இந்திய செவ்வியல் கலைகள் அழகுணர்வினைத் தந்து மக்களை மகிழ்விப்பதோடல்லாமல் உயரிய எண்ணங்களையும் வண்ணமயமாக கொண்டு சேர்க்கும் வல்லமை கொண்டவை. சமூகத்துக்கும் குழந்தைகளுக்கும் சொல்லும் கதைகளின் ஊடே நீதியையும் நல்லெண்ணத்தினையும் இனிமையாகப் போதிப்பவை. இக்கலாசாரத்தில் அறியப்பட்ட கதைகளுள் சைவ நெறியாளர்கள் பலரது கதைகள் வியப்பானவை.
சைவநெறித் தொண்டர்களுள் பல ஊனுருக்கும் பாடல்களைத் தந்தவர்களுள் பட்டினத்தார் தனியிடம் கொண்டவர். அப்படிப்பட்ட பட்டினத்தாரே மூன்று அடியார்களது தொண்டினை அறிந்து வியந்துபோனதோடல்லாமல், அவர்களைப் போன்று தன்னால் பக்தி செய்ய இயலவில்லையே என காளத்தி நாதரிடம் முறையிட்டு நிற்கிறார். அப்பாடல்:
வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன் அல்லன் -மாது சொன்ன
சூளால் இளமை துறக்க வல்லேன் அல்லன் -தொண்டு செய்து
நாளாறில் கண் இடந்து அப்ப வல்லேன் அல்லன் நான் இனிச் சென்று
ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே!
இப்பாடலினைக் கருவாகக் கொண்டு மூன்று சைவ நெறித் தொண்டர்களான, பெற்ற மகனையே சிவத்தொண்டிற்காக கறி சமைத்த சிறுதொண்டர், மனைவி ‘நீலகண்டம்’ என உறுதி எடுத்ததால் இளமையைத் துறந்த திருநீலகண்டர். ஆறே நாளில் எல்லையில்லா அன்பு கொண்டு தன் கண்ணையே
பெயர்த்தெடுத்து அப்பிய கண்ணப்பர் ஆகியோரது கதைகளில் காணப்படும் உயர்ந்த நெறிகளை நாடக-நாட்டிய வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மூவரும் தத்தமது வாழ்வில் தாம் ஏற்றுக் கொண்ட உறுதியையும் ஆழமான அன்பினையும் எந்த சோதனை வந்தாலும் பிறழாது நின்று அம்மை அப்பருக்கு ஆளான பாங்கினை இந்நாடக நாட்டியம் எடுத்துரைக்கிறது. உறுதியான அன்பு என்பது சைவத்தினுக்கு மட்டுமல்ல உலகம் முழுதுமே அறியவேண்டிய உண்மையாகும்.
இந்த நாட்டிய நாடகத்தினை இயக்கியவர் முனைவர் ரகுராமன். இவர் இசைப் பேரறிஞர் எம்.டி. ராமநாதனின் மருமகன். இக்கருப்பொருளை நாட்டியம் மூலம் விளக்கியவர் முனைவர் லக்ஷ்மி ராமஸ்வாமி. இந்த நாட்டிய நாடகம் அண்மையில் நாரத கான சபாவில் நடைபெற்றது.
ஆடை வடிவமைப்பு மற்றும் அணிகலன்களின் மூலம் லஷ்மி ராமஸ்வாமியின் சிவ ரூபம் தத்ரூபமாக அமைத்திருந்தது.
இந்த நாட்டிய நாடகத்திற்குத் தேவையான பாடல்கள் இயற்றியவர் முனைவர் ரகுராமன். இசை அமைத்து தேன் தமிழில் அருமையாகப் பாடி இருப்பவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பேரன் ராஜ்குமார் பாரதி.
இந்நாட்டிய நாடகத்தில் பரதம், நாட்டுபுற மக்களின் நடனம், மலைவாழ் மக்களின் நடனம் ஆகியவற்றை இணைத்து நடன அமைப்பு செய்து இருக்கிறார் லஷ்மி ராமஸ்வாமி. குறிப்பாக, சிறுத்தொண்டருக்கு சீராளன் மகனாகப் பிறக்கும்போது மக்கள் அடைந்த மகிழ்ச்சியைக் கும்மி நடனம் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.
சிவனாக நடனம் ஆடிய லஷ்மியின் முக பாவங்கள் படு பொருத்தம். பாம்புகளையெல்லாம் தமது ஆடை வடிவமைப்பிலேயே கொண்டு வந்திருந்தார். இறுதியில் வந்த தில்லானாவில் ஆரோஹணத்தில் நளினகாந்தியும் அவரோஹணத்தில் தேஷும் வருகிறது. இது ஓர் அரிய முயற்சி.