ஆன்மிகம்

கன்னி - 2014 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

வேங்கடசுப்பிரமணியன்

காத்திருந்து காய் நகர்த்துவதில் வல்லவர்களே! உங்களுடைய ராசிக்கு 5-ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் போது இந்த ஆண்டு பிறப்பதால் சுறுசுறுப்பாவீர்கள். விலகிச் சென்ற உறவினர், நண்பர்களெல்லாம் விரும்பி வந்து பேசுவார்கள். தாமரை இலையும் தண்ணீரும் போல் குடும்ப வாழ்வில் ஒதுங்கியிருந்தீர்களே! இந்தாண்டில் ஒரு பிடிப்பு வரும். குடும்பத்தின் மீது ஈர்ப்பும், பாசமும் வரும். கணவன் - மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் நீங்கும்.

உங்களுடைய ராசிநாதனான புதனும் வலுவடைந்திருக்கும்போது இந்த ஆண்டு பிறப்பதால் உங்களுடைய உழைப்பிற்கு இனிமேல் அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களும் உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு தருவார்கள். வீண் செலவுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும். திட்டமிட்ட பல காரியங்களையும் இந்த வருடத்தில் செய்வீர்கள். நல்லவர்கள் என்று பலரையும் நினைத்து ஏமாந்தீர்கள், சிலரிடம் பணம் கொடுத்து ஏமாந்தீர்கள். சிலரை நம்பி கால, நேரத்தை இழந்தீர்கள். இனி மற்றவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் தன் கையே தனக்குதவி என்ற முடிவுக்கு வருவீர்கள்.

இந்த வருடத்தில் உங்களின் கடின உழைப்பிற்கு தகுந்த பலன் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்த வறட்டு கவுரவம் நீங்கும். பிள்ளைகளுக்காக குடும்பத்தில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். அவர்களின் வருங்காலத்தை மனதில் வைத்துக் கொண்டு சேமிக்கவும் தொடங்குவீர்கள். ஜூன் 17-ம் தேதி வரை குரு சாதகமாக இல்லாததால் செலவினங்களை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். கடன் அதிகமாகிக் கொண்டே போகிறது என்று அவ்வப்போது கவலைப்படுவீர்கள். ஜூன் 18-ம் தேதி முதல் சாதகமான சூழ்நிலை உருவாகும்.

பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். இந்த வருடம் முழுக்க ஏழரைச் சனியில் பாதச் சனி தொடர்வதால் பித்தப் பையில் கல் வர வாய்ப்பிருக்கிறது. காலில் அடிபடும். சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகள், விபத்துகள் வந்து போகும். நெருங்கிய உறவினர், நண்பர்களாக இருந்தாலும் அளவாக பழகுவது நல்லது. செப்டம்பர் மாதம் முதல் திடீர் பணவரவு உண்டு. பெரிய பதவியும் வரும்.

வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வியாபாரத்தில் முற்பகுதி கொஞ்சம் நஷ்டத்தை தரக்கூடியதாக இருக்கும். வருடத்தின் பிற்பகுதியில் லாபம் அதிகரிக்கும். கமிஷன், புரோக்கரேஜ் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் சிறுசிறு அவமானங்களை சந்திக்க வேண்டி வரும். வயதில் குறைந்தவர்களிடமெல்லாம் வளைந்து கொடுத்துப் போக வேண்டியிருக்கும்.

வழிபாடு - பக்த ஆஞ்சநேயர்

மதிப்பெண் - ஜனவரி - ஜூன் - 55/100, ஜூலை - ஆகஸ்ட் - 70/100, நவம்பர் - டிசம்பர் - 87/100

SCROLL FOR NEXT