பூரி என்றதும் நம் நினைவுக்கு வருவது ஜகந்நாதர் கோவிலும் ரத யாத்திரையும்தான். அங்கிருந்து சற்று தொலைவில் (20 கி.மீ.) இன்னொரு பழைமையும் பெருமையும் வாய்ந்த கோவில் உள்ளது. அதுதான் சாக்ஷி கோபாலன் கோவில். இங்கிருக்கும் சாக்ஷி கோபாலன் விக்கிரகம் 5000 வருடங்களுக்கு முந்தையது எனச் சொல்லப்படுகிறது. கிருஷ்ணரின் கொள்ளுப் பேரனான வஜ்நபி என்பவன் விரஜ மண்டலத்தில் மதன கோபால், சாக்ஷி கோபாலன் என்ற இரண்டு சிலைகளை நிறுவியதாக ஐதீகம்.
கோட்டையிலிருந்து வந்த விக்கிரகம்
ஒரியாவின் கஜபதி வம்சத்தைச் சேர்ந்த அரசனான புருஷோத்தம தேவ் என்பவன் (1467-1495) வித்யாநகரத்திலிருந்து விக்கிரகத்தைக் கொண்டுவந்து கட்டக்கிலுள்ள தன் கோட்டையில் ஸ்தாபித்தான். சைதன்யர் பூரி செல்லும் வழியில் இந்த விக்கிரகத்தை வழிபட்டார். அந்நியப் படையெடுப்பின்போது தாக்குதலிலிருந்து காப்பாற்ற, ஒவ்வொரு இடமாக மாற்றப்பட்டு கடைசியாக இப்போது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர் நிறைய நன்கொடைகள் பெற்று 1860-ல் 60 அடி உயரத்திற்கு ஒரு கோயில் கட்டினார். முதலில் கிருஷ்ணரின் சிலை மட்டும் இருந்தது. பின்னர் ராட்டையின் சிலையும் வைக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
இந்தக் கோயிலின் வெளியியே கொடிக் கம்பம் உள்ளது. இதுவும் கலிங்கத்துப் பாணியில் கட்டப்பட்டது. இந்த கோயிலை பூரி கோயிலின் சிறிய பிரதி என்றே சொல்லலாம். உள்ளே செல்கிறோம். உள்ளே கோபாலனின் திவ்ய தரிசனம். கையில் புல்லாங்குழலுடன். இடப் பக்கத்தில் ராதை. கிருஷ்ணனின் உயரம் 5 அடி. ராதை கிட்டத்தட்ட 4 அடி உயரம். நிவேதனமாக அரிசிக்குப் பதிலாக கோதுமை அளிக்கப்படுகிறது. பூரிக்குப் புனிதப் பயணம் வருபவர்கள் இங்கு வந்தால்தான் அது முழுமையடையும் என்று நம்பப்படுகிறது.
கோபாலனே சாட்சி
இந்த ஊருக்கு இந்தப் பெயர் வந்தது எப்படி? வித்யாநகரம் என்ற ஊரைச் சேர்ந்த இரு அந்தணர்கள் தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டனர். அதில் ஒருவர் வயோதிகர், செல்வந்தர். மற்றவரோ இளைஞர், ஏழை. சிறியவர் மூத்தவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்துவந்தார். காசி, கயா, பிரயாகை, மதுரா போன்ற தலங்களைத் தரிசித்துவிட்டுக் கடைசியாக பிருந்தாவனத்திற்கு வந்தனர். அங்கே குடிகொண்டிருந்த கோபாலனின் அழகு இவர்களை அங்கே தங்கச் செய்தது. இதற்கிடையில் திடீரென மூத்தவருக்கு நோய் பீடித்தது. இளையவர் மெய் வருத்தம் பாராமல் கண் விழித்து சிஷ்ருஷைகள் செய்து அவரைப் பிழைக்கவைத்தார். அதனால் மனம் மகிழ்ச்சியுற்ற பெரியவர் தன்னுடைய மகளை அவனுக்குத் திருமணம் செய்துதருவதாகக் கூறினார். அவனோ, தான் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்த்துச் செய்யவில்லை என்றும் அடியவர்களுக்குச் சேவை செய்வதே அந்த அனந்தனுக்குச் சேவை செய்வதற்கு ஒப்பாகும் என்று கூறினான். மேலும் தன்னுடைய ஏழ்மை அவருடைய சமூக உயர் அந்தஸ்தை நெருங்க விடாது என்றும் கருதினான். பணக்காரரோ தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. தன் வாக்கை நிறைவேற்றுவேன் என்றும், தன்னை யாரும் மாற்ற முடியாது என்றும் கோயிலுக்கு வந்து கேசவனுக்கு முன் சத்தியப் பிரமாணம் செய்தார்.
