விவிலிய காலத்தில் நகரங்களின் பாதுகாப்பு என்பது கோட்டை மதில் சுவர்களை நம்பியே இருந்தது. வியாபாரிகள் மட்டுமே கோட்டை நகருக்குள் தங்கிச் செல்ல அனுமதிப்பட்டனர். மற்றவர்கள் மாலையில் கோட்டைக் கதவுகள் சாத்தப்படும் முன் வெளியேறிவிடவேண்டும். இதனால் அந்நிய நாட்டுப் பயணிகள், நாடோடிகள் ஆகியோர் தங்கிச் செல்லக் கோட்டைக்கு வெளியேதான் சத்திரம் அமைக்கப்பட்டது. கானான் நாட்டின் முக்கிய நகரமாக விளங்கிய எரிக்கோவின் பல அடுக்குப் பாதுகாப்பு நிர்வாகமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அந்நகரின் பிரம்மாண்ட மதில்கள், படையெடுப்பாளர்கள், கொள்ளைக்காரர்கள் ஆகியோரால் தகர்க்க முடியாதவையாக இருந்தன. கோட்டை மதில் சுவரில் காவல் புரியும் வீரர்களுக்கு வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
கடவுளே தலைவர்
அப்படிப்பட்ட எரிக்கோவை வீழ்த்தினால் கானான் கைக்குக்கிடைத்துவிடும் என்று இஸ்ரவேலர்கள் நம்பினார்கள். ஆனால் அத்தனை பெரிய கோட்டையை எப்படித் தகர்ப்பது? கடவுளே தங்களின் தலைவராக இருக்கும்போது இஸ்ரவேலர்கள் எரிக்கோவின் நெடிதுயர்ந்த மதில்களுக்கா அஞ்சுவார்கள். யோர்தான் நதியைக் கடந்து கானான் தேசத்திற்குள் கால் வைக்கத் தயாராகிவிட்ட இஸ்ரவேல் மக்களின் தற்போதைய தலைவர் யோசுவா இரண்டு உளவாளிகளை அழைத்தார். அவர்களிடம் “நீங்கள் போய் எரிக்கோ நகரத்தையும் அதன் நிலப்பரப்பையும் கண்டு அந்நகரின் பலவீனங்களை உளவறிந்து வாருங்கள்’ என்று ரகசியமாகக் கூறி அனுப்பினார்.
ஒரு பாலியல் தொழிலாளியின் பரிவு
உளவாளிகள் எரிக்கோவுக்கு வந்தபோது அவர்கள் இஸ்ரவேலர்கள் மீது பரிவுகொண்ட பாலியல் தொழிலாளி ராகாப் பற்றிக் கேள்விப்பட்டு கோட்டைச் சுவர் மீதிருந்த அவளது வீட்டுக்குச் செல்கிறார்கள். இரண்டு இஸ்ரவேலர்கள் உளவாளிகளாய் எரிக்கோவுக்குள் ஊடுருவியிருப்பதும் அவர்களுக்கு ராகாப் அடைக்கலம் தந்திருப்பதுமான செய்தி அரசனின் காதை காற்றின் வேகத்தில் எட்டிவிடுகிறது. கொதித்துப்போன அரசன், ராகாப் வீட்டுக்கு வீரர்களை அனுப்பி அவர்களைப் பிடித்துவர ஆணையிடுகிறான்.
ராகாப்போ உளவாளிகளைத் தன் வீட்டில் ஒளித்து வைத்திருக்கிறாள். ராகாப்பை மிரட்டி உருட்டி வீட்டைச் சோதனையிட்ட வீரர்கள் “ எங்கே அந்த உளவாளிகள்?” என்று கேட்டனர். அதற்கு ராகாப் “ அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்; அவர்கள் உளவாளிகளா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நகரின் வாசல் மூடுவதற்கு முன், அந்தி மயங்கும் வேளையில் அவர்கள் இங்கிருந்து போய்விட்டார்கள். நீங்கள் சீக்கிரமாய் போனால் அவர்களைப் பிடித்துவிடலாம்” என்றாள். அதை நம்பிய வீரர்கள் அவளது வீட்டை விட்டு வேகமாய் வெளியேறினார்கள்.
