திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தில் காவிரியின் கிளை நதியான அரசலாற்றின் கரையில் அமைந்துள்ள செழிப்பான ஊர் இரவாஞ்சேரி. ஆலயங்கள் நிறைந்த தேதியூர், மணவாள நல்லுார், விஷ்ணுபுரம், நாலாங்கட்டளை, திருவீழிமிழலை ஆகியவை அக்கம்பக்கத்தில் உள்ளவை. ஊரின் கிழக்குப் பகுதியில் ஆலவடி சாகிபு தர்கா அமைந்திருக் கிறது. அவருடைய இயற்பெயர் ஷைகு சையிது அப்துல் காதிர். தர்காவுக்கு அருகில் ஒரு குளம் உள்ளது. அதன் பெயர் கோயில் கேணி. வெற்றிலைக் கொடிக்கால் விவசாயம் செய்யும் கிராமமாக இருந்ததால் பல குளங்களையும் வாய்க்கால்களையும் பார்க்கலாம்.
ஊரின் தெற்கில் புன்செய் நிலங்கள். கோயிலான் கரை, காணியான் கரை, பிச்சையான் கரை, அனந்தன் நான்கு துண்டு என்று அவை கூறப்படுகின்றன. செல்வாக்குடன் ஒரு காலத்தில் வாழ்ந்த பிரமுகர்களின் பெயராக அவை இருக்கும் என்று கூறப்படுகிறது.
அவ்வித சூழ்நிலையில் வெளியூரிலிருந்து வந்த ஷைகு அப்துல் காதிர் இரவாஞ்சேரியில் ஆன்மிகத் திருப்பணியில் ஈடுபட்டார். அவர் எந்த நுாற்றாண்டில் இங்கு வந்தார் என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. எனினும், குறைந்தபட்சம் இருநுாறு ஆண்டுகளுக்கு முன்பே அவர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆலவடி சாகிபு நிகழ்த்திய அற்புதங்கள்
தர்கா அமைந்துள்ள இடத்தில் முன்பு ஒரு ஆலமரம் இருந்திருக்கிறது. அதைச் சுற்றிலும் உள்ள கோயில் கேணிக்கரை புன்செய் விவசாய நிலமாக இருந்ததாம். வெற்றிலைக் கொடிக்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த இரவாஞ்சேரி இராவுத்தர்கள் ஆலமரத்தடிப் பக்கம் தோண்டினார்கள். அப்போது ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்ததாம். அவர்கள் நன்கு கவனித்துப் பார்த்தபோது இறைநேசர் ஒருவரின் உடல் காணப்பட்டது என்றும், முறைப்படி அந்த நல்லுடலை அடக்கம் செய்து தர்கா எழுப்பப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.
ஆலவடி சாகிபு நிகழ்த்திய பல அற்புதங்களை உள்ளூர் அன்பர்கள் விவரிக்கின்றனர். குறைபாடுகளாலும் நோய் நொடிகளாலும் பாதிக்கப்பட்டவர்கள் பரிகாரம் நாடி இன்றும் தர்காவுக்கு வருகின்றனர். வெள்ளிக்கிழமை இரவுகளில் பல சமய அன்பர்களும் வந்து மகான் ஆலவடி சாகிபின் நல்லாசியைப் பெற்றுச் செல்கின்றனர்.
பழைய தர்கா நிலப்பரப்பை விரிவுபடுத்தி ஐந்து நேரத் தொழுகை வசதியுடைய பள்ளிவாசலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு அடுத்த கட்டமாக, ஆலவடி சாகிபு தர்கா கோயில் கேணிவரை நீட்டிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. ஆலவடி சாகிபு ஷைகு சையிது அப்துல் காதிர் அவர்களின் நினைவு விழா ஆண்டுதோறும் துல்ஹஜ் மாதம் பிறை பதினேழில் கொண்டாடப்படுகிறது.
இரவாஞ்சேரியில் இறைநேச செல்வர்களான ரஹ்மத்துல்லாஹ் சாகிபு, சல்லல்லாஹ் பாவா ஆகியோரும் அடக்கமடைந்த நினைவிடங்களும் உள்ளன.