படக் கூறுகிறார்.

SCROLL FOR NEXT