எகிப்து தேசத்தின் அரசர்களை பார்வோன் என அழைப்பது மரபு. இந்த அரசர்கள் மக்களைப் பற்றி அதிகம் கவலைப்படாத சுகபோகிகளாக இருந்தனர். பொய்க்குற்றம் சுமத்தப்பட்ட யோசேப்பு பார்வோனின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். எனினும் கடவுள் அவரோடு இருந்தார். கனவுகளின் பலன்களை அறிந்து அவற்றை விளக்கிச் சொல்லும் ஆற்றலைக் கடவுள் அவருக்குக் கொடுத்திருந்தார்.
அரசனின் கோபத்துக்கு ஆளாகி சிறையில் அடைப்பட்டுக் கிடந்தான் அரண்மனை திராட்சைரசக்காரன். அவன் கண்ட கனவுக்கு விளக்கம் தந்தார் யோசேப்பு. “மரண தண்டனையிலிருந்து தப்பித்து நீ மீண்டும் அரசனின் அன்பையும் இழந்த வேலையையும் பெறுவாய்” என்று கூறினார் . அவ்வாறே நடந்தது. ஆனால் திராட்சைரசக்காரன் நன்றி மறந்துபோனான். யோசேப்பு பற்றி அரசரிடம் எடுத்துக் கூறுவதாக வாக்களித்துச் சென்றவன், அதை அடியோடு மறந்துபோனான். யோசேப்புவுக்குச் சிறையிலேயே இரண்டு ஆண்டுகள் கழிந்தன.
கனவில் கண்ட பசுக்களும் கதிர்களும்
இதற்கிடையில் பார்வோன் அரசர் இரண்டு கனவுகளைக் கண்டார். முதல் கனவில் நைல் நதியின் அருகில் அரசர் நின்றுகொண்டிருக்கிறார். அப்போது ஆற்றிலிருந்து ஏழு கொழுத்த பசுக்கள் வெளியே வந்து புற்களை மேயத் தொடங்கின. இப்போது மேலும் ஏழு பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்தன. அவை மெலிந்தும் பார்க்க அருவருப்பாகவும் இருந்தன. இவை மேய்ந்துகொண்டிருந்த கொழுத்த ஏழு பசுக்களையும் விழுங்கிவிட்டன. இந்தக் காட்சியைக் கண்டு திடுக்கிட்ட பார்வோன் கனவிலிருந்து விழித்தெழுந்தார்.
மீண்டும் தூக்கம் கண்களைத் தழுவிட, தூங்கிப்போனார். இப்போது இரண்டாவது கனவு தோன்றியது. அந்தக் கனவில் ஒரே செடியில் ஏழு செழுமையான கதிர்கள் வளர்ந்து காற்றில் கர்வத்துடன் அசைந்தாடிக் கொண்டிருந்தன. மற்றொரு செடியில் பாதிக்கும் அதிகமாய் பதர்களாய் மாறி, மெலிந்த தானியங்களைக் கொண்டிருந்த ஏழு கதிர்கள் காற்றில் அசைந்துகொண்டிருந்தன. இந்த மெலிந்த ஏழு கதிர்களும் செழுமையான ஏழு கதிர்களை விழுங்கின. இம்முறை திடுக்கிட்டு விழித்த அரசர் தூக்கம் கலைந்து கவலை கொண்டார். விடிந்ததும் ஞானிகளையும் மூப்பர்களைவும் அழைத்துத் தான் கண்ட கனவுக்கான பலன்களைக் கூறிமாறு கேட்டார். ஆனால் யாருக்கும் கனவுகளுக்கான அர்த்தம் விளங்கவில்லை. ஏமாற்றம் அடைந்த பார்வோன் குழப்பத்தில் இருந்த சமயத்தில் கோப்பையை ஏந்திவந்து அரசனிடம் நீட்டினான் திராட்சைரசக்காரன். அப்போது கனவுகளுக்கு நிஜமான விளக்கத்தைத் தரும் ஒருவரைத் தான் சிறையில் இருந்தபோது சந்தித்ததாக அரசரிடம் எடுத்துரைத்தான்.
யோசேப்புவுக்கு அழைப்பு
இதைக் கேட்ட அரசர் சிறையிலிருந்து யோசேப்புவை அழைத்து வரச்செய்தார். மூப்பர்களால் கண்டறிய முடியாத ரகசியத்தைச் சிறியவனாகவும் கானான் தேசத்தவனாகவும் இருக்கும் இந்த அந்நிய இளைஞனா நமக்குக் கூறிவிடப்போகிறான் என்று யோசேப்புவை நோக்கி அலட்சியமான பார்வையை வீசினார் அரசர். “ உன்னால் என் கனவுகளுக்கு விளக்கம் தர முடியுமா இளைஞனே?” என்றார் இளக்காரம் தொனிக்க. உடனே யோசேப்பு பணிவுடன், “என்னால் முடியாது ... ஆனால் கடவுள் உமக்காக விளக்கம் தருவார்” என்றார். பணிவும் ஞானமும் மிக்க பதிலால் மனமிறங்கிய அரசர், தன் இரு கனவுகளையும் யோசேப்பிடம் கூறினார்.
