மறுமையில் நிழல் இல்லாத நாளில் அல்லாஹ், தனது அர்ஷுடைய நிழலில் ஏழு நபர்களுக்கு நிழல் அளிப்பான். அந்த ஏழு வகையான நபர்களில், இரு நண்பர்கள் அல்லாஹ்வுக்காகவே நட்பு கொண்டார்கள். பின்பு அல்லாஹ்வுக்காகவே பிரிந்தும் விட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார். இன்று நட்பு என்பது சுயநலத்தின் மற்றொரு பெயர் என்றாகி விட்டது.
நபி அவர்களிடம், அவருடைய தோழர், ‘‘அழிவு நாள் எப்போது?” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம், ‘‘நீங்கள் அமல்கள் செய்து அதற்கு தயாராகிவிட்டீர்களா?” என்று திருப்பிக் கேட்டார். ‘‘இல்லை இறைத்தூதரே… ஆனால், நான் உங்களை நேசிக்கிறேன்’’ என்று நபித்தோழர் கூறினார். உடனே நபி அவர்கள், ‘‘மனிதன் யாரை நேசிக்கிறானோ, அவர் அவருடைய மறுமையில் இருப்பார்’’ என்று தெரிவித்தார்.
மேலும் நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். ‘‘ஒவ்வொரு நபிக்கும் ஒரு பயணத் தோழர் உண்டு. என்னுடைய பயணத் தோழர் உஸ்மான் (ரளி)” என்று கூறினார். நபி அவர்களின் மரணத்திற்குப் பிறகு தாம் அளித்த வாக்குறுதியை நிரூபிக்கும் வண்ணம் இந்நிகழ்வு அமைந்து விட்டது.
ஒரு நாள் இரவு ஹள்ரத் உஸ்மான் அவர்கள், நபி அவர்களை கனவில் கண்டார். அப்பொழுது நபி அவர்கள், ஹள்ரத் உஸ்மானிடம், ‘‘உஸ்மானே.. நீர் நம்மிடம் வந்து நோன்பு திறங்கள்’’ என்று கூறினார். இதை உஸ்மான் அவர்கள் அப்துல்லாஹ் பின் உமர் அவர்களிடம் கூறியதாக ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறே உஸ்மான் அவர்கள் மறு நாள் நோன்பு வைத்திருக்கும் நிலையிலேயே உயிரிழந்தார்.
இறைத்தூதர் அவர்கள், உஸ்மான் தன்னிடம் நோன்பு வைத்த நிலையில் வருவார்கள் என்பதை முன்கூட்டியே கனவின் மூலம் தெரிவித்திருக்கிறார்கள். தன்னுடைய நண்பர் தம்மிடம் வரும் நேரத்தை அறிவித்துவிட்டார்கள். தன் வாக்குறுதியை மெய்யாக்கி விட்டார்கள்.