ஆன்மிகம்

எக்காலத்துக்கும் பொருந்தும் திருமுறைகளின் வெற்றி!

வா.ரவிக்குமார்

நாட்டியக் கலையின் நாயகனாக நடராஜர் போற்றப்பட்டாலும், நமது பாரம்பரியமான தேவாரத் திருமுறைகளை முழுக்க முழுக்க நாட்டியத்தில் பிரதானப்படுத்தி ஆடுவது என்பது அரிதான நிகழ்வாகவே கருதப்படுகிறது.

அலாரிப்பு, சப்தம், வர்ணம், பதம், ஜாவளி, தில்லானா ஆகிய முழு நாட்டிய மார்க்கங்களையுமே திருமுறைகளின் துணைகொண்டு தனது மாணவிகளுடன் நடத்திவருகிறார் திருவீழிமிழலை கனகா. சுமார் 500-க்கும் மேற்பட்ட மேடைகளில் இவரின் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

“கலையையும் கடவுளையும் பிரிக்க முடியாது. ‘அவன் அருளால் அவன் தாள் பற்றி’ என்பதுபோல், பரதம் என்னும் கலையை எனக்குத் தந்த கடவுளின் பெருமைகளை அந்தக் கலையின் மூலமாகவே உலகிற்குப் பரப்புவதைக் கலைக்கும் கடவுளுக்கும் செய்யும் தொண்டாகவே நினைக்கிறேன்.

கலையின் மூலம் பக்தியைப் பரப்பும் வண்ணம், சைவ சமயக் குரவர்கள் நால்வரால் இந்த உலகுக்குக் கிடைத்திட்ட தேவாரம் மற்றும் திருவாசகம் ஆகிய தமிழ் மறைகளை நடன வடிவத்திலும் இசை வடிவத்திலும் பல மேடைகளில் அரங்கேற்றிவருகிறேன்.

சங்கர நாட்டியாலயா எனும் எனது நடனப் பள்ளியின் மூலம் பல குழந்தைகளுக்கு திருமுறை நாட்டியத்தை பயிற்றுவித்தும் வருகிறேன்” என்னும் கனகா, பள்ளிகள், சமூக சேவை அமைப்புகள், முதியோர் இல்லங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும்கூட தேவார வகுப்புக்களை நடத்திவருகிறார்.

பரதநாட்டியத்துக்கு திருவாசகத்தின் போற்றித் திரு அகவலை புஷ்பாஞ்சலியாகப் பயன்படுத்திக் கொள்கிறார். வேயுறு தோளி பங்கன் பாடலையும் திருமந்திரத்தின் ஒரு பாடலையும் வர்ணத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார். தில்லானாவிற்கான சாகித்யமாக சேந்தனாரின் (9-ம் திருமுறை) திருப்பல்லாண்டின் பாடலைப் பயன்படுத்திக்கொள்கிறார்.

“பக்தி, உறுப்பு தானம், காதல், பாசம் போன்ற பல உணர்ச்சிகளும் தேவாரப் பாடல்களில் இருக்கின்றன. இதில் வெளிப்படும் உணர்வுகள், சமூகத்தில் இன்றைக்கும் தேவைப்படும் நல்ல அம்சங்கள்தான். இந்த நல்ல நெறிகள் இறை அருளாளர்களின் வாழ்வில் எப்படியெல்லாம் வெளிப்பட்டிருக்கின்றன, அதற்கு இறைவனிடமிருந்து எப்படியெல்லாம் அருள் மழை பொழிந்திருக்கிறது என்பதை நான் விளக்கிக் கூறும்போது, பள்ளிக் குழந்தைகள் முதல் பெருநிறுவனங்களில் பணியிலிருக்கும் இளந்தலைமுறையினர் வரை அதை நடைமுறை வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கின்றனர்.

அதோடு திருமுறைகளில் கூறப்பட்டிருக்கும் நல்ல விஷயங்களை ஏற்றுக் கொள்ளவும் செய்கின்றனர். இதில்தான் எக்காலத்துக்கும் பொருந்தும் திருமுறைகளின் வெற்றி அடங்கியிருக்கின்றது. இதை வெளிப்படுத்தும் நான் வெறும் கருவிதான்” என்கிறார் தன்னடக்கத்துடன் கனகா.

SCROLL FOR NEXT