சூரிய தீர்த்தம், அக்னி தீர்த்தம், சந்திர தீர்த்தம் எனும் மூன்று தீர்த்தங்களை உள்ளடக்கி ஆல் ,வில்வம், கொன்றை ஆகிய மூன்றையும் ஸ்தலவிருட்சங்களாகக் கொண்டு சுவேதாரண்ய மூர்த்தி, நடராஜ மூர்த்தி, அகோர மூர்த்தி என்னும் மும்மூர்த்திகளுடன் திருவெண்காடு திருத்தலம் திகழ்கிறது. சீர்காழி-பூம்புகார் நெடுஞ்சாலையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. திருவெண்காட்டு முக்குள நீரில் மூழ்கி எழுந்து உமைபங்கனான ஈசனை வழிபட்டால் பேய்கள் நெருங்காது, மகப்பேறு வாய், மனவிருப்பம் ஈடேறும் என்று பொருள்பட திருஞானசம்பந்தர் பாடியுள்ளார்.
சைவக்குரவர் நால்வராலும் பாடப்பட்ட தலம் இது. திருவெண்காட்டுத் தனிச்சிறப்பு ஸ்ரீ அகோரமூர்த்தி ஆவார். இத்திருவுருவைக் காணக் கண்கோடி வேண்டும். இவர் இடது காலை முன்வைத்து, வலது கால் கட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி கைகளில் திரிசூலம் ஏந்தி மருத்துவாசுரனை வதம் செய்யப்போகும் உக்கிரத்துடன் காட்சி தருகிறார்.
கார்த்திகை மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை இரவு மூலஸ்தானத்தில் உள்ள அகோரமூர்த்திக்கு மகாகும்பாபிஷேகமும் விபூதி அலங்காரமும் மிகச் சிறப்பாக நடைபெற்ற வருகிறது.