ஆன்மிகம்

பைபிள் கதைகள் 18 - இஸ்ரவேல் என்ற இனம் உருவாதல்!

அனிதா அசிசி

தன் அன்புக்குரிய செல்ல மகன் யோசேப்புவை மிருகம் அடித்துக் கொன்றுவிட்டதாக இத்தனை காலம் நம்பியிருந்தார் யாக்கோபு. கடவுளால் இஸ்ரவேல் என்று பெயர் சூட்டப்பட்ட அவரிடம், “ யோசேப்பு மரிக்கவில்லை; எகிப்தின் ஆளுநராக இருக்கிறார். நாம் அனைவரையும் எகிப்தில் குடியேறி வாழ அழைக்கிறார்” என்று தனது மகன்கள் வந்து கூறியதும் மரணத்திலிருந்து மீண்டு வந்தவரைப் போல மகிழ்ந்தார். தனது குடும்பத்தினர், மந்தைகள், பணியாளர்கள் அனைவருடனும் அவர் எகிப்துக்குப் பயணமானார்.

மனநிறைவுடன் இறப்பேன்

தன் தந்தை வருவதை அறிந்த யோசேப்பு தன் தேரைத் தயார் செய்துகொண்டு, அவரை எதிர்கொண்டு அழைத்துவரக் கிளம்பிப்போனான். பெருந்திரளான மந்தையும் தன் மக்களுமாய் யோக்கோபு வருவதைக் கண்ட யோசேப்பு தன் பழைய நினைவுகளால் கலங்கிப்போனார். இயற்கையுடன் இரண்டறக் கலந்த, அமைதியான மேய்ப்பர்களின் குடும்ப வாழ்க்கையை அவர் அப்போது எண்ணிப் பார்த்தார். அப்படிப்பட்ட வாழ்க்கையைத் தான் இழந்திருந்ததையும் எண்ணி ஏங்கினார். தன் தந்தையைப் பார்த்ததும் ஓடிப்போய் மார்போடு அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு நீண்ட நேரம் அழுதான்.

பின்னர் சமாதானமாகி மகன் யோசேப்புவின் முகத்தைப் பார்த்த இஸ்ரவேல் (யாக்கோபு), “இப்போது நான் மனநிறைவுடன் இறந்துபோவேன். உன் முகத்தைப் பார்த்துவிட்டேன். இன்னும் நீ உயிரோடு இருக்கிறாயே. அதுவே எனக்குப் போதும்” என்றார்.

கோசேனில் குடியேறிய குடும்பம்

யோசேப்பு தன் சகோதரர்களிடமும் அவர்களின் குடும்பத்தினரிடமும் எகிப்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்கூறினார். “ நான் இப்போது போய் எனது மன்னரிடம் நீங்கள் இங்கே அடைக்கலம் தேடி வந்திருப்பது பற்றிக் கூறும்போது, “என் தந்தையும் சகோதரர்களும் அவர்களது குடும்பமும் கானான் நாட்டை விட்டு என்னிடம் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மேய்ப்பர் குடும்பத்தினர். அவர்கள் ஆடு மாடுகளையும் அவர்களுக்குரிய அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பேன். அவர் உங்களை அழைத்து, நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று கேட்டால், நாங்கள் மேய்ப்பர்கள், மேய்ப்பதுதான் எங்கள் தொழில். எங்கள் முற்பிதாக்களும் மேய்ப்பர்கள்தான் என்று சொல்லுங்கள். பிறகு பார்வோன் மன்னன் உங்களை கோசேன் பகுதியில் வாழ அனுமதிப்பார். எகிப்தியர்கள் மேய்ப்பர்களை விரும்ப மாட்டார்கள். எனவே நீங்கள் கோசேனில் இருப்பதுதான் நல்லது” என்றார்.

யோசேப்பு கூறியதைப் போலவே நடந்தது. யோசேப்பின் தந்தையும் அவரது சகோதரர்களும் வந்திருப்பதை பார்வோன் மன்னன் கேள்விப்பட்டான். ஆவலோடு அவர்களை வந்து சந்தித்து முதியவராய் இருந்த இஸ்ரவேலிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டான். பின்னர் “எகிப்து முழுவதிலுமுள்ள நிலங்களிலேயே மிகச் சிறந்த நிலத்தை நான் உங்களுக்குக் கொடுப்பேன்” என்று கோசேன் நிலப்பகுதியை அவர்களுக்குக் கொடுத்தான். இஸ்ரவேலின் குடும்பம் எகிப்தின் கோசேனில் குடியேறி வாழத் தொடங்கியது.

