ஆன்மிகம்

தெய்வத்தின் குரல்: இசை வழியே ஈசுவரானுபவம்

செய்திப்பிரிவு

கல்வி தெய்வமான சரஸ்வதி கையிலே வீணை வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும். பரமேசுவரனின் பத்தினியான சாக்ஷாத் பராசக்தியும் கையிலே வீணை வைத்திருப்பதாகக் காளிதாசர் ‘நவரத்தினமாலா' ஸ்தோத்திரத்தில் பாடுகிறார். அம்பாள் விரல் நுனியால் வீணையை மீட்டிக்கொண்டிருப்பதாகவும், ஸரிகமபதநி என்ற சப்த ஸ்வரங்களின் சாதுரியத்தில் திளைத்து ஆனந்திப்பதாகவும் பாடுகிறார்.

சங்கீதத்தில் முழுகியுள்ள சிவாகாந்தா (சிவனின் பத்தினி) சாந்தமாகவும், (அமைதி மயமாகவும்) ம்ருதுள ஸ்வார்த்தாவாகவும் (மென்மையான திரு உள்ளம் படைத்தவளாகவும்) இருக்கிறாள் என்கிறார் காளிதாசர். அவளை நமஸ்கரிக்கிறேன் என்கிறார்.

அம்பிகை சங்கீதத்தில் அமிழ்ந்திருப்பதாலேயே சாந்த ஸ்வரூபிணியாக ஆகியிருக்கிறாள் என்று தோன்றுகிறது. அதேபோல சங்கீத அநுபவத்தினால்தான் அவளுடைய உள்ளம் மிருதுளமாக, புஷ்பத்தைப் போல் மென்மையாக, கருணாமயமாக ஆகியிருக்கிறது என்று தொனிக்கிறது.

சாக்ஷாத் பராசக்தியை இப்படி சங்கீத மூர்த்தியாகப் பாவிக்கும்போது அவளுக்கு சியாமளா என்று பெயர். சங்கீதத்தில் தோய்ந்து ஆனந்த மயமாகவும், சாந்தமயமாகவும், குழந்தை உள்ளத்தோடும் உள்ள சியாமளா தேவியைத் தியானித்தால், அவள் பக்தர்களுக்குக் கருணையைப் பொழிவாள். அவளது மிருதுவான இதயத்திலிருந்து கருணை பொங்கிக்கொண்டே இருக்கும். தெய்வீகமான சங்கீதம் ததும்பும் சந்நிதியில், சாந்தமும் ஆனந்தமும் தாமாகவே பொங்கும். சிவகாந்தாவிடம் சரண் புகுந்தால் நமக்கு இந்தச் சாந்தமும் ஆனந்தமும் கைகூடும். சங்கீதமானது ஆனந்தம், சாந்தம், மிருதுவான உள்ளம், கருணை ஆகிய எல்லாவற்றையும் அளிக்கும் என்று தெரிகிறது.

வேத அத்யயனம், யோகம், தியானம், பூஜை இவற்றைக் கஷ்டப்பட்டு அப்பியசிப்பதால் கிடைக்கிற ஈசுவராநுபவத்தை தெய்வீகமான சங்கீதத்தின் மூலம், நல்ல ராக, தாள, ஞானத்தின் மூலம் சுலபமாகவும் சௌக்கியமாகவும் பெற்றுவிடலாம். இப்படி தர்ம சாஸ்திரம் எனப்படும் ஸ்மிருதியைத் தந்திருக்கும் யாக்ஞவல்கிய மகரிஷியே வீணா கானத்தைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

கடுமையான பிரயாசை இல்லாமலே, சங்கீதத்தால் மோக்ஷ மார்க்கத்தில் போய்விடலாம் என்கிறார். நம் மனசைத் தெய்வீகமான சங்கீதத்தில் ஊறவைத்து அதிலேயே கரைந்து போகச் செய்தால் கஷ்டமில்லாமல் ஈசுவரனை அநுபவிக்கலாம். நாம் பாடி அநுபவிக்கும்போதே, இந்த சங்கீதத்தைக் கேட்கிறவர்களுக்கும் இதே அநுபவத்தைத் தந்துவிடலாம்.

வேறு எந்தச் சாதனையிலும் பிறத்தியாருக்கும் இப்படி சமமான அநுபவ ஆனந்தம் தர முடியாது. சங்கீதம் என்ற மார்க்கத்தின் மூலம் தங்கள் இருதயங்களைப் பரமேசுவரனிடம் சமர்ப்பணம் செய்த தியாகராஜர் போன்ற பக்தர்கள், சங்கீதமே சாக்ஷாத்காரத்தைத் தரும் என்பதற்குச் சாட்சியாக இருக்கிறார்கள்.

அம்பாள்தான் பிரம்மத்தின் சக்தி. நாதம் ஈசுவரன் அல்லது பிரம்மம். அம்பாள் சங்கீதத்தில் சொக்கி ஆனந்தமாயிருக்கிறாள் என்றால், பிரம்மமும் சக்தியும் வேறு வேறாக இல்லாமல் ஒன்றிய அத்வைத ஆனந்தத்தையே குறிக்கும். அம்பாள் தன் இயற்கையான கருணையைப் பொழிந்து, சங்கீதத்தின் மூலம் அவளை உபாசிப்பவர்களது ஆத்மா பரமாத்மாவிலேயே கரைந்திருக்குமாறு அருளுகிறாள்.