இருவரும் ஊர் திரும்பினார். முதியவர் நடந்தவற்றையும் தன்னுடைய வாக்குறுதியைப் பற்றியும் தன் குடும்பத்தினரிடம் கூறினார். ஆனால் அவருடைய குடும்பமோ அதற்கு கடுமையாக ஆட்சேபித்தது. பெண் கேட்டு வந்த இளைஞன் விரட்டியடிக்கப்பட்டான். அவன் பஞ்சாயத்தைக் கூட்டினான். குடும்பத்தின் நெருக்கடிக்கு உள்ளான முதியவர், தான் அப்படி எதுவும் சொன்னதாக நினைவில் இல்லை என்று சொல்லிவிட்டார். சாட்சி உண்டா என்று கேட்கப்பட்டது. கோபாலனே சாட்சி என்றான் அந்த வாலிபன். அவனை அழைத்து வா என்றனர் பஞ்சாயத்தார்.
அவன் நேராக கோபாலனின் கோயிலுக்குச் சென்று முறையிட்டான். “எனக்கு அவரின் மகளை மணப்பது முக்கியமல்ல. உன் முன் அவர் அளித்த வாக்கு பொய்யாகிவிடக் கூடாது என்பதுதான் முக்கியம். அதனால் நீ என்னுடன் சாட்சியாக வர வேண்டும்” என்றான். கோபாலன் பேசினான்: “ஒரு கடவுள் இடம் விட்டு இடம் வருவதாக இதுவரை நடந்ததில்லை. அது எப்படிச் சாத்தியம்?” பதிலுக்கு இவன், “கடவுள் பேசும்போது நடப்பதும் சாத்தியமாகும்” என்றான். கோபாலனும் ஒப்புக்கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனை. இவன் முன்னே செல்ல வேண்டும். பின்னால் கோபாலன் வருவார். எங்கும் அவன் திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால் அந்த இடத்திலேயே நின்றுவிடுவார். தான் வருவதற்கு அடையாளமாகத் தன் கால் கொலுசிலிருக்கும் மணியின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும் என்றருளினார்.
பிருந்தாவனத்திலிருந்து பல நாட்கள் நடந்தனர். கடைசியாக குறிப்பிட்ட கிராமத்தின் எல்லைக்கு வந்து விட்டனர். அங்கு ஓரு மணல் மேடு. அதில் கால் பதித்ததால் கொலுசில் மணல் புகுந்தது. சத்தமும் நின்றுவிட்டது. அதனால் சந்தேகத்துடன் வாலிபன் திரும்பிப் பார்த்தான். அங்கே புன்னகையுடன் பக்தவத்சலன் நின்றுகொண்டிருந்தான். ஒளி வீசும் சிலையாய் மாறினான். இதைக் கேள்விப்பட்ட கிராமத்தினர் அனைவரும் அங்கு ஓடோடி வந்து சியாமளனைத் தரிசித்தனர். பாமரனுக்காகப் பரமனே சாட்சியாய் நின்ற அதிசயத்தை மக்கள் கண்டனர். முதியவர் இறைவனின் காலில் விழுந்து அந்த இடத்திலேயே தன் மகளை இளைஞனுக்குக் கன்னிகாதானம் செய்துவைத்தார். பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்கி அங்கேயே கோயில் கொண்டார். அங்குள்ள மூர்த்தி சாக்ஷி கோபால் என்று பெயர் பெற்றார்.