ஆன்மிகம்

ஆன்மிகமும் அறமும்

வெ.சந்திரமோகன்

வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் அலைபாயும் மனித மனம் ஆறுதலுக்காகவும் அமைதிக்காகவும் நாடுவது ஆன்மிகத்தை. வேண்டுதல்களை செவிசாய்த்து நிறைவேற்றிய இறைசக்திக்கு நன்றி கூறுவது என்பன உள்ளிட்ட பல காரணங்களுக்காக மக்கள் கோயில்களுக்குச் செல்கின்றனர். இந்தியப் பண்பாட்டில் மிகச் சிறந்த பங்களிப்பு செய்துள்ள தமிழகத்தில் கோயில்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்கா. சிற்பக் கலைக்கும், கட்டடக் கலைக்கும் புகழ்பெற்ற கோயில்கள் ஏராளம். தஞ்சை பெரிய கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழநி முருகன் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். சேர. சோழ, பாண்டியர்கள் தங்கள் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் காத்து வந்த கோயில்களை அதே அக்கறையோடும் உயர்ந்த நோக்கத்தோடும் பராமரித்து வருகிறது தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை. பக்தி, பண்பாடு, விழாக்கள் ஆகியவற்றை தாண்டி சமூக நலன், கல்வி போன்ற சேவை நோக்கத்திலும் சிறப்பாக செயல்படுகிறது இத்துறை.

நிர்வாகம்

ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், அரசு மக்களுக்கு பலனளிக்கும் நிறுவனங்களை தன் பிரம்மாண்ட குடையின் கீழ் தன்னகத்தே எடுத்துக்கொண்டது. அவற்றை முறையாகப் பராமரிக்கவும், நிர்வகிக்கவும் புதிய சட்டங்களையும் இயற்றியது. தமிழகத்தில் உள்ள கோயில்கள், மடங்கள் உள்ளிட்ட இந்து சமய நிறுவனங்களை நிர்வகிக்க, கடந்த 1959-ல் தமிழ்நாடு இந்து அறநிலையக் கொடைகள் சட்டம் உருவாக்கப்பட்டது. ஆன்மிகத் தலங்கள் தொடர்பாக, 1863-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரை உருவாக்கப்பட்ட பல்வேறு சட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு இப்புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. இதன்படி இந்து அறநிலையத் துறை ஆணையர் தலைமையில், தமிழகத்தில் உள்ள 38,529 கோயில்கள், அவற்றின் சொத்துகள் நிர்வகிக்கப்படுகின்றன. இவற்றில், 36,488 திருக்கோயில்களுடன், 17 சமணத் திருக்கோயில்களும் அடங்கும்.

இந்து சமய நிறுவனங்கள் அவற்றின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ரூ.10,000-க்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட சமய நிறுவனங்கள் பட்டியலைச் சாராத நிறுவனங்கள் என்றும், அதற்கு அதிகமான ஆண்டு வருமானம் கொண்டவை பட்டியலைச் சார்ந்த நிறுவனங்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன. பட்டியலைச் சாராத நிறுவனங்களின் எண்ணிக்கை, 34,336 என்று தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை வெளியிட்டு உள்ள கொள்கை விளக்கக் குறிப்பு (2013-14) கூறுகிறது. 10 லட்சத்துக்கும் அதிகமான ஆண்டு வருமானம் கொண்ட கோயில்களின் எண்ணிக்கை 234 தான். எனினும் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும் தங்கள் சிறப்பான அர்ப்பணிப்பு கொண்ட உழைப்பில் பல்வேறு பணிகளை திறம்பட நிறைவேற்றி வருகின்றன.

துறையின் பணியாளர்கள்

கோயில்களின் பொது நிர்வாகம், அசையும் மற்றும் அசையா சொத்துகளை நிர்வகிப்பது, கோயில் திருப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்து அறநிலையத் துறை மேற்கொண்டு வருகிறது. மாநில அளவில் இத்துறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 11 மண்டலங்களையும் மாவட்ட அளவில் 28 கோட்டங்களையும் நிர்வகித்து வருகிறது. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு இணை ஆணையரும், ஒவ்வொரு கோட்டத்துக்கும் ஒரு துணை ஆணையரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆய்வாளர்கள், நேர்முக உதவியாளர்கள், சரிபார்ப்பு அலுவலர்கள், பொறியாளர்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் இத்துறையில் பணியாற்றுகின்றனர்.

கோயில்களின் அறங்காவலர்கள் குழுவில் மூன்று முதல் ஐந்து உறுப்பினர்கள் வரை நியமிக்கப்படுகின்றனர். ஒரு பெண் உறுப்பினரும் தாழ்த்தப்பட்ட அல்லது பழங்குடியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் இக்குழுவில் இடம்பெறுவர்.

