ஆன்மிகம்

திருநெறிய தமிழ் பாடிய திருமுலர்

எஸ்.ஜெயசெல்வன்

திருக்கயிலாய மலையில் எண்வகைச் சித்திகளும் பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் திருநந்தித்தேவரின் நல்லருள் பெற்றவர். அவருக்கு அகத்தியரைக் காண வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதனால் அகத்தியர் இருக்கும் பொதியமலையை நோக்கிப் புறப்பட்டார். செல்லும் வழியில் பல ஆலயங்களைத் தரிசித்து திருவாவடுதுறை எனும் சிறப்புமிகு தலத்திற்கு வந்தார். அந்தத் தலத்திலேயே இருக்க வேண்டும் என்ற உணர்வு யோகியர்க்கு ஏற்பட்டது. அதனால் நீண்ட நாள் அங்கே தங்கினார்.

பசுக்களை மேய்த்த மூலன்

திருவாவடுதுறைக்கு அருகே சாத்தனூர் என்னும் ஊர் உள்ளது. அவ்வூரில் ஆயர்குலத்தில் பிறந்த மூலன் என்பவன் பசுக்களை மேய்த்து வந்தான். ஒருநாள், வழக்கம்போல் அம்மூலன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கும்போது பாம்பு தீண்டி இறந்தான். பசுக்கள் அவன் பிரிவுக்கு ஆற்றாது அவனைச் சுற்றிச் சுற்றி வந்து கதறி அழுதன.

அந்த வழியே சென்ற சிவயோகியார் பசுக்களின் அழுகையைக் கண்டு மனம் வருந்தினார். பசுக்களின் துயரை நீக்க எண்ணினார். அவர் பல வகையான சித்திகளைப் பெற்றவர் அல்லவோ? அதனால் கூடு விட்டுக் கூடு பாயும் ஆற்றலால் தன் உடலைப் பிறிதோர் இடத்தில் வைத்துவிட்டு, மூலன் உடம்பில் தமது உயிரைப் புகுத்தினார்.

கூடுவிட்டு கூடு பாய்ந்த சிவனடியார்

உயிர் பெற்ற மூலன் திருமூலராய் எழுந்தார். மூலன் எழுந்ததைக் கண்ட பசுக்கள் எல்லையில்லா மகிழ்ச்சியுற்றன. உடன் துள்ளி எழுந்து களிப்பு மிகுதியால் மேயத் தொடங்கின. மாலைப் பொழுதில் பசுக்கள் வழக்கம் போல் தத்தம் வீடுகளை அடைந்தன. திருமூலர் எங்கும் செல்லாது பொது இடத்தில் இருந்தார். அவருக்குக் குடும்ப வாழ்வின் மீதுள்ள பற்று நீங்கியது. பின்னர் தன் உடலை மறைத்து வைத்திருந்த இடத்தில் சென்று தேடினார். அவர் உடல் அங்கு காணப்பெறவில்லை. இது இறைவன் திருவருள் என்று உணர்ந்தார்.

திருமூலர் திருவாவடுதுறை இறைவனை வணங்கித் திருக்கோயிலின் மேற்குப் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் சிவயோகத்தில் இருந்தார். அங்கேயே மூவாயிரம் ஆண்டுகள் யோகத்தில் இருந்து ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம், மூவாயிரம் பாடல்கள் பாடினார். மூலன் உரை செய்த பாடல்கள் மூவாயிரமும் திருமந்திரம் என்று போற்றப்படுகிறது. இது சைவத் திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாகும். இந்தத் திருமந்திரப் பாடல்கள் பல்வேறு சிறப்புகளுடன் ஒன்பது தந்திரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளன.

சமுதாய அறிவுரைகள்

திருமூலர், சமுதாயத்திற்குரிய அறிவுரைகளைப் பல பாடல்களில் திறம்படச் சொல்லியுள்ளார். ஒரு பாடலில் எது அறம்? எது அறமாகாது? என்பதை அழகாகக் கூறுகிறார். அந்தப் பாடல் இதோ,

‘அவ்வியம் பேசி அறம்கெட நில்லன்மின்

வெவ்வியன் ஆகிப்பிறர்பொருள் வவ்வன்மின்

செவ்வியன் ஆகிச் சிறந்து உண்ணும்போது ஒரு

தவ்விக் கொடு உண்மின்...’

இப்பாடலில் அவர் கூறுவது, ‘பிறருக்குத் துன்பம் தரும் தீய சொற் களைக் கூறக் கூடாது, பேராசையுடன் பிறர் பொருளை விரும்பக் கூடாது. நல்ல பண்புடன் திகழ வேண்டும். உண்ணும்போது வறியவர்க்கு ஒரு சிறு அளவு உணவு கொடுக்க வேண்டும்’ என்பதாகும்.

திருநெறிய தீந்தமிழ்ப் பனுவல் களைப் பாடி சிவனருளையே சிந்தித்து தவமியற்றிய திருமூலர் ஓர் ஐப்பசி மாதத்து அசுபதி நன்னாளில் இறைவரது திருவடி நிழலில் சேர்ந்தார். ஆண்டுதோறும் (ஐப்பசி அசுபதியில்) இவரது குரு பூசை விழா திருவாவடுதுறை திருக்கோயிலில் உள்ள திருமூலர் திருச்சன்னதியில் திருவாவடுதுறை ஆதீனத்தால்

இன்றும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT