இறைமை என்பது கரை காண முடியாத கடல். முடிவில்லாத பாடல்.
இறைத் தவம் என்பது காலத்தை மறந்து அல்லது காலத்தைக் கடந்து காத்திருப்பது அல்ல; காலங்கள் அற்ற காலத்தில் உலாவுவது.
அத்தகைய இறைமையை இடைவெளியில்லாத, இறுகத் தழுவிய நெருக்கத்தில் புரிந்துகொள்ள வேண்டுமானால், பாலோடு தேனாக, காற்றொடு மணமாக ஒன்றுகலக்க வேண்டுமானால், இயற் கையைப் புரிந்துகொள்வதும் இயற்கையோடு கரைந்து கலந்துபோவதும் அவசியம்.
ஏனென்றால், இறையும் இயற்கையும் வேறு வேறு அல்ல. இரண்டுமே ஒன்றுதான். ஒன்றோடு ஒன்றாகவும், ஒன்றுக்குள் ஒன்றாகவும் இருப்பவை அவை.
இறை என்பது இயற்கையின் தாய். இயற்கை என்பது இறையின் வடிவங்களுள் ஒன்று.
கடலின் அலைகளை இறையின் பாடலாகவும், எல்லையில்லாத பெருவானத்தை இறையின் மனதாகவும், எரிதழலை இறையின் குணமாகவும் பார்ப்பது, என்னைப் பொறுத்தவரை கவித்துவச் சிந்தனை அல்ல. இறையை நேருக்கு நேராகச் சந்திக்கும் பாதையின் முதல் தடம் அது.
இறையை மறந்துவிட்டு இயற்கையை சிலாகிப்பதும், இயற்கையை தவிர்த்துவிட்டு இறையைத் துதிப்பதும், முற்றுபெறாத பயணமாகவே இருக்கக்கூடும்.
இதை வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இயற்கையை நேசிக்கும் மனம், இறைமை குடியிருக்கும் கோயில். இறைமையில் தோய்ந்து கிடக்கும் மனம், இயற்கையின் வழிபாட்டு மன்றம்.
தமிழ்நாட்டு மரபில் தழைத்த சைவமும் வைணவமும், இறையும் இயற்கையும் வேறு வேறல்ல என்கிற மெய்யியல் புரிதலில் நின்று இரண்டையும் ஒன்றெனக்கொண்டே வணங்கினார்கள்; வாழ்த்தினார்கள்.
மண்ணில் திண்மை வைத்தோன்
இறைவனையும் இயற்கையையும் ஒன்றாகக் கலந்து, அணுவைப்போல நுட்பமாகவும், அண்டத்தைப் போல விரிவாகவும் வரித்துக் கொண்டவர் வாதவூரர் மாணிக்கவாசகர்.
‘மதியில் தண்மை வைத்தோன் திண்டிறல்
தீயில் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட
மண்ணில் திண்மை வைத்தோன் என்றென்று
எனைப்பல கோடி எனைப்பல பிறவும்
அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன்…’
என்று அவர் திருவண்டப் பகுதியில் இயற்கையின் படைப்பில் இறைவனின் ஆட்சியை விவரிக்கிறார்.
நிலவில் குளிர்ச்சியை வைத்தவன், பேராற்றல் மிக்க கதிரவ நெருப்பில் வெப்பத்தை உண்டாக்கியவன், இவற்றை எக்காலத்திலும் மெய்யாக நிற்கும் விண்ணில் கலந்திருக்கச் செய்தவன், காற்றுக்கு வேகத்தையும், நிழல் விளங்கும் நீரில் இனிய சுவையையும் வைத்தவன் இறைவன். அவன் படைத்த எண்ணற்ற படைப்புகளையும் தன்மீது தாங்கும் நிலத்திற்கு வல்லமையைப் படைத்த இறைவன், அதில் மீண்டும் மீண்டும் பிறந்தழியும் பலகோடி உயிர்களையும் அதனதன் இடத்தில் பொருத்தமாக அடைத்தான் என்பது இந்தப் பாடலின் பொருள்.
திருவண்டப் பகுதி என்பதே இறைவனின் படைப்பில் மேன்மை பொருந்திய ஐம்பெருங் கூறுகளான பஞ்சபூதங்களை வியந்து போற்றுவதுதான். பஞ்சபூதங்கள் எனப்படும் வெளி, காற்று, வெப்பம், நீர், நிலம் ஆகிய அந்த ஐவர் இல்லாமல், இறை எதையும் படைப்பதில்லை என்கிற கருத்தில் மாணிக்கவாசகரும் திருமூலரும் அழுந்த நின்றவர்கள் ஆவர்.
பொய்கையாழ்வாரின் புளகாங்கிதம்
அதேபோல, பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பரந்தாமனை நாளும் துதிக்கும் வைணவ மறையோ, ‘நீரின்றி அமையாது உலகு’ என்பதை பல இடங்களில் அழியாத எழுத்துக்களில் சொல்லிச் செல்கிறது.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் முதல் திருவந்தாதியில்,
‘வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொன் மாலை
இடராழி நீங்குகவே என்று’
பொய்கையாழ்வார் புளகாங்கிதம் அடைகிறார்.
இந்த பூமியே அகல் விளக்காகவும், அதில் சூழ்ந்துள்ள கடல் நீரே நெய்யாகவும், எழுகின்ற கதிரவனே சுடராகவும் இருக்க, எம்பெருமானின் திருவடிகளில் இப்பாமாலையைச் சூட்டுகிறேன் என்று, இயற்கையின் மீதான கற்பனைச் சிகரத்தில் ஏறி நிற்கிறார் பொய்கையாழ்வார்.
உலகமே குடிநீர்ப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் இக்காலத்தில், நீரைப் போற்றும் பிரபந்தப் பாடல்கள் ஒவ்வொன்றும் தவித்த வாய்க்கு அமுதத்தை ஊட்டக் கூடியவை.
ஐந்து வாயில்கள்
வெளி முதலாக, நிலம் ஈறாக, ஆட்சி செய்யும் ஐம்பூதங்கள் இல்லாமல், இந்த உலகத்தில் ஓரணுவும் அசைவதில்லை. ஒரு கருவானது உருக்கொண்டு, மண்ணில் தோன்றி, வாழ்ந்து, மறைந்து, இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறும்வரைக்கும் அதன் பயணத்தில் ஐம்பூதங்கள் உடன்வருகின்றன. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழிலுக்கு அரசனாக விளங்கும் இறைவன், தொழிலுக்கு ஒன்றாக இந்த ஐம்பூதங்களையே ஊர்தியாகக் கொண்டு உலவுகிறான்.
மனித உடம்புக்கு ஒன்பது வாயில்கள். இயற்கையின் உடம்புக்கு ஐந்து வாயில்கள். வெளி, காற்று, வெப்பம், நீர், நிலம் என்று மெய்யியல் புரிதலில் வரிசைப்படுத்தப்படும் ஐம்பூத வாயில்களிலும் நுழைந்து, இயற்கை என்னும் அன்னையின் மடியில் தவழ்ந்தபடி, இறைப் பேராற்றலின் தரிசனத்தை அனுபவிப்போம். புரிசடையோனும், பொன்னாழி வண்ணனும் பூதங்கள் ஐந்தில் பொருந்தக் காண்போம்.
(அடுத்த வாரம்: ‘நிலம்’ பூதம்…)
தொடர்புக்கு: b.kalanidhi@gmail.com