ஆன்மிகம்

நல்ல சமாரியனாக இருங்கள்

செய்திப்பிரிவு

ஒருவர் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவரை அடித்துக் குற்றுயிராகவிட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாக அவ்வழியே வந்தார். காயமுற்றுத் துன்புற்றுக் கிடக்கும் அவரைப் பார்த்தவுடன் அந்த குரு விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்திற்கு வந்து அவரைக் கண்டதும் மறுபக்கம் விலகிச் சென்றார். அவ்வழியே பயணம் செய்து கொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து, துன்புற்றுக் கிடக்கும் அவன் நிழல்கூடப் படாமல் ஒதுங்கிப்போனார். அப்போது அவ்வழியே வந்த சமாரியர் ஒருவர் வலியால் அலறித் துடிப்பவனைக் கண்டு பரிவுகொண்டார். அவனது காயங்களில் திராட்சை மதுவும், எண்ணையும் வார்த்து அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் ரோம நாணயங்களை சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து காயம்பட்டவரைக் கவனித்துக் கொள்ளவும் மேற்படி செலவுக்கும் தருகிறேன் என்றும் கூறிச்சென்றார். (லூக் 10:30-35)

இந்தக் கதையில் நாம் காணும் குரு தேவாலயப் பணியாற்றுபவர். இரண்டாவதாக வந்த லேவியரோ தேவாலய பலிப்பொருட்களின் மேல் எண்ணெய் ஊற்றுபவர். அவரிடம் எண்ணெய் இருந்தும் பாதிக்கப்பட்ட மனிதருக்கு முதலுதவி செய்யாமல் விலகிப்போனவர். ஆனால் காலங்காலமாக யூதர்கள் பகையாக எண்ணக்கூடிய சமாரியரோ யூதச்சட்டங்களை அறியாதவர். மதச்சட்டப்படி ஆலயநுழைவுக்குக் கூடத் தடைவிதிக்கப்பட்டவர். ஆனால் அவர்தான் மனித மாண்பு மிக்கவராக காட்சி தருகிறார். அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவரின் மேல் பரிவுகொண்டார். பாதிக்கப்பட்டவரைப் பாதுகாப்பாகச் சாவடிக்கு அழைத்துச்சென்று அவருக்கான சிகிச்சைப் பொறுப்பையும் ஏற்று கவனித்துக்கொண்டார்.

இனம்,மொழி,நிறம் என்று வேற்றுமைகளைக் கடந்து துன்பத்தில், இக்கட்டுகளில் சிக்கிக் கொண்டவர் யாரென்று பாராமல் உதவுவோம். மனித மாண்பைக் காத்து இறை இயேசுவின் சாயலாக விளங்கிய அந்த ‘நல்ல சமாரியனாக’ மாற இறைவனிடமும் வேண்டுதல் செய்வோம்!

SCROLL FOR NEXT