கனவுகளைத் தெளிவாகக் கேட்ட யோசேப்பு பார்வோனை நோக்கி, “ அரசே… இந்த இரண்டு கனவுகளுக்கும் ஒரே பொருள்தான். இந்தத் தேசம் எதை எதிர்கொள்ளப்போகிறது என்பதைக் கடவுள் எனக்குக் கூறிவிட்டார். அந்த ஏழு செழுமையான பசுக்கள், ஏழு செழுமையான கதிர்கள் ஆகியவை இனி வரப்போகும் ஏழு வளமான ஆண்டுகளைக் குறிக்கும். ஏழு மெலிந்த பசுக்களும், ஏழு மெலிந்த கதிர்களும் வளமான ஏழு ஆண்டுகளைத் தொடர்ந்து வந்து ஏழு ஆண்டுகள் தாக்கப்போகும் கொடும் பஞ்சத்தைக் குறிக்கும். இதையே கனவின் மூலம் கடவுள் உமக்குக் காண்பித்திருக்கிறார். இந்தக் கனவை ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள். ஏழு ஆண்டுகளுக்கு எகிப்தில் ஏராளமான உணவுப் பொருட்கள் விளைந்து கொழிக்கும். பிறகு அடுத்து வரும் ஏழு ஆண்டுகள் பஞ்சமும் பசியும் இருக்கும். எனவே, புத்திசாலியான ஒருவரிடம் உமது நாட்டின் தானியக் களஞ்சியத்தின் பொறுப்பை ஒப்படைத்து வரப்போகும் பஞ்சத்தின் அழிவிலிருந்து உமது குடிமக்களைக் காப்பாற்றும்” என்றார்.
30 வயதில் ஆளுநர்
இதைக் கேட்டு முதலில் பயந்த அரசர், இத்தனை துல்லியமாக விளக்கம் தந்ததோடு நில்லாமல் வரப்போகும் பஞ்சத்தை எப்படிச் சமாளிக்க வேண்டும் என்ற ஆலோசனையையும் கொடுத்ததால் யோசேப்பு மீது நம்பிக்கை கொண்டார்.
“இளைஞனே..! வரப்போகும் பஞ்சத்தைக் கடவுள் உன் வழியாகத் தெரியச் செய்தார். உன்னைப்போல் அறிவுக் கூர்மையும், ஞானமும் உள்ளவர்கள் வேறு யாருமில்லை. உன்னை என் நாட்டிற்கு ஆளுநராய் ஆக்குகிறேன். உன் கட்டளைகளுக்கு என் ஜனங்கள் அடங்கி நடப்பார்கள். நான் மட்டுமே உன்னைவிட மிகுந்த அதிகாரம் பெற்றவனாக இருப்பேன்” என்று கூறி, யோசேப்புவுக்கு அரசுச் சின்னம் பொறிக்கப்பட்ட தன் முத்திரை மோதிரத்தைக் கொடுத்து பதவியில் அமர்த்தினார் அரசர்.சாப்னாத்பன்னேயா என்ற புதிய பெயரையும் யோசேப்புவுக்குச் சூட்டினார்.
அப்போது யோசேப்புக்கு 30 வயதே ஆகியிருந்தது. இத்தனை சிறிய வயதில் எங்கிருந்தோ வந்த ஒருவன் எகிப்தின் ஆளுநராக ஆனது அரசனுக்குக் கீழ் இருந்த அமைச்சர்களையும் மூப்பர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பதவியில் அமர்ந்ததும் முதல் வேலையாகச் சிறந்த பணியாட்களைத் தேர்ந்தெடுத்தார் யோசேப்பு. நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கிய யோசேப்பு, அமோக விளைச்சல் ஏற்பட்டு அறுவடையால் மக்கள் மகிழ்ச்சியில் திளைத்திருந்ததைக் கண்டார். மக்கள் தங்கள் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை அரசனுக்குரிய வரியாகச் செலுத்த உத்தரவிட்டார். மக்கள் மனம் கோணாமல் அரசனுக்குரியதைச் செலுத்தினர். யோசேப்பு அவற்றைச் சேமித்து வைத்தார். ஒவ்வொரு நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள தானியங்களையெல்லாம் சேமித்து வைத்தார். கடற்கரை மணலைப் போன்று எகிப்தின் தானிய சேமிப்பு குவியத் தொடங்கியது.