பிரம்மச்சரியம் ஒருத்தனைத் தயார் பண்ணுகிறது என்றால் பெண்ணின் கதி என்ன? அவளுக்கு உபநயனமோ, பிரம்மச்சரிய ஆச்ரமமோ இல்லையே. புருஷன் மனசு கட்டுப்பட்டிருக்கிற மாதிரி அவளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வராமல் இருக்கலாமா? சீர்திருத்தக்காரர்கள் சொல்கிற மாதிரி ஸ்திரீகளுக்கு உபநயனமும் பிரம்மச்சரிய ஆச்ரமமும் இல்லாமல் அநீதிதான் இழைத்திருக்கிறதா என்றால் - இல்லை.
புருஷனுக்கு உபநயன-பிரம்மச்சரியங்களுக்கு அப்புறம் ஏற்படுகிற விவாஹ சம்ஸ்காரமேதான் ஒரு பெண்ணுக்கு உபநயன ஸ்தானத்தில் அமைகிறது. குழந்தை பிராயத்திலிருந்து இவளுக்கு வயது வந்து தாம்பத்தியம் ஆரம்பிக்கிற வரையில், குருவிடம் பிரம்மச்சாரி மனஸை அர்ப்பணம் பண்ணின மாதிரி இவள் பதியிடம் பண்ண வேண்டும்.
“ஸ்த்ரீணாம் உபநயன ஸ்தானே விவாஹம் மநுரப்ரவீத்” என்பது மநுஸ்மிருதி.
இதற்கு ஒரு வெளி அடையாளம் காட்டு என்றால் சட்டென்று, ‘உபநயனத்திலே ஒரு பையனுக்குப் பூணூல் போடுகிற மாதிரி விவாஹத்திலே பெண்ணுக்கு மங்கள் ஸூத்திரம் கட்டப்படுகிறது' என்று சொல்லிவிடலாம்.
உப-நயனம் என்றால் ‘கிட்டே அழைத்துப் போவது', அதாவது ‘குருவினிடம் அழைத்துப் போய் குருகுல வாசத்தில் பிரம்மசரியம் அநுஷ்டிக்கும்படிப் பண்ணுவது' என்று அர்த்தம் சொன்னேன். ஸ்திரீகளுக்குப் பதியே குரு. அவனிடம் கொண்டு சேர்க்கிற விவாஹம்தான் அவளுக்கு உபநயனம்.
ஹ்ருதய-ஸமர்ப்பணம் - சரணாகதி - தான் ஜன்மாவைக் கடைத்தேற்றுகிற பெரிய ஸாதனம். கீதையின் சரம ச்லோகத்தில் சொன்ன இந்த சரணாகதியை தெய்வமோ, குருவோ, பதியோ, யாரிடமோ பண்ணிவிட்டால் போதும். அப்புறம் தனக்கென்று ஒன்றும் இல்லை. நாம் யாரிடம் சரணாகதி பண்ணினோமோ அவர்கள் மூலம் ஈச்வரன் அநுக்ரஹம் பண்ணிவிடுவான்.
இம்மாதிரியாகப் பிள்ளையாகப் பிறந்த ஒருத்தனை குருவிடம் சரணாகதி பண்ணும்படியாக உபநயனத்தையும், அவன் கல்யாணம் செய்துகொள்ளும் போது அந்தக் கல்யாணத்தையே பெண்ணாய்ப் பிறந்தவள் பதியிடம் சரணாகதி பண்ணும்படியாக விவாஹ ஸம்ஸ்காரத்தையும் ரிஷிகள் ஏற்பாடு செய்து தந்திருக்கிறார்கள்.
அதாவது, பெண்ணை மட்டும் மட்டம் தட்டி அவளைப் புருஷனுக்கு சரணாகதி பண்ணச் சொல்லவில்லை. அந்தப் புருஷனையும் விவாஹத்துக்கு முந்தியே குருவுக்கு சரணாகதி பண்ணச் சொல்லியிருக்கிறது. அவன் எந்த வயசில் இந்த சரணாகதியைச் செய்கிறானோ அந்த வயசில் இவள் அவனைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு சரணாகதி பண்ணவேண்டும் என்பது சாஸ்திரத்தின் அபிப்ராயம்.
உசத்தி-தாழ்த்தி, உரிமை (right), ஸ்தானம் (position) முதலான விஷயங்களைவிட சித்த சுத்தியைப் பெரிதாக நினைத்தால் அப்போது சரணாகதிதான் முக்கியமாகிறது. அதற்கு வழியாகத்தான் புருஷனுக்கு உபநயனமும் பெண்ணுக்கு விவாஹமும் விதிக்கப்பட்டிருக்கின்றன என்று புரிந்து கொள்ள வேண்டும்.
காயத்ரீ ஜபம்
காயத்ரீ என்றால், “எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது” என்பது அர்த்தம்.
காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே |
கானம் பண்ணுவதென்றால் இங்கே பாடுவதில்லை, பிரேமையுடனும் பக்தியுடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப் பற்றிச் சொல்லும் பொழுது, காயத்ரீம் சந்தஸாம் மாதா என்று இருக்கிறது. சந்தஸ் என்பது வேதம். வேத மந்திரங்களுக்கெல்லாம் தாயார் ஸ்தானம் காயத்ரீ என்று இங்கே வேதமே சொல்கிறது. 24 அக்ஷரம் கொண்ட காயத்ரீ மந்திரத்தில் ஒவ்வொன்றும் எட்டெழுத்துக் கொண்ட மூன்று பாதங்கள் இருக்கின்றன. அதனால் அதற்கு 'த்ரிபதா' காயத்ரீ என்றே ஒரு பெயர் இருக்கிறது. இந்த ஒவ்வொரு பாதமும் ஒவ்வொரு வேதத்தின் ஸாரம். அதாவது, ரிக், யஜுர், ஸாமம் என்ற மூன்று வேதங்களையும் இறுக்கிப் பிழிந்து கொடுத்த essence (ஸாரம்) காயத்ரீ மஹாமந்திரம். அதர்வத்துக்குத் தனி காயத்ரீ இருக்கிறது. இரண்டாவது வேதத்தை உபநயனம் செய்து கொண்டே அதை உபதேசம் பெற வேண்டும்.
த்ரிப்ய ஏவது வேதேப்ய: பாதம் பாதமதூதுஹம்
(மநுஸ்மிருதி)
காயத்ரீ மூன்று வேதத்திலிருந்து ஒவ்வொரு பாதமாக எடுத்தது என்று மநுவே சொல்கிறார். வேதத்தின் மற்றதையெல்லாம் விட்டுவிட்ட நாம் இதையும் விட்டால் கதி ஏது?
சாஸ்திரப் பிரகாரம் செய்ய வேண்டிய காரியங்களுக்குள் எல்லாம் முக்கியமான காரியம் காயத்ரீ ஜபம். ஸ்திரீகளுக்குப் பதியே குரு. அவனிடம் கொண்டு சேர்க்கிற விவாஹம்தான் அவளுக்கு உபநயனம்.