ஆன்மிகம்

பைபிள் கதைகள் 42: ஒரு பெண்ணின் துணிவு

அனிதா அசிசி

வாக்களித்தவாரே கானான் நாட்டை இஸ்ரவேலர்கள் வெல்லும்படி செய்தார். என்றாலும் அங்கே வாழ்ந்துவந்த பிற இனத்தினரை அங்கிருந்து செல்லும்படி கடவுள் வற்புறுத்தவில்லை. அவர்களில் பல இனங்களை அங்கேயே விட்டுவைத்தார். இஸ்ரவேலர்களின் மூதாதையான மோசேயின் மூலமாக அவர்களுக்குக் கொடுத்த கட்டளைகளை மதித்து, அவற்றுக்கு புதிய தலைமுறையினர் கீழ்ப்படிந்து வாழ்கிறார்களா என்பதைப் பார்க்க கடவுள் விரும்பினார்.

இதன் பொருட்டே கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய புற இன மக்களுக்கு மத்தியில் இஸ்ரவேலர்களை வாழும்படி செய்தார். ஆனால் தங்கள் முன்னோர்கள்போல புதிய தலைமுறையினர் திருச்சட்டங்களையும் கட்டளைகளையும் பொருட்படுத்தவில்லை. புற இனத்தைச் சேர்ந்தவர்களுடன் திருமணம் உறவு வைத்துக்கொண்டனர். பெண் எடுக்கவும் பெண் கொடுக்கவும் செய்தனர்.

இதன் பொருட்டு புற இன மக்கள் வழிபட்டுவந்த கற்பனையான தெய்வங்களான பாகால், அசேரா ஆகியவற்றை இஸ்ரவேலர்களும் வழிபடலாயினர். தன்னை மறந்த தன் மக்கள் மீது கடவுள் கடுங்கோபம் கொண்டார்.

மீண்டும் மீட்பை அளித்த கடவுள்

மெசபடோமியாவின் அரசனாகிய கூசான்ரிஷதாயீம் என்பவன் இஸ்ரவேலரைத் தோற்கடித்து அவர்களை ஆட்சி செய்வதற்கு கடவுள் அனுமதித்தார். அம்மன்னனின் ஆட்சியின் கீழ் இஸ்ரவேலர் எட்டு ஆண்டுகள் வாழ்ந்தனர். அந்நிய ஆட்சியால் கீழாக நடத்தப்படுவதைக் கண்டு தங்கள் கடவுளாகிய யகோவா தேவனிடம் உதவிக்காக அழுது புலம்பினார்கள். அவர்களை மீட்பதற்காகக் கடவுள் ஒரு மனிதனை அனுப்பினார். அம்மனிதனின் பெயர் ஒத்னியேல். அவன் கேனாஸ் என்னும் இஸ்ரவேலரின் மகன். கடவுளுடைய தூய ஆவி ஒத்னியேல் மீது இறங்கி வந்தது. அவன் இஸ்ரவேலருக்கு நியாயாதிபதி ஆனான்.

மெசபடோமிய அரசனின் ஆளுகையிலிருந்து தேசத்தை மீட்க இஸ்ரவேலரைப் போருக்கு வழிநடத்தினான். போரில் கூஷான்ரிஷதாயீமின் படைகள் இஸ்ரவேலரிடம் தோற்று ஓடின. இஸ்ரவேல் மக்கள் பரலோகத் தந்தையின் வல்லமையை மீண்டும் உணர்ந்துகொண்டனர். புறமத வழிபாட்டை உதறினர். இதனால் ஒத்தேனியேல் வயது முதிர்ந்து இறக்கும்வரை 40 ஆண்டுகள் கானான் அமைதியாக இருந்தது.

தீர்க்கதரிசினி தெபோராள்

ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பிறகு கடவுள் அளித்த கட்டளைகளை மறந்து, புற இன மக்களின் அறமற்ற வாழ்க்கை முறையால் கவரப்பட்டு மீண்டும் மீண்டும் இஸ்ரவேலர்கள் கஷ்டத்தில் மாட்டிக்கொண்டார்கள். தங்கள் வானகத் தந்தையை உணர்ந்து அவரை நோக்கிக் கெஞ்சினார்கள். அப்போது அவர்களுக்கு உதவி செய்ய தைரியமுள்ள தலைவர்களை (நியாயாதிபதிகள்) நியமித்த கடவுள், அவர்கள் வழியே அந்நிய ராஜாக்களையும் படையெடுப்பாளர்களைத் துரத்தியடித்து இஸ்ரவேலர்களைக் காத்தார்.

இப்படி ஒத்னியேலுக்குப் பிறகு ஏகூத், சம்கார் உள்ளிட்ட 13 தலைவர்களை அவர்களுக்குத் தந்தார். இஸ்ரவேலர்களுக்கு ஆண்களை மட்டுமே அல்ல; ஒரு பெண்ணையும் நியாயாதிபதி ஆக்கினார். அவர் தெபோராள். தேபோராளை தீர்க்கதரிசினியாக உயர்த்திய கடவுள் இஸ்ரவேலர்களின் நியாதிபதியாக பாராக்கை நியமித்தார். தெபோராள் வழியே இஸ்ரவேலர்களுக்கு கடவுள் உதவினார். பாராக், தெபோராள் காலத்தில் யாக்கேல் என்ற வீரமும் விசுவாசமும் மிக்க பெண்ணையும் கடவுள் பயன்படுத்திக்கொண்டார்.