கடவுளின் மகிமை அறிவேன்
அரசனின் வீரர்கள் போன பின்னர் ஒளித்து வைத்திருந்த உளவாளிகளை அவசர அவசரமாக வெளியே அழைத்தாள். அவர்களிடம் “இந்த நாட்டைக் கடவுளாகிய யகோவா உங்களுக்குக் கொடுப்பார் என்று எனக்குத் தெரியும். ஏனென்றால் எகிப்திலிருந்து உங்களை மீட்டு அழைத்து வந்தது அவரே என்பதை அறிவேன். நீங்கள் செங்கடலைக் கடந்து வர அவர் அதை வறண்டு போகச் செய்தார். சீகோன், ஓக் ஆகிய இரு பெரும் அரசர்களை நீங்கள் வெற்றிகொள்ள அவர் உங்களுக்குத் துணைநின்றார்.
நீங்கள் இந்தக் கயிற்றைப் பிடித்துக்கொண்டு, இந்த ஜன்னல் வழியாகத் தப்பித்து செல்லுங்கள்” என ஒரு சிவப்பு நிறக் கயிற்றைக் கட்டினாள். அவர்கள் கயிற்றின் மூலம் கோட்டைச்சுவருக்கு வெளியே இறங்கித் தப்பிக்கத் தயாரானபோது, “ நான் இப்போது உங்களுக்குத் தயவு காட்டியிருக்கிறேன். அதைப்போலவே நீங்கள் எனக்குத் தயவு காட்டுமாறு மன்றாடுகிறேன். நீங்கள் எரிக்கோவை முற்றுகையிட்டு அதை அழிக்கும்போது என் பெற்றோரையும் சகோதர சகோதரிகளையும் கொன்றுவிடாமல் அவர்கள் காப்பாற்ற வேண்டும். இதை எனக்கு உறுதிமொழியாகத் தாருங்கள்” என்று கேட்டாள்.
சிவப்பு நிறக் கயிறு
எரிக்கோவைப் பற்றி எடுத்துரைத்ததுடன் தங்கள் உயிரையும் காப்பாற்றிய ராகாப்புக்கு அவர்களது குடும்பத்தைக் காப்பதாக வாக்களித்துத் திரும்புகிறார்கள். அப்போது அவர்கள் “ நாங்கள் இந்தக் கோட்டையை முற்றுகையிடும்போது இந்தச் சிவப்புக் கயிற்றை எடுத்து உன் வீட்டின் ஜன்னலில் கட்டித் தொங்கவிடு, உன்னுடைய உற்றார், உறவினர் அனைவரையும் உன் வீட்டுக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள். உன் ஜன்னலில் தொங்கிக் கொண்டிருக்கும் சிவப்பு நிறக் கயிற்றை அடையாளமாய்க் கொண்டு உன் வீட்டிலுள்ள யாரையும் நாங்கள் கொல்ல மாட்டோம்” என்றார்கள்.
பின்பு அவர்கள் யோர்தானின் மறுகரையில் அகாசியாவில் முகாமிட்டிருந்த தங்கள் மக்கள் திரள் நோக்கிச் சென்றனர். யோசுவாவிடம் ராகாப் காட்டிய பரிவுவையும் தப்பித்து வந்த நிகழ்வையும் எடுத்துக் கூறியதோடு எரிக்கோவின் பலவீனங்களையும் எடுத்துரைத்தார்கள்.
ஆனால் கடவுளுக்கு எந்தப் போர்த் தந்திரங்களும் தேவைப்படவில்லை. அவர் யோசுவை அழைத்தார். எரிக்கோவை கைப்பற்றும் உத்தியை உரைத்தார்.
(பைபிள் கதைகள் தொடரும்)