மண்டல ஸ்தபதிகள்

கோயில்களில் நடைபெறும் திருப்பணிகள், அங்கீகரிக்கப்பட்ட ஸ்தபதிகளின் செயல்பாடுகளை மேலாய்வு செய்தல் , வரைபடங்களை சரிபார்த்தல் போன்ற பணிகளில் மண்டல ஸ்தபதிகள் ஈடுபட்டுள்ளனர். முதலில் ஐந்து பேர் மட்டுமே இப்பதவியில் இருந்தனர். முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மண்டல ஸ்தபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த உத்தரவிடப்பட்டது. 2012 -13-ம் நிதி ஆண்டில், மேலும் 8 பேர் மண்டல ஸ்தபதிகளாக பணியமர்த்தப்பட்டனர்.

கோயில்களுக்கு சொந்தமான மனைகள் மற்றும் கட்டடங்கள் நியாய வாடகைக்கு விடப்படுகின்றன. மண்டல இணை இயக்குநர், செயல் அலுவலர், அறங்காவலர் கொண்ட குழு இதை நிர்வகிக்கிறது. அதேபோல் இந்து சமய நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களின் குத்தகை நிலுவைத் தொகை வசூலித்தல், சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் குத்தகைக்காரர்களை வெளியேற்றுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வருவாய் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. தஞ்சாவூர், திருச்சி, கடலூர் உள்ளிட்ட 6 நகரங்களில் வருவாய் நீதிமன்றங்களும், கும்பகோணம், சேலம், தென்காசி ஆகிய நகரங்களில் முகாம் வருவாய் நீதிமன்றங்களும் செயல்படுகின்றன. கோயில்களுக்குச் சொந்தமான கட்டடங்கள், நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்னர், இதுவரை 397 ஏக்கர் நிலம், நூற்றுக்கணக்கான மனைகள் மற்றும் கட்டடங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

பசி போக்கிடும் பக்தி

ஏழைகளுக்கு உணவிடுதலைப் போன்ற புண்ணியம் வேறில்லை. கடந்த 2002-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோயில்களில் அன்னதான திட்டத்தை துவக்கி வைத்தார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் முதன்முதலாக அன்னதான திட்டம் தொடங்கப்பட்டது. தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட கோயில்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, மேலும் பல கோயில்களில் அன்னதான திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக நாளொன்றுக்கு அரசு செலவிடும் தொகை ரூ. 6.85 லட்சம். இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி கோயிலில் கடந்த ஆண்டு துவக்கப்பட்டது.

பிற திட்டங்கள்

கோயில்களில் தொண்டாற்றுவோருக்கு மட்டுமல்லாமல், கோயில்களுக்கு பெருமை சேர்க்கும் யானைகளுக்கும் சிறப்புத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தின் மூலம் யானைகள் இயற்கைச் சூழலில் இளைப்பாற யானைகள் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. யானைகளுக்கு ஊட்டச்சத்து கொண்ட உணவும், சிறப்பான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. யானை பாகன்களுக்கும் யானை பராமரிப்பில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இலவச திருமணத் திட்டம்

இலவச திருமணத் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு புதுமணத் தம்பதிக்கும் 4 கிராம் தங்க திருமாங்கல்யம், ரூ.10,000 மதிப்புள்ள சீர் வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன் அரசு செலவில் இத்திருமண வைபவம் நடத்திவைக்கப்படுகிறது.

உடல்நலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோரின் வசதிக்காக ஸ்ரீரங்கம், பழநி உள்ளிட்ட, 8 கோயில்களில், 11 மின்கல மகிழுந்துகள் (பேட்டரி கார்) இயக்கப்படுகின்றன.

ஆன்மிகத்துடன் அறப்பணிகள்

இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் இருக்கும் சமய நிறுவனங்கள், மக்கள் சேவையிலும் ஈடுபடுகின்றன. திருக்கோயில்களின் நிர்வாகத்தில் கலை, பண்பாடு தொழில்நுட்பக் கல்லூரிகள், மேனிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் உள்ளிட்ட 50 கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதேபோல் கருணை இல்லங்கள், மனநல காப்பகங்கள் உள்ளிட்ட 45 சமூக நல நிறுவனங்களும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் சேவை புரிகின்றன. இத்துறைக்குச் சொந்தமான சிறுவர் காப்பகங்களில் ப்ளஸ் டூ வரை படித்த மாணவ, மாணவிகள் தங்கள் மேல்படிப்பை கல்லூரிகளில் தொடரவும் இத்துறை உதவுகிறது. அறநிலையத் துறைக்குச் சொந்தமான கல்லூரிகளில் இம்மாணவர்களுக்கு முழுமையான கட்டண விலக்கும், இதர கல்வி நிறுவனங்களில் 50 சதவீத கட்டண விலக்கும் அளிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்துதல், கோயில்களுக்குச் சொந்தமான குளங்களை செப்பனிடுதல், கோயில் தேர்களை பராமரித்தல், பக்தர்கள் வசதிக்காக குடிநீர் வசதி, கழிப்பிடம் மற்றும் தங்கும் வசதிகள் போன்ற பல்வேறு பணிகளையும் அறநிலையத் துறை சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

SCROLL FOR NEXT