ஆகஸ்ட் 5: ஆடிப்பூரம்
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார் எனப்படும் விஷ்ணுசித்தர், பாண்டிய நாட்டில் ‘அன்ன வயல் புதுவை’ என்று சிறப்பித்துக் கூறப்படும் திருவில்லிபுத்தூரில் அவதரித்தார். வடபெருங்கோயிலுடையானுக்கு புஷ்பக் கைங்கர்யம் செய்யும் பொருட்டு, அழகிய நந்தவனம் அமைத்து நாள்தோறும் மணமுள்ள மலர்களை மாலைகளாக்கித் திருமாலவனுக்குச் சூட்டி மகிழ்ந்தார். அதேசமயம், கண்ணன் மீது பக்தி கொண்டு பாசுரங்களை இயற்றிப் பாமாலை ஆக்கினார்.
ஒரு நாள் நந்தவனத்தில், திருத்துழாய் செடியின் கீழ், ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார். திருமகளின் அவதாரம் என்றே கருதி, அக்குழந்தைக்கு கோதை என்று பெயரிட்டார். கோதை என்றால் மாலை என்று பொருள். இவள் என்னை ஆண்டாள் எனச் சொல்லி கோதைக்கு ஆண்டாள் என இன்னொரு பெயர் சூட்டினார்.
கிருஷ்ண பக்தியில் மூழ்கித் திளைத்த பெரியாழ்வாரிடம் வளர்ந்த ஆண்டாள், சிறு வயதிலேயே ஞானமும் பக்தியும் வைராக்கியமும் கைவரப் பெற்றவளானாள். கண்ணன் பால் பிரேமை கொண்டு, திருவில்லிபுத்தூரையே பிருந்தாவனம் என்றும் தன்னை ஆய்ச்சிகளில் ஒருத்தியாகவுமே கருதத் தொடங்கினாள். பெரியாழ்வார் வடபத்ரசாயி பெருமாளுக்குத் தொடுத்த பூமாலையை, முதலில் தான் சூடிக் கண்ணாடியில் அழகு பார்த்தாள். இதை ஒரு நாள் கண்ணுற்ற பெரியாழ்வார் மனம் கலங்கி, ஆண்டாளைக் கடிந்து, வேறொரு மாலையை பெருமாளுக்குச் சூட்டினார். இறைவன் அவர் கனவில் தோன்றி, ஆண்டாள் சூடிக் களைந்த மாலையே தனக்கு உவப்பானது என்று கூறினார். அன்றிலிருந்து “சூடிக் கொடுத்த நாச்சியார்” என அழைக்கப்பட்ட ஆண்டாள், “திருப்பாவை” மற்றும் “நாச்சியார் திருமொழி” என்னும் இரண்டு திவ்ய பிரபந்தங்களை இயற்றிப் பாடினார்.
தனக்கு ஏற்ற மணமகன் கண்ணன் தான் என்று உறுதியுடன் இருந்த கோதையின் வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் பெருமான் திருவரங்கத்துக்கு ஆண்டாளை அழைத்து வரச் செய்தார். ஒரு நன்னாளில் புது மணப்பெண்ணாகத் தன்னை அலங்கரித்துக்கொண்ட ஆண்டாள், திருவரங்கத்துப் பெரிய பெருமாளின் சந்நிதியில் அவருடன் இரண்டறக் கலந்தாள்.
“ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல் வளர்த்தேன், செங்கண்மால் தான் கொண்டு போனான்”
என்று பெரியாழ்வார் திருமொழியில் சொன்னதைப் போல ஆண்டாள், அரங்கன் திருவடிகளைச் சென்றடைந்தாள். ஆண்டாள் நமக்கு கொடையாக அருளிச் செய்த திருப்பாவை (30 பாசுரங்கள்) மற்றும் நாச்சியார் திருமொழி (143 பாசுரங்கள்) இரண்டும் ‘வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்’ என்று போற்றப்படும் பெருமை உடையது.
இவ்வுலகில் அனைத்து ஜீவாத்மாக்களும், பரமாத்மாவான மந்நாராயணனின் திருவடிகளைப் பற்றி உய்ய வேண்டும் என்பதற்காகவே ஆண்டாள் இப்பூவுலகில் அவதரித்து, பூமாலையும் பாமாலையும் சூட்டினாள்.
நாமும் திருப்பாவை, நாச்சியார் திருமொழி இரண்டையும் நாளும் ஓதி நற்பேறு பெறுவோம்.