நாரதர், அகஸ்தியர், மதங்கர், ஆஞ்சநேயர், நந்திகேச்வரர் போன்ற வர்களை சங்கீத உபாசகர்களாகவும், சாஸ்த்ரகாரகர்களாகவும் சொல்லி யிருக்கிறது. கல்யாணி, சங்கராபரணம், பைரவி, ஷண்முகப்ரியா, ராமப்ரியா. கரகரப்ரியா என்றே தெய்வ சம்பந்தமாக அநேக ராகப் பெயர்கள் இருக்கின்றன.

நமக்குக் கிடைத்திருக்கிற சுவடிகளிலிருந்து சார்ங்க தேவர், ஸோமதேவர், ராமாமாத்யர், மந்திரியாகவும் அத்வைத சாஸ்த்ரத்தில் கரைகண்டவராகவுமிருந்த கோவிந்த தீக்ஷிதர், அவருடைய புத்ரரான வேங்கடமகி முதலியவர்கள் சங்கீத சாஸ்த்ரத்துக்கு லக்ஷணங்கள், விவரணங்கள் கொடுத்து உபகரித்திருப்பது தெரிகிறது.

மஹேந்த்ர வர்மா, ரகுநாத நாயக் போன்ற ராஜாக்களும் இப்படி உபகரித்திருக்கிறார்கள். குடுமியா மலையில் (புதுக்கோட்டைக்குப் பக்கம்) சங்கீத சாஸ்த்ரம் பற்றி மஹேந்த்ர பல்லவனின் சமஸ்கிருதக் கல்வெட்டு இருக்கிறது. தற்போது நடைமுறையிலுள்ள வீணைக்கு ‘ரகுநாத வீணை' என்று நாயக் ராஜாவை வைத்துத்தான் பெயர் ஏற்பட்டிருக்கிறது. இப்படிப் பல பேர் சங்கீதத்தில் நிறைந்த ஞானம், அநுபவம் பெற்றவர்கள்.

பூர்வத்தில் தேசம் பூராவுக்கும் ஒரே சங்கீத முறைதான் இருந்ததென்றும், முகாலய ஆட்சியில் வடக்கே எல்லாத் துறைகளிலும் foreign influences (விதேச தாக்கங்கள்) அதிகமான பின் அங்கே ஹிந்துஸ்தானி சங்கீதமென்றும், தக்ஷிணத்தில் கர்நாடக சங்கீதமென்றும் பிரிந்ததாகத் தெரிகிறது.

மெட்டமைத்து சாகித்யம் செய்திருப்பவர்களில் சரித்திர காலத்திலே எண்ணூறு வருஷத்துக்குமுன் ‘கீத கோவிந்தம்' இயற்றிய ஜயதேவரை முதலாவதாகச் சொல்கிறார்கள். அப்புறம் முக்கியமாகச் சொல்வது புரந்தரதாசர். ‘கர்நாடக' சங்கீதம் என்றே அவரால்தான் பெயர் உண்டானதாக ஒரு அபிப்ராயம்.

இவர்கள் இருவரும் கிருஷ்ண பரமாத்மாவைப் பாடியவர்கள். நாராயண தீர்த்தரும் ‘கிருஷ்ண லீலா தரங்கிணி' என்றே பாடியிருக்கிறார். ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் தமிழில் பண்ணியுள்ள ‘கிருஷ்ண கானம்' இப்போது பிரபலமாகிவருகிறது.

பத்ராசல ராமதாஸ் முழுக்க ராமபரமாகவே கீர்த்தனைகள் செய்திருக்கிறார். நம் சங்கீதத்துக்கே முக்கிய புருஷர்களாக ‘த்ரிமூர்த்திகள்' எனப்படுகிறவர்களில் தியாகையரும் விசேஷமாக ராமார்ப்பணமாகவே பாடியிருக்கிறார். சிவன், அம்பாள் முதலானவர்கள் மீதும் சிற்சில கிருதிகள் செய்திருக்கிறார்.

முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஐயனார், மாரியம்மனிலிருந்து ஆரம்பித்து ஒரு சுவாமி விடாமல் அத்தனை தெய்வங்களையும் பாடியிருக்கிறார். சியாமா சாஸ்திரிகள், அம்பாள் ஒருத்தியையே பாடியிருக்கிறார். கோபால கிருஷ்ண பாரதியாரும், முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை முதலியவர்களும் சிவனையே, அதிலும் முக்கியமாக நடராஜாவையே பாடினவர்கள். அருணாசலக் கவிராயர் ‘ராம நாடகம்' என்று செய்திருக்கிறார்.

அன்றிலிருந்து இன்றுவரை யாராயிருந்தாலும் தெய்வத்தைக் குறித்துத்தான் பாடல் இயற்றுவதென்றும், ‘ஸெக்யூலர் தீம்' என்னும் லௌகிக விஷயமாக இயற்றுவதில்லையென்றும் இந்திய மரபு வளர்ந்து வந்திருக்கிறது.

தெய்வத்தின் குரல் (முதல் மற்றும் மூன்றாம் பாகம்)

SCROLL FOR NEXT