ஜூன் 9: சேக்கிழார் திருநட்சத்திரம்
சைவ சமய நூல்களில் பலராலும் அறியப்பட்ட நூல் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம். நாயன்மார்களின் வரலாற்றை உள்ளடக்கிய இந்நூல் பன்னிரெண்டாம் திருமுறை ஆகும். சேக்கிழாரின் வாழ்க்கைச் சரிதம் மிக சுவாரஸ்யமானது.
பிறப்பும் வளர்ப்பும்
வெள்ளியங்கிரி மற்றும் அழகாம் பிகை தம்பதியர், தங்களுக்கு முதல் மகனாகப் பிறந்த குழந்தைக்கு அருண்மொழி எனப் பெயரிட்டனர். அவர் இளமையிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். சோழ மன்னன் அமைச்சரவையில், இவரது தந்தை அமைச்சராகப் பணி புரிந்தார்.
சோழ மன்னனுக்கு ஒரு நாள், உலகினில் மாணப் பெரியது எது என்ற சந்தேகம் எழுந்தது. அதாவது, கடலினும் பெரிது எது, உலகினும் பெரிது எது, மலையினும் பெரிது எது என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் கூறுமாறு அமைச்சர் வெள்ளியங்கிரியிடம் கேட்டார்.
பலவாறு ஆலோசனை செய்தும் விடை அறியாத அமைச்சரின் கவலையைப் போக்க மகன் அருண்மொழி முன்வந்தார். ஈசனின் பெருமையைச் சொல்லி, மன்னனின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். இதனால் இளமைப் பருவத்திலேயே சோழ மன்னனின் அமைச்சரவையிலும் இடம் பிடித்துவிட்டார்.
சீர்குலைந்த மன்னன்
சீவக சிந்தாமணி என்னும் இலக்கியத்தின்பால் கவரப்பட்ட மன்னன் சமண சமயத்தைத் தழுவ முற்பட்டான். அவனையும், மக்களையும் சைவ சமயத்திலேயே ஊன்றி இருக்கச் செய்ய, பதினொரு திருமுறைகளில் உள்ள அறுபத்து மூன்று நாயன்மார்களைப் பற்றி பாடல்கள் எழுதினார் அருண்மொழி. இப்புத்தகத்திற்குப் பெரிய புராணம் என்று பெயர்.
பெரிய புராணத்தை இயற்றிய அருண்மொழியின் பெயர் எப்படி சேக்கிழார் என்று மாறியது? சே என்பதற்கு காளை என்றும், கிழார் என்பதற்கு உரியவர் என்றும் பொருள்.
இவரது குலம் காளைகளை வைத்து உழவுத் தொழில் செய்து வந்ததால், இந்தப் பெயர் அமைந்துவிட்டது என்று சொல்லப்படுகிறது. அருண்மொழி என்னும் இயற்பெயரில் அல்லாமல் சேக்கிழார் என்ற பெயரிலேயே பெரிய புராணம் அறியப்படுகிறது.
பெரிய புராணத்தை எழுதும் சிந்தனை ஏற்பட்ட பிறகு, தில்லை நடராஜனை தரிசிக்கச் சென்ற இவருக்கு ஈசன், உலகெல்லாம் என்ற சொல்லை எடுத்துக் கொடுத்தாராம். அதனையே முதல் சொல்லாகக் கொண்டு திருத்தொண்டர்களான அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாற்றையும், ஈசனின் விளையாடல்களையும், ஒரே ஆண்டில் தொகுத்து நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி பெரிய புராணத்தில் விளக்கியுள்ளார்.
இந்நூல் இன்றும் சைவர்களால் போற்றப்படுகிறது என்பதுடன், தமிழின் மகத்தான பக்தி இலக்கியங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
புகழ்பாடும் நூல்கள்
சிவனடியார்களின் புகழ் பாடும் நூலை இயற்றிய சேக்கிழாரின் புகழை ‘சேக்கிழார் புராணம்’ கூறுகிறது. இதை இயற்றியவர் உமாபதி சிவாச்சாரியார். மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்பவரால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்ற நூல் இயற்றப்பட்டது.
இம்மைக்கும் மறுமைக்கும் வழி காட்டுவது பெரிய புராணம் என்பது சைவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
புராணத் துளிகள்
பெரிய புராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டம் என இரு பகுப்புகளாகக் கொண்டு அமைந் துள்ளது. இதில் முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களும், இரண்டாம் காண்டத்தில் எட்டு சருக்கங்களும் கொண்டுள்ளது.
இக்காப்பியம் கயிலாயத்தில் தொடங்கப் பெற்று, சைவத் திருத்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகக் கூறி, இறுதியில் கயிலாயத்திலேயே நிறைவுகிறது.
முதற் காண்டம்
திருமலைச் சருக்கம், தில்லை வாழ் அந்தணர் சருக்கம், இலை மலிந்த சருக்கம், மும்மையால் உலகாண்ட சருக்கம், திருநின்ற சருக்கம் ஆகிய ஐந்து சருக்கங்களைக் கொண்டது.
இரண்டாம் காண்டம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம், வார்கொண்ட வனமுலையாள் சருக்கம், பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம், கறைக்கண்டன் சருக்கம், கடல் சூழ்ந்த சருக்கம், பத்தராய்ப் பணிவார் சருக்கம், மன்னிய சீர்ச் சருக்கம், வெள்ளானைச் சருக்கம் என்னும் எட்டுச் சருக்கங்களைக் கொண்டுள்ளது.
செய்யுள்களின் எண்ணிக்கை
நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு செய்யுள்களைக் கொண்டது இப்புராணம். ஆளுடையப் பிள்ளை என்றழைக்கப்படும் திருஞானசம்பந்தரின் வரலாறு மட்டும் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்தாறு செய்யுட்களைக் கொண்ட பெரும் பகுதியாக உள்ளது. பெரிய புராணம் சைவம் தழைத்தோங்க பெரிய காரணமானது என்றால் மிகை இல்லை.
தாயுமானான் ஈசன்
கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிர்க்கும் உணவளித்துக் காப்பவன் ஈசன். இவனது பக்தை ரத்னாவதியின் மகளுக்கு பிரசவ காலம் வந்தது. அப்பெண் தாயை அழைத்தாள் உதவிக்கு. ரத்னாவதி மகளது ஊர் நோக்கிப் புறப்பட்டாள்.
வழியில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அவளால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. தன் பெண்ணை காக்கும்படி, நாள் தவறாமல் வணங்கும் ஈசனை வேண்டுகிறாள். அவளது மனதில் மகளுக்கு என்ன ஆனதோ என்ற கவலை அதிகமானது.
அவள் இதயத்தில் உறையும் ஈசன் இதனை உணர்ந்தான். தானே ரத்னாவதியைப் போல் உருவம் கொண்டு, அவளது மகள் இல்லத்திற்கு சென்றான். அங்கு பேறுகால உதவிகளை, பெண்களைவிடச் சிறப்புற செய்தான் ஈசன்.
வெள்ளம் வடிந்தது. ரத்னாவதியும் ஆற்றைக் கடந்து தன் மகள் இல்லத்தை அடைந்தாள். அங்கே இருந்த மற்றொரு ரத்னாவதியைக் கண்ட ஊர் மக்கள் அதிசயித்தனர். அக்கணம் மறைந்தான் ஈசன். அன்று முதல் அனைவராலும் ஈசன் தாயுமானவன் என்று அழைக்கப்பட்டான்.
இப்படி ஈசனின் பலவிதமான திருவிளையாடல்களைக் கொண்டது பெரிய புராணம்.