ஆன்மிகம்

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 15: கருடனின் கர்வமும் கருணைக் கடலின் அருளும்...

ஓவியர் பத்மவாசன்

சிறிய திருவடியான ஆஞ்சநேயனின் பெருமையைப் பார்த்தோம். அவனது தலைவன் ராமபிரான் பெருமைகளையும் சிறிது பார்த்தோம். பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் பற்றியும் பார்ப்போம்.

முழங்கால் வரை பொன் நிறமாக இருப்பார் கருடன். அதற்கு மேலே கழுத்துவரை சூரியனின் பிரகாசம் போன்ற வண்ணம் கொண்டவர் அவர். கழுத்து, குங்கும வர்ணமாகவும் முகம் சந்திரனைப் போன்ற வெண்மை நிறத்துடனும், கறுத்த மூக்குடனும், கோரைப் பல்லுடனும் கூடியவர் அவர்.

இவரை ஏராளமான நாகங்கள், வணங்கிப் பணிவிடை செய்ய இவரோ, மஹாவிஷ்ணுவின் நினைப்பிலேயே கைகளைக் கூப்பியபடியே மண்டியிட்டபடி இருக்கிறார். இவர் மஹாவிஷ்ணுவின் வாகனமாய் ஆன கதை இதுதான். இது கருடனின் அகம்பாவத்திற்கு கிடைத்த அரிய வரம், அரிய வாய்ப்பு, பரிசு. ஆமாம். கதையைத் தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கே புரியும்.

கருடன் வாகனமான கதை

காசியப முனிவரின் மனைவிகளில் ஒருத்தி வினதை. இன்னொரு மனைவி பெயர் கத்துரு. வினதையின் புதல்வர்களில் ஒருவரே கருடன். கத்துருவின் புதல்வர்களில் ஆதிசேஷனும், கார்கோடகனும் பிரபலம். இவளுக்கோ கருடன்; அவளுக்கோ நாகங்கள். இவர்களென்னவோ ஒற்றுமையாய் இருக்க அம்மாக்களுக்குள்தான் பகை. அதுவும் கத்துருவிற்கு வினதை மீது தீராத பொறாமை, பகை. இவளை அடிமையாக்கிக் கசக்கிப் பிழிய வேண்டும் என முடிவெடுத்தவள் அதற்கான சந்தப்பத்திற்காகக் காத்திருந்தாள்.

ஒருநாள், இந்திரனின் வெள்ளை வெளேரென்ற குதிரையைப் பார்த்து மலைத்துப் போனாள் வினதை. அதைப்பற்றி கருடனிடமும், ஆதிசேஷனிடமும் வியந்து பேசிக்கொண்டிருந்தாள். வெள்ளை உள்ளத்தோடு உளமார ரசித்துப் பேசிய வினதையைப் புரட்டிபோட இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய கத்துருவின் மனம் கறுத்தது. புத்தி சிறுத்தது!

"என்ன பெரிய வெள்ளைக் குதிரை! அது அப்படி ஒன்றும் முழுவெள்ளை இல்லையே. அதன் வால் கறுப்பாக அல்லவா இருந்தது. ஒழுங்காக ஒரு பொருளைப் பார்க்கத் தெரியவில்லை. ஆனால் புகழத்தெரியும் அப்படித்தானே! ஒரு வேலையை உருப்படியாகப் பண்ணத் தெரியாதவளுக்கு, பேச்சுக்கு ஒன்றும் குறைவில்லை."

(மீண்டும் அடுத்த வாரம்)


ஓவியர் பத்மவாசன்

SCROLL FOR NEXT