இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு அடையாளமாக ஆலயம் என்றும் மசூதி என்றும் குறிப்பிடப்படும் இடமாக ஷிர்டி சாய்பாபா கோவில் விளங்குகிறது. மகாராஷ்டிரத்தின் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள ஷிர்டி சாய்பாபா கோவில் எல்லா மதத்தினரும் வந்து செல்லும் இடமாக உள்ளது. 1800-களின் மத்தியில் பிறப்பு, பூர்விகம் எதுவும் அறிய முடியாத நிலையில் சாய் பாபா அவர்கள், ஷிர்டிக்குத் தனது இளம் வயதில் வந்து ஒரு பாழடைந்த மசூதியில் தங்கினார். அதற்கு அவர் துவாரகமாயி என்று பெயரிட்டார்.
அங்கிருந்து அவர் செய்த ஆன்மிகச் சாதனைகள் தான் அவரது சமாதி ஆலயத்தை நோக்கி இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இந்து மற்றும் இஸ்லாமியச் சடங்குகள் இரண்டும் நடைபெறும் இந்த ஷிர்டி ஆலயம், சாய்பாபா வழிபாட்டு மரபு ஆகியவை குறித்த விரிவான ஆவணம் தான் ‘ஸீட் ஆப் சிங்க்ரெட்டிக் ஸ்பிரிச்சுவாலிட்டி’ என்ற பெயரில் ‘தி இந்து’ ஆங்கிலப் பதிப்பாக வெளிவந்துள்ளது.
ஷிர்டி சாய்பாபா சமாதியடைந்து நூற்றாண்டு ஆகும் பின்னணியில் வந்திருக்கும் இப்புத்தகம், சாய் வழிபாடு இந்தியா முழுவதும் பரவியுள்ளதை விவரிக்கிறது. ஷிர்டி நகரத்தின் சமூக, பொருளாதார, கலாசார அம்சங்களைப் புகைப்படங்கள், அழகிய சித்திரங்களுடன் வெளியிட்டுள்ளனர்.
ஷிர்டி சாய்பாபாவின் உபதேசங்களும் வாழ்க்கை முறையும் இந்து மற்றும் இஸ்லாம் இரண்டு சமயங்களிலிருந்தும் சாரம் பெற்றவை. ராமாயணம், பகவத் கீதை, யோக வசிஷ்டம், குரானின் தாக்கம் பெற்ற சூஃபி அவர். அன்பு, சகோதரத்துவத்தைப் போதிக்கும் ஞானியாக இருந்தார்.
ஷிர்டி சாய் பக்தர்களுக்கு மட்டுமின்றி ஒரு ஒரு கலாசார ஆவணமாகவும் திகழும் தொகுப்பு இது. 120 ரூபாய் விலையில் 92 பக்கங்களில் வண்ணப்படத் தொகுப்பாக விரியும் பொக்கிஷம் இது.
தொடர்புக்கு: 044-28576474