ஆன்மிகம்

ரமலான் மாதச் சிறப்புக் கட்டுரை: பசித்திருந்து உங்கள் இதயங்களுக்கு ஒளியேற்றுங்கள்

செய்திப்பிரிவு

நோன்பு ஒரு கேடயம். அதைக் கொண்டு ஒருவன் தன்னைத் தற்காத்துக் கொள்கிறான். பசித்திருந்து உங்கள் இதயங்களுக்கு ஒளியேற்றுங்கள். பசி, தாகத்தைக் கொண்டு உங்களையே நீங்கள் வெற்றிகொள்ள முயலுங்கள். சுவர்க்கத்தின் வாசலை, பசியென்னும் சம்மட்டியினால் தட்டிக் கொண்டேஇருங்கள்.

நோன்பின்போது ஒருவன் எல்லாவிதமான தீய பேச்சுகளையும் விலக்கவேண்டும். தனக்குத் துன்பம் செய்வோர் மீதுகூட கோபம் கொள்ளக்கூடாது.

பொய் பேசுவதையும் பிறரைப் பழித்துக் கூறுவதையும் கைவிடாமல் ஒருவன் நோன்பு நோற்றால், உண்பதையும் பருகுவதையும் துறந்து விட்டதற்காக அவனை இறைவன் சிறிதளவுகூட பொருட்படுத்த மாட்டான்.

நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறவருக்கு அல்லாஹ் தனது பெரிய தண்ணீர்த் தடாகத்திலிருந்து நீர் புகட்டி, அவர் சுவனம் செல்லும்வரை தாகம் அடையாமல் காப்பாற்றுகிறான்.

இவ்வாறு நோன்பின் சிறப்பையும், விதிமுறைகளையும் அண்ணல் நபி அணியணியாக எடுத்துரைத்துள்ளதை அறிவோம்.

கண்ணியமிக்க கடமை

ரமலான் நோன்பு மாதம் கண்ணியமிக்க மாதம். அதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இந்த மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் புரிந்தால் மற்ற மாதங்களின் எழுபது நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள்.

நோன்பு என்பது தனக்குரியது என்றும், அதற்குரிய பலனைத் தானே அளிப்பேன் என்றும் இறைவன் பொறுப்பேற்றுக் கொள்கிறான். நோன்பாளிக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி எல்லையற்றது. நோன்பு திறக்கும்போது இறைவனைச் சந்திப்பது போன்ற மனநிறைவு அவர்களுக்கு உண்டு. சுவன வாழ்க்கை அவர்களுக்குக் கிட்டுவது உறுதி. இறைவன் வழியில் நோன்பு நோற்பவருக்கும் நரகத்திற்கும் வெகுதுாரம். வானத்திற்கும் பூமிக்கும் இடையில் எத்தனை தொலைவோ, அத்தகைய அளவுக்கு அகழி போன்ற இடைவெளியை ஏற்படுத்தி நோன்பாளியை நரகத்திற்கு அப்பால் விலக்கி வைத்து விடுகிறான் இறைவன் என்று நபி பெருமான் குறிப்பிட்டுள்ளார்கள்.

ரமலான் நோன்பு மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு விடுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. சாத்தான்களுக்கு விலங்கிடப்பட்டு விடுகிறது. நன்மையை அள்ளி எடுத்துக்கொள்ள ஆண்டவன் மக்களுக்கு அளித்த கடமையே ஒரு மாத நோன்பு. அதற்காக அருளிய புனித மாதமே ரமலான் என்பதும் நபிமொழி.

புனித ரமலான் மாதத்தில்தான் இறைவனால் வேதங்கள் அருளப்பட்டன. லைலத்துல் கத்ர் எனும் 27-ம் இரவில் முகம்மது நபி அவர்களுக்கு குர்ஆன் வானவர் தலைவர் ஜிப்ரீல் (கேப்ரியல்) மூலம் முதலில் அருளப்பட்டது, பிறகு பல அத்தியாயங்கள் கட்டம் கட்டமாக அறிவிக்கப்பட்டன மூஸா நபி (மோசஸ்), இப்ராஹிம் நபி (அப்ரஹாம்) ஆகியோருக்கும் ரமலான் மாதத்திலேயே வேதங்கள் இறக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. “ரமலான் மாதம் எத்தகைய மகத்துவமுடையதென்றால், அதில்தான் மனிதர்களுக்கு நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும், நன்மை தீமையைப் பிரித்தறியக் கூடியதாகவும் உள்ள குர்ஆன் எனும் இவ்வேதம் அருளப்பெற்றது. ஆகவே, உங்களில் எவன் அம்மாதத்தை அடைகிறானோ அவன் நோன்பு நோற்கவும்…” என்று மற்றொரு வசனம் வலியுறுத்துகிறது.

அதனால் ரமலான் மாதத்தில் நோன்பிருந்து மாண்புகளைப் பெறுவோம்.

“ விசுவாசிகளே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் அது விதிக்கப்பட்டிருக்கிறது. அதன் மூலம் நீங்கள் துாய்மையுடையோர் ஆகலாம்.

“ எனவே உங்களில் எவர் ரமலான் நோன்பு மாதத்தை-பெறுகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்று விடவும். எவரேனும் நோயாளியாகவோ, பிரயாணத்திலோ இருந்தால் மற்ற நாட்களில் ஏற்கெனவே விடுபட்ட நோன்பினை கணக்கிட்டு நோன்பு நோற்றுவிடலாம். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். அவன் உங்களுக்கு சிரமத்தை நாடவில்லை…”

SCROLL FOR NEXT