நவம்பர் 22 கங்கை கிணற்றுக்கு வந்த நாள்
நானூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆசாரங்கள் மிகுந்த அக்கிரகாரம் அது. அங்கே ஒரு இல்லத்தில் பித்ரு வழிபாட்டுக்காக அந்தணர்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக முன்னதாகவே அந்தணர்கள் உட்பட குடும்பத்தினருக்காகச் சமையல் செய்யப்பட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. இவர்களுக்கு உணவளிப்பதற்கு முன்னர், பித்ரு வழிபாட்டை நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆற்றில் சென்று குளித்துவிட்டு, வீடுதிரும்பிக் கொண்டு இருந்தார்.
அப்போது பசியால் வாடிய ஒருவர், இவரிடம் பசியாற உணவு கேட்டார். அவரோ ஒதுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அவரது பின்னணியைப் பார்க்காமல் உணவு அளிப்பதற்காகத் தன்னுடனேயே அழைத்துவந்தார் பித்ரு வழிபாட்டை நடத்துபவர். சமைத்து அடுக்கி வைத்திருந்த அனைத்து உணவுப் பொருட்களையும், அவருக்கு அளித்து பசியாறுமாறு கூறினார்.
இதனைக் கண்ட அக்கிரகாரத்து அந்தணர்கள், அவரைக் கடுமையாகச் சாடினார்கள். அவரோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல், உண்ண வருமாறு அவர்களை அழைத்தார். அவரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துவிட்டதாகவும், இனி தங்களுக்கு உணவளிக்க வேண்டுமானால் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள்.
இல்லத்துக்கு வந்த கங்கை
அந்த மனிதர் கண்ணை மூடி கங்கையைப் பிரார்த்தித்தார். உடனடியாகக் கங்கை அவரது இல்லத்துக் கிணற்றில், பொங்கிப் பிரவகித்தது. ஊர் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. அவரை மிரட்டிய அந்தணர்கள் வேண்டி நிற்க, தனது இல்லத்துக் கிணற்றிலேயே கங்கையைத் தணிந்து இருக்குமாறு அவர் வேண்ட கங்கையும் பணிந்தாள்.
சாதிப்பாகுபாடு பார்த்துப் பசி வருவதில்லை; பசியாற்றுவது மனிதாபிமானம் என்று எடுத்துக் கூறி சாதிவெறியை அன்றே ஒழித்த அவர், திருவிசைநல்லூர் ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள். இன்றும், அவ்வூரில் கோவிலாக உள்ள அவரது இல்லத்துக் கிணற்றில் கங்கை யானவள், இந்த அற்புத நிகழ்ச்சி நடைபெற்ற கார்த்திகை மாதம் அமாவாசை அன்று கிணற்றில் பொங்கி வருவதாக ஐதீகம்.
ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் சமுதாய ஒருமைபாட்டை நிலை நிறுத்திய ஸ்ரீதர வேங்கடேச ஐயாவாள், கங்கையைக் கிணற்றுக்குக் கொண்டு வந்த நாளை இவ்வாண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி கொண்டாடுகின்றனர். இதில் பல்வேறுபட்ட மக்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்வார்கள்.