ஒரு மாபெரும் மதத்தை நெஞ்சிலேற்றி அதன் அருஞ்சுவையை நுகர்வதற்காகத் தனது சிம்மாசனத்தைத் துறந்தார் ஒரு மன்னர். அதன் பயனாக விளைந்ததுதான் இந்தியாவின் முதல் பள்ளிவாசலான சேரமான் ஜும்மா மசூதி. இது உலகின் இரண்டாவது மசூதியும்கூட!
சேரமான் பெருமாளின் கனவு
கேரளாவில் கொடுங்கல்லூரைத் தலைநகராகக்கொண்டு ஆண்டுவந்தார் சேரமான் பெருமாள். ஒருநாள் சந்திரன் இரண்டாகப் பிளந்துபோவதுபோல அபசகுனமாகக் கனவு கண்டார். அரசவை ஜோதிடர்களிடமிருந்து அதற்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. அப்போது அரபி வணிகர்கள் சிலர் அரண்மனைக்கு வந்தனர். தன் கனவு குறித்து அவர்களிடம் சேரமான் பெருமாள் சொன்னார். “அது அரேபியாவில் பிரவாசகன் முகமது நபி அவர்களின் திவ்யமான அனுஷ்டானத்தின் பலனாக இருக்கும்” என்று அந்த வணிகர்கள் சொன்னர்கள். (பரிசுத்த குர் ஆன் ௫௪ : ௧-௫ ). வணிகர்கள் சொன்னதைக் கேட்ட பெருமாளுக்குப் பெரும் திருப்தி. சேரமான் பெருமாள், இஸ்லாம் மதத்தில் அடியெடுத்துவைக்க அந்த நிகழ்ச்சியே காரணமானது. முகமது நபியின் சன்னிதியை அடையவும் அவரைத் தரிசிக்கவும் சேரமான் பெருமாள் ஆவல் கொண்டார்.
அரேபியப் பயணம்
அதன் பிறகு சேரமான் தனது ராஜ்ஜியத்தைப் பல பாகங்களாகக் கூறுபோட்டு சிற்றரசர்களுக்குக் கொடுத்துவிட்டு மக்காவுக்குப் புனித பயணத்தைத் தொடங்கினார். அங்கே சில காலம் முகமது நபியுடன் தங்கி, இஸ்லாம் மதம் பற்றிய தெளிவு பெற்றார்.
பிறகு தனது நாட்டுக்குத் திரும்பிவந்து கேரளாவில் மலபாரிலுள்ள மற்ற அரசர்களுக்கு இஸ்லாம் மதத்தின் மகத்துவத்தைப் பற்றி விளக்க நினைத்தார். வரும் வழியில் நோய்க்கு ஆளானார். அரேபியாவிலுள்ள ‘டுபார்’ என்ற இடத்தை அடைந்தபோது, சேரமான் பெருமாள் மறைந்தார். இறப்பதற்கு முன் தனது ராஜ்ஜியம் பற்றிய குறிப்புகளைத் தன் சிஷ்யர்களுக்குச் சொல்லியிருந்தார்.
பள்ளிவாசல் தொடக்கம்
அதன்படி, சேரமான் பெருமாள் எழுதிய கடிதத்துடன் மாலிக் பில் தினார் பெருமாளின் உறவினர்களைச் சந்தித்தார். கடிதத்தில் இருந்ததன்படி கேரளாவில் பல இடங்களிலும் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கான நிலம் கொடுக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பள்ளிவாசல் கொடுங்கல்லூரில் கட்டப்பட்டது. மாலிக் பில் தினார் முதல் ‘காசி’யாகப் பொறுப்பேற்றார்.
சில நாட்களுக்குப் பிறகு மாலிக் பில் தினார் தன் மகன் ஹபீப் பில் மாலிக்கை அடுத்த ‘காசி’யாக நியமித்தார். கேரளாவின் பல இடங்களில் மக்கள் வருகை அதிகரித்ததால் பள்ளிவாசலின் முன் பகுதி பெரிதாக்கப்பட்டது. மசூதியின் உள்ளே ஒரு பெரிய விளக்கு வைக்கப்பட்டுள்ளது. நமாஸ் பண்ணுமிடம் ‘மிஹ்ராப்’ உள்ளது. நூறாண்டு பழமையான பேச்சுமேடை உள்ளது. பண்டைக்காலச் சுவரெழுத்துகள் உள்ளன. பள்ளிவாசலின் வெளியே ஒரு பெரிய குளம் உள்ளது.
மசூதியின் சேவை
சேரமான் மசூதியைப் பார்க்க இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் சாதி மத வேறுபாடின்றி வருகின்றனர். ரம்ஜான் மாதத்தில் சிறப்பு நோன்பும் பிரார்த்தனையும் நடத்தப்படுகின்றன. கொடுங்கல்லூரில் வாழும் மற்ற மதத்தினரும் நோன்பு நாட்களில் பள்ளிவாசலில் வந்து நோன்பு திறக்கின்றனர்.
சேரமான் மசூதியின் பழைய உருவம் மரத்தில் வடிவமைக்கப்பட்டு அங்கிருக்கும் அருங்காட்சியகத்தின் நடுவில் வைக்கப்பட்டுள்ளது. ஏழைகளின் நல்வாழ்வுக்காகப் பள்ளிவாசல் சார்பில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. பெண்களுக்குத் திருமண உதவி, வீடு கட்ட உதவி, மருத்துவ உதவி போன்றவை செய்யப்படுகின்றன.