வைணவ சம்பிரதாயத்தில் ஆச்சாரியனுக்கே முதலிடம். அப்படி ஆச்சாரியனான நம்மாழ்வாரைப் போற்றித் துதித்தவர் மதுரகவி ஆழ்வார். தூணிலும் துரும்பிலும் வியாபித்திருந்த பெருமாளை ‘உண்ணும் சோறும், பருகும் நீரும், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே', என்று துதித்திருந்தவர் நம்மாழ்வார்.
நம்மாழ்வாருக்குக் கண்ணன் உயிர் தெய்வம் என்றால், மதுரகவி ஆழ்வாருக்கோ நம்மாழ்வாரே உயிர். ஸ்ரீபிரதிவாதி பயங்கரம் அண்ணங்காச்சாரியார் போன்ற பெரியவர்கள், பகவத் பக்திகூட வந்துவிடும், பாகவத பக்தி வருதல் அபூர்வம் என்று குறிப்பிட்டுச் சொல்வார்கள்.
மதுரகவி ஆழ்வார் கருடனின் அவதாரம் என்று கொண்டாடப்படுகிறார். இவர் திருக்கோலூர் என்னும் திவ்ய தேசத்தில் அவதரித்தார். இவர் குல வழக்கப்படி வேதங்களைக் கற்றுத் தேர்ந்தார். வேதம் தமிழில் செய்த மாறன் என்ற பெருமை பெற்ற நம்மாழ்வாரின் சீடரான இவர், தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் மிக்க புலமை படைத்தவராக இருந்தார்.
முன்னதாக வட இந்தியப் பயணம் மேற்கொண்டு அயோத்தியில் ராமபிரானைத் தரிசித்தார். பின்னர் தென்திசை நோக்கி வரும் போது ஒரு புதிய ஜோதியைக் கண்டார். அந்த ஜோதி எங்கிருந்து வருகிறது என்பதை அறிவதற்காக அவ்வொளியை நோக்கி வந்தார். அப்போது திருவேங்கடம், திருவரங்கம், திருமாலிருஞ்சசோலை, திருவில்லிபுத்தூர் ஆகிய திவ்ய தேசங்களைத் தரிசித்துவந்தார். அந்த தெய்வீகப் பயணத்தின் முடிவில் திருகுருகூர் என்ற புண்ணியத் தலத்தை அடைந்தார்.
அந்த ஒளியின் இருப்பிடமே நம்மாழ்வார் வசிக்கும் இடம் என்பதைக் கண்டார் என்றும், அவரையே குருவாகக் கொண்டார் என்பதும் வைணவ மரபு சார்ந்த நம்பிக்கை.இவர் 11 திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை இயற்றியுள்ளார். இப்பாசுரங்கள் அனைத்தும் நம்மாழ்வார் மேல் மதுரகவி ஆழ்வார் கொண்ட பக்தியைத் தெரிவிக்கின்றன. ஆச்சாரியனைக் கொண்டாடும் விதமாக நம்மாழ்வரை அர்ச்சா ரூபமாக எழுந்தருளச் செய்தார். அவர் அருளிய திவ்யப் பிரபந்தங்களை நாம சங்கீர்த்தனமாக உலகோருக்குக் கற்றுக் கொடுத்தார்.
அன்பன் தன்னை அடைந்தவர் கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுர கவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே –11
இப்பாசுரத்தில் மதுரகவி ஆழ்வார் அன்பன் என்ற சொல்லை மூன்று முறை பயன்படுத்தியிருக்கிறார். மூன்று இடங்களிலும் மூன்று வெவ்வேறு பொருள்களை இந்தச் சொல் தருகிறது. முதல் அன்பன் என்ற சொல்லுக்குப் பொருள் கருணை. இரண்டாம் அன்பன் என்பது ஆச்சார்யன் பெயர் (அதாவது தென் குருகூர் நம்பியான நம்மாழ்வார்). மூன்றாம் அன்பனுக்குப் பொருள் அடியவன், அதாவது தன்னையே சொல்லிக்கொள்கிறார்.
நிதர்சனமான ஆச்சாரிய பக்திக்கு வேறு எங்கும் தேடிக்கொண்டு போக வேண்டாம் மதுரகவி ஆழ்வார் பாசுரங்களைப் படித்தாலே போதுமானது.