பழந்தமிழ் இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும் பக்தி இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும் பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுவது மாணிக்கவாசகரின் ‘திருவாசகம்’.
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி யப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
யாதி திறம்பாடி யந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி யாடேலோ ரெம்பாவாய்
எனும்போது சொல்லின்பமும் பொருளின்பமும் கூடி ஒரு மயக்கத்தை நமக்குள் ஏற்படுத்துமல்லவா! திருவாசகம் நெடுகிலும் நமக்குக் கிடைக்கும் மயக்கம் இது. கடவுள் நம்பிக்கை இல்லாதோரும் மாற்று மதத்தினரும் கூட திருவாசகத்திடம் கட்டுண்டு கிடக்கிறார்கள் என்றால் அதற்கு முதன்மையான காரணம் அதன் அழகுத் தமிழ்.
திருவாசகத்துக்கு எத்தனையோ உரைகள் இருந்தாலும் அதில் தனிச்சிறப்பு கொண்டது மத் சுவாமி சித்பவானந்தரின் உரை. திருப்பாராய்த்துறையில் இருக்கும் ராமகிருஷ்ண தபோவனத்தால் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல் இதுவரை 18 பதிப்புகள் கண்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. அப்படி என்ன சிறப்பு இந்தப் பதிப்புக்கு?
முதலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இந்த உரைநூலுக்கு சுவாமி சித்பவானந்தர் தந்திருக்கும் நூறு பக்க முன்னுரை. மாணிக்கவாசகரின் வரலாறு, திருவாசகம் நூலின் அமைப்பு, அதற்கான தத்துவ விளக்கம், மாயா தத்துவம், சமயங்களின் தோற்றம், சமயங்களின் சமரசம், வடமொழியும் தென்மொழியும், நாரத பக்தி சூத்திரங்கள், வேதங்கள், தர்சனங்கள், ஆறு சமயங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஜைனமதம், புத்த மதம், புராணக் கதைகள் என்று பல விஷயங்களைப் பற்றி சித்பவானந்தர் விரிவாக இந்த முன்னுரையில் எழுதியிருக்கிறார். வெறுமனே, பாடல்களையும் உரையையும் தந்திருந்தால் புதிய வாசகர்களுக்கு அதனால் பலனேதும் இல்லாமல் போயிருக்கும்.
ஆகவே, திருவாசகத்துக்கும் அதன் பின்னுள்ள நம்பிக்கை, தத்துவத்திற்கும் அவசியமான அறிமுகம் இது.
பிரதியைப் பொறுத்தவரை முதலில் சீர்பிரிக்கப்படாத மூலப் பாடல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அடுத்ததாக, எளிமையாகப் பொருள் விளங்கும்படி சீர் பிரித்துப் பாடல் கொடுக்கப்பட்டிருக்கும். அதற்குக் கீழே பதவுரையும், அடுத்து உரையும் கொடுக்கப்பட்டிருக்கும். எல்லோரையும் ஈர்க்கும் விதத்தில் எளிமையான உரையை சித்பவானந்தர் எழுதியிருக்கிறார். அது மட்டுமல்லாமல், அடிக்குறிப்புகளும் விரிவாக அமைந்திருக்கின்றன. பாடலுடன் தொடர்புள்ள விஷயங்களை வேதங்கள், உபநிடந்தங்கள் போன்றவற்றிலிருந்து அவர் உதாரணம் காட்டி விளக்கியிருப்பது சிறப்பு. தமிழையும் பக்தியையும் இரு கண்ணெனப் போற்றுவோர் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் இது.
உரை
நறுமணம் நிறைந்த உனது திருவடியை நாடுகிற எனக்கு உடல் புளகாங்கிதமடைகிறது; உணர்ச்சியின் வேகத்தால் அது நடுநடுங்குகிறது. என் கைகள் இரண்டையும் தலையில் வைத்து உன்னை வணங்குகிறேன். கண்ணீர் பொங்கி வருகிறது. உள்ளத்தில் இளம் சூடு தட்டுகிறது. அந்த உள்ளத்தை உனக்கே கோவில் ஆக்கியதால் நிலையற்ற உலக வியவகாரங்கள் எல்லாம் அதை விட்டுப் பறந்தோடுகின்றன.
நாவால் உன்னைப் போற்றுகிறேன். உனது திருவருள் விலாசத்துக்கு மேலும் மேலும் வெற்றியுண்டாகுக என்று வழுத்துகிறேன். ஈசா, உன்னை நாடியிருப்பதே சன்மார்க்கமாகிறது. அந்த சன்மார்க்கத்திலிருந்து நான் ஒரு பொழுதும் பிசகேன். நான் உன் உடைமை, நீ என்னை உடையவன். மேலும் நீ சர்வக்ஞன், அதாவது ஓதாது முற்றும் உணர்ந்தவன்.
ஆதலால் நான் எவ்வளவு தூரம் பண்பாடு அடைந்திருக்கிறேன் என்பதை நீயே நன்கு அறிகிறாய். உனது திருவுள்ளத்துக்கு ஒத்து ஒழுகுவது நான் கடைப்பிடிக்கும் நல்லொழுக்கமாகும்.
திருவாசகம்
விளக்கியவர்: ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
பக்கங்கள்: 992, விலை: ரூ. 190
வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ணா தபோவனம்,
திருப்பராய்த்துறை- 639115, திருச்சி மாவட்டம்.
மெய்தா னரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்
கைதான் றலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னுங்
கைதான் நெகிழ விடேனுடை யாயென்னைக் கண்டுகொள்ளே
(திருச்சதகம், பாடல்-1)
தொடர்புக்கு: srktapovanam@gmail.com