இஸ்ரவேலர் என்ற இனம் உருவாதல்

இஸ்ரவேல் என்று கடவுளால் பெயர் சூட்டப்பட்ட யாக்கோபு எகிப்துக்கு புலம்பெயர்ந்த சமயத்தில் யாக்கோபு, அவருடைய பிள்ளைகள், அவர்களின் மனைவியர், பேரப் பிள்ளைகள், வேலைக்காரர்கள் என நூற்றுக்கும் அதிகமாக இருந்தார்கள். இவர்கள் எல்லோரும் எகிப்தில் குடியேறினார்கள். இவர்கள் இஸ்ரவேலர் என்ற இனமாக எகிப்தியர்களால் அழைக்கப்பட்டார்கள். இஸ்ரவேல் எகிப்தில் 17 ஆண்டுகள் வாழ்ந்த பின்பு தனது 147 வயதில் மரித்தார்.

இஸ்ரவேல் மரித்ததும் யோசேப்பு மிகவும் துக்கப்பட்டார். இஸ்ரவேல் ஆளுநரின் தந்தை என்பதால் எகிப்தியர்கள் அவரது இறப்பை அரச துக்கமாக அனுசரித்தார்கள். யோசேப்பு தனது 11 சகோதரர்களுடன் இணைந்து தந்தைக்கு இறுதிச் சடங்குகள் செய்தான். தந்தை சொன்னபடியே அவரது உடலைக் கானானுக்குள் எடுத்துச் சென்று மக்பேலாவில் அடக்கம் செய்தனர். அப்போது பார்வோன் மன்னனின் படைப் பிரிவும் வந்ததது. கானான் நாட்டின் மக்கள் அனைவரும் திரண்டு வந்து இஸ்ரவேலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அடக்கம் முடிந்த பிறகு யோசேப்புடன் அனைவரும் எகிப்துக்குத் திரும்பினார்கள்.

யோசேப்பை அறியாத அரசன்

யோசேப்பு தொடர்ந்து எகிப்தில் தன் சகோதரர்களின் குடும்பத்தோடு வசித்துவந்தான். 110 வயதானபோது அவனும் மரணமடைந்தான். யோசேப்பின் மறைவுக்குப் பிறகு அவனது சகோதரர்களும் தங்கள் பழுத்த முதுமையில் மரித்தார்கள். ஆனால் அவர்களின் வாரிசுகள் பல குடும்பங்களாகப் பல்கிப் பெருகத் தொடங்கினார்கள். இஸ்ரவேலின் ஜனங்களின் எண்ணிக்கை ஆண்டுகள்தொறும் பெருகிக்கொண்டே இருந்தது. இஸ்ரவேலின் ஜனங்கள் வலிமையுடையோரானார்கள். எகிப்து நாடு இஸ்ரவேலரால் நிரம்பிற்று. அப்போது யோசேப்பை அறிந்திராத புதிய அரசன் எகிப்தை ஆட்சிசெய்துவந்தான்.

அந்த அரசன் தனது ஜனங்களை நோக்கி, “ இஸ்ரவேலின் ஜனங்களைப் பாருங்கள்! அவர்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள்! நம்மைக் காட்டிலும் அவர்கள் பலம் மிக்கவர்கள்! இஸ்ரவேலர் பலம் பொருந்தியவர்களாய் வளர்ந்துகொண்டிருப்பதைத் தடை செய்ய நாம் திட்டங்கள் வகுக்க வேண்டும். போர் ஏற்படுமானால், இஸ்ரவேலர் நமது பகைவரோடு சேர்ந்துகொள்வதுடன், நம்மைத் தோற்கடித்து, நம்மை ஆட்சிசெய்யக்கூடும். அதற்கு முன் அவர்களை அடிமையாக்குவதே நமக்குப் பாதுகாப்பு” என்றான்.

இஸ்ரவேல் மக்களின் அமைதியான வாழ்க்கையைச் சிதைக்கும் நோக்கத்துடன், அவர்களைக் கண்காணிக்க அவர்களுக்கு மத்தியில் எகிப்திய மேற்பார்வையாளர்களை அரசன் நியமித்தான். இஸ்ரவேலர் மெல்லத் தங்கள் சுதந்திரத்தை இழக்கும் முதல் புள்ளியாக அதுவே அமைந்தது.

SCROLL FOR NEXT