ஆன்மிகம்

பைபிள் கதைகள் 51: இஸ்ரவேலின் முதல் அரசன்!

அனிதா அசிசி

இஸ்ரவேலர்களுக்கு ஆசாரியராகவும் நியாயாதிபதியாகவும் இருந்த சாமுவேல் மிகுந்த முதுமையில் இருந்தார். அவரது மகன்கள் நீதிமன்றங்களை ஊழல் மன்றங்களாக மாற்றியிருந்தனர். இதனால் கோபம் கொண்ட மக்கள், தங்கள் தலைவர்களிடம் முறையிட்டனர். எனவே இஸ்ரவேல் கோத்திரங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றுகூடி சாமுவேலைச் சென்று சந்தித்து, “இனி எங்களுக்கு அரசனே தேவை. நியாயாதிபதிகள் வேண்டாம்” என்றார்கள். சாமுவேல் இதுகுறித்து ஆசாரிப்புக் கூடாரம் சென்று கடவுளிடம் வேண்டினார்.

கடவுள் மிகுந்த வருத்தம் கொண்டார். “ எனது மக்களுக்கு நானே அரசனாக இருந்துவருவதை மறந்துவிட்டார்களே... மனிதர்கள் மத்தியிலிருந்து தோன்றும் ஒரு அரசன் எப்படி நடந்துகொள்வான் என்பது பற்றி அவர்களுக்கு எடுத்துக் கூறு” என்றார். சாமுவேலும் கடவுளின் வார்த்தைகளின்படி

அரசனும் அரசாட்சியும் கேடுகளையே கொண்டுவருவார்கள் என்பதை விரிவாக எடுத்துக் கூறியும் அதை அவர்கள் ஏற்க மறுத்தனர்.

“எங்களுக்கு அரசன் கிடைத்துவிட்டால் நாங்கள் மற்ற நாடுகளைப் போன்று இருப்போம், மேலும் மேலும் பலம்பெற்றுவரும் பெலிஸ்தர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை அழிக்க போர்தொடுத்து வரலாம். எங்களுக்கென்று ஓர் அரசன் இருந்தால் எங்களோடு வந்து எங்களுக்காகப் போர் செய்வான்” என்று பிடிவாதம் காட்டினார்கள். எனவே சாமுவேல் மீண்டும் கடவுளிடம் சென்றார். அப்போது கடவுள், “ அவர்கள் விருப்பப்படியே நான் அவர்களுக்கு ஒரு அரசனைத் தருகிறேன். நாளை இதேநேரம் உன்னிடம் ஒருவனை அனுப்புவேன். அவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். அவனை இஸ்ரவேல் மக்களின் அரசனாக நீ அபிஷேகம் செய்துவை” என்றார்.

தன் மக்களுக்கு ஓர் அரசனைக் கடவுள் கொடுக்கத் தீர்மானித்ததை எண்ணி நிம்மதி அடைந்தார் சாமுவேல். எனவே நாளை வரும்படி மூப்பர்களையும் தலைவர்களையும் அனுப்பிவைத்தார்.

கழுதையைத் தேடி

இஸ்ரவேலின் 12 கோத்திரங்களில் ஒன்று யென்மீன். அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த செல்வந்தர் கீஸ். கடவுளாகிய பரலோகத் தந்தையின் மீது பற்றும் விசுவாசமும் கொண்டவர். அவரது பாசத்துக்குரிய மகன் சவுல். இஸ்ரவேலர்களில் மிகவும் உயரமானவர்; எளிய ஆனால் அழகிய தோற்றம் கொண்டவர். நல்ல பலசாலி. தந்தையின் வார்த்தைகளைத் தட்டாமல் அவரது சொற்படி நடந்துவந்தார். செல்வந்தர் எனினும் எளிமையாக வாழ்ந்தார். அப்படிப்பட்ட சவுல், தனது வாழ்க்கையில் இப்படியொரு திருப்புமுனை ஏற்படும் என்று அவர் நினைத்திருக்கவே மாட்டார். ஒரு நாள் கீஸின் கழுதைகள் தொலைந்துபோய்விட்டன.

