ஆன்மிகம்

ஓஷோ சொன்ன கதை: தவறுக்கு நிறைய தர்க்கங்கள் உண்டு

ஷங்கர்

அப்பட்டமான உண்மை என்பது தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டது என்பதை என்றும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தவறுக்குத்தான் ஆதரவாக நிறைய தர்க்கங்கள் இருக்கும்.

சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே மிகப் பெரிய சுவர் ஒன்று இருந்ததாம். பல நூறாண்டுகள் ஆகியும் அந்தச் சுவர் பழுதுபார்க்கப்படாமல் இருந்ததால் இறைவன் சங்கடமாக உணர்ந்தாராம். அந்தச் சுவரை சாத்தான்தான் பழுது பார்க்க வேண்டும் என்று இறைவன் எண்ணினாராம். ஒவ்வொரு அண்டை வீட்டுக்காரரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தானே!

ஆனால் சாத்தானோ, கடவுள்தான் தடுப்புச் சுவரைப் பழுதுபார்க்க வேண்டுமென்று விரும்பியது. இருவருக்கும் பெரும் தகராறு ஏற்பட்டது.

கடவுளால் சாத்தானை வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்.

“எனது பேச்சைக் கேட்காவிட்டால், நான் உன்னை நீதிமன்றத்துக்கு இழுப்பேன்” என்று அச்சுறுத்தினார்.

சாத்தானோ அஞ்சவேயில்லை. கலகலவென்று சிரித்தது. “சரிதான். உங்களுக்கு ஆதரவாக வாதிட வழக்கறிஞருக்கு எங்கே போவீர்கள்? அவர்கள் எல்லாம் என் இடத்தில் அல்லவா இருக்கிறார்கள்” என்றது.

கடவுளின் இடத்தில் தர்க்கத்திற்கு வேலையே கிடையாது. நேசத்திற்கும் அதுதான். தியானம் என்பது அடுத்தவரைப் பேசி சம்மதிக்க வைப்பதல்ல. ஒருவரைச் சம்மதிக்க வைக்கும் முயற்சியில் நீ இறங்கினால், நீ ஏற்கனவே தவறான திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறாய் என்றுதான் பொருள்.

SCROLL FOR NEXT