ஆன்மிகம்

பாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்!

இக்வான் அமீர்

பகல் முழுவதும் நோன்பு, இரவுகளில் பிரத்யேகத் தொழுகைகள் என்று சுழற்சியான ஓர் அற்புதமான சூழல் கொண்ட மாதம் ரமலான். பகலில் பசி, தாகம் மற்றும் உடல் இச்சைகளிலிருந்து விலகி இருந்தும், இரவில் பிரத்யேகத் தொழுகை, திருக்குா்ஆன் வாசிப்பு மற்றும் இறை வணக்கங்கள் என்று படைத்தவனைச் சரணடைவதற்குப் பள்ளிவாசல்கள் நிரம்பி வழியும் மாதம். அதேபோல, தான தர்மங்கள், தேவையுள்ளோர்க்கு உதவிகள் என்று உள்ளம் ஈந்து கனியும் காலம் இது.

பசித்திருப்பதும், விழித்திருப்பதும், இறை வணக்கம் என்பது போலவே, தேவையுள்ளோரின் தேவைகளை நிறைவேற்றுவதும் இறைவனின் திருப்பொருத்தத்தை நாடிப் பொருளால் செய்யும் இறை வணக்கமாகும்.

“மறுமையில், உங்கள் ஒவ்வொருவரிடமும் இறைவன் நேரடியாகப் பேசி, கணக்கு வாங்குவான். அங்கு பரிந்துரை செய்பவர் ஒருவரும் இருக்க மாட்டார். அவனை மறைத்துக் கொள்ளும் திரை எதுவும் இருக்காது. அங்கே மனிதன் தனக்கு பரிந்துரை செய்பவர் அல்லது உதவுபவர் எவராவது தென்படுகின்றாரா என்று தனது வலது பக்கம் திரும்பிப் பார்ப்பான். அந்தோ..! அங்கே அவனது செயல்களைத் தவிர வேறு எதுவும் தெரியாது.

பிறகு இடது பக்கம் திரும்பிப் பார்ப்பான். அங்கும் அவனது செயல்களைத் தவிர வேறு எதுவும் தென்படாது. பின்னர், முன் பக்கம் பார்வையைச் செலுத்துவான். அங்கும் அவனுக்கே உரிய பயங்கரங்கள் நரக வடிவில் காத்திருப்பதைக் காண்பான். எனவே, மக்களே! பாதியளவு பேரீச்சம் பழத்தையாவது தருமம் செய்து நீங்கள் நரக நெருப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள முயலுங்கள்!”

இறை நம்பிக்கையாளர்கள் தமது செயல்களுக்கான நற்கூலியை இறைவனிடம் மட்டுமே எதிர்பார்த்துச் செயல்படுபவர்கள். இந்த உயர்பண்பை அவர்களின் வாய்மொழியாலேயே, திருக்குர்ஆன் வர்ணிக்கிறது: “நாங்கள் இறைவனுக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். நாங்கள் உங்களிடம் இதற்கான எந்தப் பிரதிபலனையும், நன்றியையும் எதிர்பார்க்கவில்லை!”

பகட்டுக்காகவும், பிறருக்குக் காண்பிக்க வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படும் எந்தவொரு செயலும் அவர்களின் நற்செயல்களைப் பாழாக்கிவிடும்.

இறை நம்பிக்கையாளர்கள் தங்கள் உள்ளத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் தங்கள் தான, தருமங்கள் பாழாகிவிடும் என்று எச்சரிக்கிறது திருக்குர்ஆன்.

“மனிதர்களுக்குக் காண்பிப்பதற்காகவே தனது பொருளைச் செலவு செய்பவனைப் போல, நீங்களும் கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், மனம் புண்படச் செய்தும் உங்களுடைய தான, தர்மங்களைப் பாழாக்கி விடாதீர்கள்!”

தான, தர்மங்களின்போது, ஹலாலான வழிகளில் அதாவது இஸ்லாம் அனுமதிக்கும் ஆகுமான வழிகளில் ஈட்டப்பட்ட பொருளையே செலவழிக்க வேண்டும். தமக்குப் பிடித்தமான, தாங்கள் விரும்புகின்ற உயரிய பொருள்களையே அடுத்தவர்க்கும் வழங்க வேண்டும் என்றும் திருக்குர்ஆன் அறிவுறுத்துகிறது.

“இறைவனின் தரப்பிலிருந்து இரண்டு வானவர்கள் இறங்காமல் எந்த நாளும் கழிவதில்லை. அவர்களில் ஒருவர் தேவையுள்ளோருக்கு தாராளமாக செலவு செய்கின்ற அடியானுக்காக, “இறைவா! தாராள மனம் கொண்ட இந்த அடியானுக்குத் தகுந்த நற்கூலியைத் தருவாயாக!” என்று இறைஞ்சுகிறார். அடுத்த வானவரோ, குறுகிய உள்ளம் கொண்ட கஞ்சர்களுக்காக, “இறைவா! கஞ்சத்தனம் புரியும் இந்த மனிதனுக்கு அழிவைத் தா!” என்று சபிக்கிறார் என்று நபிகளார் எச்சரிக்கிறார்.

ரமலான் வெறும் பசியையும் உறக்கத்தையும், மன இச்சைகளையும் கட்டுப்படுத்தும் மாதமல்ல. தங்கள் பொருளால் சக மனிதர்களின் துயர் துடைக்கவும், அவர்களின் துன்பம், துயரங்களைக் களையவும் இறை நம்பிக்கையாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் மாதமாகும்.

SCROLL FOR NEXT