எனவே கீஸ் தனது மகன் சவுலை அழைத்து, “என் அன்பு மகனே. ஒரு வேலைக்காரனை உதவிக்குக் கூட்டிக்கொள். என் கழுதைகளைத் தேடிக் கொண்டு வா. நீ கழுதைகளைக் கண்டுபிடித்து வந்துவிடுவாய் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார். தந்தையைப் பணிந்து கழுதைகளைத் தேடிப் புறப்பட்ட சவுல், தனது வேலைக்கார நண்பனுடன் பல்வேறு நகரங்களில் தேடி அலைந்தான். ஆனால் கழுதைகள் கிடைக்கவேயில்லை. ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை; வேறு கழுதைகளை வாங்கித் தந்தைக்குக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கவில்லை.

ஏனெனில் கீஸ் தனது கழுதைகளை எவ்வளவு நேசித்தார் என்று சவுலுக்குத் தெரிந்திருந்தது. இன்னும் பல நகரங்களுக்கும் சமவெளிகளுக்கும் அலைந்தேனும் தந்தையின் கழுதைகளைக் கண்டுபிடித்து, அவற்றை அவர் முன் நிறுத்தி மகிழ்ச்சிப்படுத்த நினைத்தான். ஆனால் தந்தையின் பாசம் பற்றியும் சவுலுக்குத் தெரியும். மூன்று நாட்களுக்கு முன் வீட்டை விட்டுக் கிளம்பிய தன் மகனையும் பணியாளையும் நினைத்து இந்நேரம் கவலைப்பட ஆரம்பித்திருப்பார் என்று கலங்க ஆரம்பித்தார்.

தனது வேலைக்கார நண்பனை நோக்கி, “நாம் திரும்பிப் போகலாம். என் தந்தை இப்பொழுது கழுதைகளை விட்டு நம்மைப் பற்றிக் கவலைப்பட ஆரம்பித்திருப்பார்” என்றார். அதற்கு வேலைக்காரன், “நாம் இப்போது வந்துசேர்ந்திருக்கும் இந்த சூப் நகரத்தில்தான்

நமது மக்களின் நியாயாதிபதியும் தலைமை ஆசாரியனுமாகிய சாமுவேல் இருக்கிறார். அவரிடம் சென்று, நாம் அடுத்துச் சென்று தேட வேண்டிய நகரம் எது எனக் கேட்டுவரலாம்” என்றான். அதை ஏற்றுக்கொண்ட சவுல், தலைமை ஆசாரியரின் வீட்டைத் தேடி அடைந்தனர். அங்கே இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களும் மக்களும் திரளாகக் கூடியிருந்தனர்.

அபிஷேகம் செய்துவைத்த சாமுவேல்

அப்போது அங்கே வந்து சேர்ந்த சவுலைக் கண்ட சாமுவேல் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். “மூன்று நாட்களுக்கு முன் தொலைந்துபோன கழுதைகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. இனி அவற்றைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். இஸ்ரவேலர்கள் அனைவருக்கும் அரசனாக்கும்படி கடவுள் உன்னைக் கண்டுபிடித்துக்கொடுத்திருக்கிறார்.” என்றபடி தலைவர்கள் மற்றும் மக்களின் முன்னிலையில் சவுலின் தலையில் அபிஷேக எண்ணெய் ஊற்றி அவரை அரசனாக அறிவித்தார் சாமுவேல்.

இஸ்ரவேல் மக்களுக்கு அரசனாக இருக்க தனக்குத் தகுதி இல்லை எனச் சவுல் நினைத்தார். “இஸ்ரவேலிலேயே மிகச் சிறிய கோத்திரம் யென்மீன். அதில் எனது குடும்பமோ மிகவும் சிறியது. அப்படியிருக்கையில் நான்தான் அரசன் என்று எப்படிச் சொல்கிறீர்கள் ஐயா?” என்று சாமுவேலிடம் கேட்டார் சவுல். தன்னை ஒரு தலைவனாகக் காட்டிக் கொள்ள விரும்பாத சவுலின் பணிவு, கடவுளுக்குப் பிடித்திருந்தது. அதனால்தான் அவரை அரசனாகத் தேர்ந்தெடுந்தார். சவுலை அரசனாகத் தேர்ந்தெடுத்ததை இஸ்ரவேல் மக்கள் மகிழ்ந்து கொண்டாடினார்கள். ‘இஸ்ரவேலின் ராஜா நீடூழி வாழ்க’ என்று கோஷமிட்டுத் தங்கள் ஆதரவைக் காட்டினார்கள்.

(பைபிள் கதைகள் தொடரும்

SCROLL FOR NEXT