ஆன்மிகம்

தத்துவ விசாரம்: நீதான் முதல்!

வா.ரவிக்குமார்

ஒருசமயம் கை விரல்களுக்குள் யார் சிறந்தவர் என்னும் போட்டி வந்துவிட்டது. எப்போதுமே நான்தான் வெற்றியின் சின்னம். மனிதர்கள் எதில் ஜெயித்தாலும் என்னை உயர்த்திதான் காண்பிப்பார்கள். அதனால் நானே உங்கள் எல்லாரையும்விட சிறந்தவன் என்றது கட்டை விரல்.

எதிரில் எத்தனை பேர் இருந்தாலும் அதில் வென்றவர் யார், தோற்றவர் யார் எனச் சுட்டுவதுதானே முக்கியம்? அந்தவகையில் நானே சிறந்தவன் என்றது சுட்டு விரல்.

பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டா சிறந்ததை முடிவு செய்வது? என்று நகைத்த, நடுவிரல், உள்ளபடியே உருவ அமைப்பில் நம்மில் எவர் உயர்ந்தவர் என்பதைத்தானே பார்க்க வேண்டும்? இந்த அடிப்படையில் பார்த்தால், நானே உங்கள் எல்லாரையும்விட உயர்ந்தவன் என்பதை எந்தக் கேள்வியும் இல்லாமல் அனைவரும் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என மமதையில் கொக்கரித்தது நடு விரல்!

நடு விரலைச் சற்று நிமிர்ந்து பார்த்து மெலிதான புன்னகையை நழுவவிட்டது அதற்கு அடுத்திருக்கும் விரல். உங்கள் எல்லாருக்கும் தலைக்கனம் வந்துவிட்டது. அதனால்தான் உங்களை நீங்களே புகழ்ந்துகொள்கிறீர்கள். உங்களின் முக்கியத்துவத்தை அடுத்தவர்கள்தான் உணர்ந்து சொல்ல வேண்டுமே தவிர, நீங்களே சொல்லக் கூடாது. இதற்கு நானே சிறந்த உதாரணம். திருமணமாக இருந்தாலும் சரி, அல்லது வேறு வைபவமாக இருந்தாலும் சரி மோதிரத்தை எனக்குத்தானே கிரீடமாக அணிவிக்கிறார்கள். அதோடு மோதிர விரல் என்று என்னை மனிதர்களே அழைப்பதை நீங்கள் யாரும் மறுக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன் என்றது அலட்சியமாக ஒரு சிரிப்பை இதழில் தேக்கியபடி மோதிர விரல்.

உள்ளபடியே என்னைத் தவிர மற்ற விரல்களுக்கு எல்லாமே ஒரு சிறப்பு இருக்கிறது. எந்தச் சிறப்புமே இல்லாமல் என்னை ஏன் படைத்தாய்? இறைவனிடம் இப்படி வேண்டியது சுண்டு விரல்.

உடனே சுண்டு விரலின் முன் தோன்றிய இறைவன். சிறிது நேரம் மனிதர்களின் கையில் உன்னை மறையவைக்கிறேன். என்ன நடக்கிறது பார் என்றார்.

திடீரென கையிலிருந்த ஒரு சுண்டுவிரல் மறைந்ததால், கைகளின் செயல்பாடுகள் ஸ்தம்பித்தன. அதுவரை இருந்த கைகளின் உறுதியான பிடிமானம் தளர்ந்தது.

“நீ இல்லாமல் கைகள் படும் பாட்டை பார்த்தாயா?” என்றார் சுண்டு விரலிடம் இறைவன்.

“நான் இல்லாவிட்டால் கைகள் தடுமாறுவதிலிருந்து என்னுடைய முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டேன். ஆனாலும் கடைசி விரல்தானே” என்றது வருத்தத்துடன் சுண்டுவிரல்.

“இல்லையில்லை… மனிதர்கள் என்னை பக்திபூர்வமாகக் கும்பிடும்போது நீதான் முதல் விரல். என்னுடைய அருள் முதலில் கிடைப்பது உனக்குத்தான்” என்றார் இறைவன்.

SCROLL FOR NEXT