திருக்கோவலூரில், பூதத்தாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார் ஆகிய மூன்று வைணவப் பெரியவர்களுக்கும் தனது தரிசனத்தை அளிக்க பெருமாள் திருவுளம் கொண்டார்.
தனித்தனியாக தல யாத் திரை மேற்கொண்ட மூன்று ஆழ்வார்களும் திருக் கோவலூரில் ஒரே சமயத்தில் நுழைய பெருமழை உண்டானது. அப்போதுஒரு வீட்டின் இடைகழியில் அந்த இரவு நேரத்தில் மழைக்கு ஒதுங்கும் பொருட்டு ஒரு குடிசையை அடைந்தனர். அவ்விடத்தில் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம் எனும் அளவிலேயே இடம் இருந்தது. இம்மூவரும் அங்கு நின்றுகொண்டிருக்க நான்காமவராக இருந்து இருளில் நெருக்கத்தை உண்டு பண்ணினார் பெருமாள்.
திடீரென்ற நெருக்கத்தின் காரணத்தை அறிய வேறு விளக்கின்மையால், பொய்கை யாழ்வார் பூமியாகிற அகலில் கடல் நீரை நெய்யாகக் கொண்டு சூரியனை விளக்காக ஏற்றினார். பூதத்தாழ்வார் அன்பாகிய அகலில் ஆர்வத்தை நெய்யாகக் கொண்டு சிந்தையாகிய திரியில் ஞானவிளக்கை ஏற்றினார். இவ்விரண்டு ஒளியால் இருள் அகல, நெருக்கத்திற்குக் காரண மான இறைப்பொருளைக் கண்டனர். பின் மூவரும் அப்பொருளின் சொரூபத்தை அறிந்து அனுபவித்து ஆனந்தம் எய்தினர். பெருமாள் உளக்கிடக்கை நிறைவேறியது.
பூதத்தாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் காலத்தால் முதலாமவர். முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவ ராகப் போற்றப்பட்டவர். மாமல்லபுரத்தில் பிறந்த இவர் வைணவப் பாசுரங்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள நூறு வெண்பாக்களால் ஆன இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார்.
இவரது அவதாரத் தலமான மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலுக்கு அருகிலுள்ள பகுதியிலேயே இவர் பிறந்ததாகக் கூறப்படு கிறது. இக்கோயிலின் முன்பு இதைக் குறித்த மண்டபம் ஒன்றும் இருந்ததாகத் தெரிகிறது. இக் கோயிலின் வெளிச்சுவரிலே, இத்தலம் பூதத்தாழ்வாரின் அவதாரத் தலம் என அறிவிப்புப் பலகை தெரிவிக்கிறது.
திருமாலின் கையில் உள்ள ஐந்து ஆயுதங்களில் ஒன்றான கௌமோதகி என்னும் பெயருடைய கதாயுதத்தின் அம்சமாக இவர் பிறந்தார் என வைணவப் பெரியோர் கூறுகின்றனர்.
வடமொழியில் பூ என்ற அடிச் சொல்லைக் கொண்டு அமைந்தது பூதம் என்ற சொல். இதற்குச் சத்து - அறிவு என்று பொருள். பெருமாளின் திருக்குணங்களை அனுபவித்தே இந்தச் சத்து எனும் பூதத்தைப் பெற்றதால், இந்த ஆழ்வார் பூதத்தாழ்வார் ஆனார்.