ஒரு கெட்ட ராஜாவும் அவன் தளபதியும்

இஸ்ரவேலர்களின் எதிர்காலத்தைப் பற்றி தெபோராளின் வழியே கடவுள் கூறிவந்தார். கடவுள் சொல்வதை அவர் மக்களுக்கும் நியாயாதிபதியான பாராக்கிற்கும் சொல்லிவந்தார். எபிராயீம் மலைநாட்டில் இருந்த ஒரு பேரீச்சை மரத்தின் கீழ் அமர்ந்து தன்னைத் தேடிவரும் இஸ்ரவேல் மக்களுக்கு பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள ஆலோசனை வழங்கி, அவர்களை ஆற்றுப்படுத்தி வந்த தெபோராளை பாராக் மிகவும் மதித்தார்.

இக்காலகட்டத்தில் இஸ்ரவேலர்கள் 20 ஆண்டுகள் கொடுமையான அந்நிய ஆட்சியின் கீழ் இருந்தார்கள். யாபீன் என்ற அந்நியன் கானானில் அரசனாகி அதைக் கொடுங்கோன்மையுடன் ஆண்டுவந்தான். இஸ்ரவேலர்களை அவன் தனது வேலையாட்களாக நடத்தி வந்தான். எல்லாவிதத்திலும் அவர்களை ஒடுக்கினான். அவனிடம் 900 யுத்த ரதங்கள் இருந்தன. அந்த கெட்ட அரசனின் படை மிகவும் பலமுள்ளதாய் இருந்தது. அந்தப் படையை சிசெரோ என்ற தளபதி தலைமை தாங்கி கொடுஞ்செயல்களைச் செய்துவந்தான். சிசெரோவைக் கண்டு இஸ்ரவேலர்கள் நடுங்கினார்கள்.

கடவுள் தேர்ந்த இரு பெண்கள்

ஒருநாள் நியாயாதிபதி பாராக்கை அழைத்த தெபோராள் கடவுள் தனக்குக் கூறியதை அவரிடம் தீர்க்கதரிசனமாய் உரைத்தார்.

“ இஸ்ரவேலர்களில் பத்தாயிரம் படைவீரர்களைத் தயார்செய்து அவர்களைத் தாபோர் மலைக்குக் கூட்டிக்கொண்டு போ. அங்கே நான் சிசெரோவை உன்னிடம் கொண்டு வருவேன். அவன் மீதும் அவனுடைய படை மீதும் நான் உனக்கு வெற்றியைத் தருவேன் ” என்ற கடவுளின் வார்த்தைகளை அப்படியே கூறினார். ஆனால் அப்போது தனியே செல்ல ஒரு கோழைபோல் பயந்த பராக்;

“ நீங்களும் என்னோடுகூட வந்தால் நான் போவேன்” என்று சொன்னார். எனவே தெபோராள் அவருடன் கிளப்பினார். ஆனால் புறப்படும்முன் “போரில் கிடைக்கப்போகும் வெற்றியை உன்னுடையதாக நீ கொண்டாட முடியாது. ஏனெனில் நம் கடவுள் சிசெரோவை ஒரு பெண்ணின் கையால் வீழ்த்துவார்” என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட பாராக், சிசெரோவின் படையை நேருக்கு நேர் எதிர்கொள்ள தாபோர் மலையின் மீதேறிப் பின் அங்கிருந்து கீழே இறங்கினார். இஸ்ரவேலர்கள் படையாகத் திரண்டுவருவதைக் கண்ட சிசெரோ பள்ளத்தாக்கில் முகாமிட்டிருந்த தனது படைகளுக்கு உடனே தாக்கும்படி உத்தரவிட்டான். ஆனால் பாராக்கின் படையிடம் சிரெரோவின் படை சுருண்டது. இதைச் சற்றும் எதிர்பாராத சிசெரோ அங்கிருந்து தப்பித்து ஓடினான்.

யாக்கேலின் துணிவு

தளபதி சிசெரோ, ஏபேர் என்பவரின் கூடாரத்தைக் கண்டான். அங்கே சென்று ஒளிந்துகொள்ள நினைத்துச் சென்றவனை ஏபேரின் மனைவியாகிய யாக்கேல் வரவேற்று உள்ளே அழைத்து சென்று அவனுக்குக் குடிக்கப் பால் கொடுக்கிறாள். பால் அருந்தியதால் அவனுக்குத் தூக்கம் வர வெகுசீக்கிரமே ஆழ்ந்த தூக்கத்துக்குச் சென்றுவிடுகிறான். தனது கணவர் ஏபேருக்கும் அரசனாகிய யாபீனுக்கும் இணக்கமான ஒப்பந்தம் இருந்தும்கூட, சிறிதும் யோசிக்கவில்லை யாக்கேல்.

‘இஸ்ரவேலர்களைத் துன்புறுத்தும் இவன் எனக்கும் எதிரியே’ என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு ஒரு கூடார ஆணியை எடுத்து, அந்தக் கெட்ட தளபதியின் தலையில் அடித்து, அவனைக் கொன்றுவிடுகிறார். பிறகு சிசெரோவைத் தேடிக்கொண்டு அங்கே வந்துசேர்ந்த பராக்கிடம் அவனது பிணத்தைக் காட்டுகிறார். தெபொராள் சொன்னபடியே நடந்ததைக் கண்டு பாராக் கடவுளைப் போற்றுகிறார். அதன் பின் யாபீன் அரசனும் கொல்லப்பட்டு, இஸ்ரவேலர்கள் அமைதியாக வாழத்தொடங்குகிறார்கள்.

SCROLL FOR NEXT