லாவோட்சு, தான் வாழ்ந்த பிரதேசத்தில் போர் மேகங்கள் சூழ்ந்ததால், இனி இங்கே ஜீவித்திருக்க இயலாதென்ற முடிவுக்கு வந்தார். வாழ்வின் சாராம்சத்தை அறிந்துகொள்ளும் பொருட்டு தியானத்தில் அவர், அங்கே பல ஆண்டுகளைக் கழித்திருந்தார். சில சமயங்களில் நடைமுறை சார்ந்துதான் முடிவெடுக்க வேண்டும் என்பதை அவர் தெரிந்துகொண்டிருந்தார். அதனால் அந்த இடத்திலிருந்து செல்லும் ஒரே எளிய சாத்தியமுள்ள முடிவை எடுத்தார். தனது உடைமைகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு ஹன் கியோவுக்குப் பயணமானார். ஊரின் எல்லையில் வாயிற்காப்போன் அவரைத் தடுத்தான். “உங்களைப் போன்ற புகழ்பெற்ற ஒரு ஞானி இங்கிருந்து செல்லலாமா?” என்று கேட்டான் வாயிற்காப்போன்.
“நான் போர் நடக்கும் இடத்திலிருந்து எங்காவது தொலைவில் செல்வதற்கு விரும்புகிறேன்”.
“நீங்கள் இங்கிருந்து அவ்வளவு எளிதாக நீங்கிச் சென்று விடமுடியாது. இத்தனை ஆண்டுகள் தியானத்தில் நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்பது எனக்குத் தெரிய வேண்டும். நீங்கள் என்னிடம் அதைப் பகிர்ந்துகொண்ட பின்னர்தான் இங்கிருந்து கிளம்ப முடியும்.” என்றான் வாயிற்காப்போன்.
அந்த மனிதனிடம் இருந்து தப்பிப்பதற்காக ஒரு சிறிய நூலொன்றை வேகமாக எழுதிக் கொடுத்துவிட்டு தப்பித்தார் லாவோட்சு. அந்த நூலின் எதிர்காலம் குறித்து அவருக்கு எந்தக் கவலையும் இல்லை. அந்த நூல் நகல்களாக எடுக்கப்பட்டது. நூற்றாண்டுகளைக் கடந்து, ஆயிரமாவது ஆண்டையும் கடந்து நமது காலத்திற்கும் வந்து சேரந்துவிட்ட அந்தப் புத்தகம் தான் தா வோ தே சிங். மிகவும் எளிய, வாழ்க்கைக்குத் தேவையான புத்தகம் அது.
தாவோ தே ஜிங் நூலிலிருந்து ஒரு பகுதி இது:
தன் நெறியில் செல்பவன் விருப்புறுதியைக் கொண்டவன்
தாழ்ச்சியுடன் இருங்கள்; முழுமையாக இருப்பீர்கள்.
தாழப் பணியுங்கள்; நிமிர்ந்து நிற்பீர்கள்.
உங்களைக் காலியாக வைத்திருங்கள்; நிரம்பியிருப்பீர்கள்.
உங்களைக் களைந்து வெளியே எறியுங்கள்; நீங்கள் புதிதாக ஆவீர்கள்.
ஞானவான் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை, அதனால்தான் அவன் ஒளிர்கிறான்.
அவன் தன்னை நோக்கி கவனத்தை ஈர்க்கமாட்டான், அதனால் தான் அவன் கவனிக்கப்படுகிறான்.
அவன் தன்னைப் புகழ்ந்து கொள்ளமாட்டான், அதனால் தான் அவன் புகழப்படுகிறான்.
அவன் எந்தப் போட்டியிலும் இல்லாததனாலேயே, உலகில் யாராலும் வெல்ல முடியாதவனாக இருக்கிறான்.