ஆன்மிகம்

வான்கலந்த மாணிக்கவாசகம் 20: நமக்குள்ளே ஆடும் இறைவன்

ந.கிருஷ்ணன்

இறைச்சிந்தனை என்பது நடமாடும் கோயில்களான சக உயிர்களுக்குச் செய்யும் தொண்டு. துளியும் இறைச்சிந்தனையின்றி, ‘நான், எனது’ என்று பெரும்பகுதி வாழ்நாளைக் கழித்துவிட்டோர் பலர்; இவர்களுக்கும் இறையருள்(முத்தி) கிடைக்கும் என்ற நம்பிக்கை தருவது ‘அதிசயப்பத்து’ என்னும் இப்பதிகம்.

வழிகாட்டும் துருவநட்சத்திரம்

‘வாழ்கிலேன் கண்டாய்’ என்று இறைவனைப் பிரிந்த துயரம் பொறுக்க இயலாமல் மணிவாசகர் தன்னை மறந்து அழுது, உருகிப் பாடிய திருவாசகங்கள் நம் உள்ளத்தை உருக்குவனவாக உள்ளன. தம் கண்ணசைவில் எதனையும் ஏவல் கொள்ளும் முதலமைச்சராக, சகல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்தவர் மணிவாசகர்; ஒருவேளை, ஏழ்மையில் வாழும் கடினமான துறவு வாழ்வு பொறுக்க முடியாமல் ‘வாழ்கிலேன்’ என்று இறைவனிடம் முறையிட்டாரோ என்ற கேள்வி எழுவதும் இயல்புதானே! இக்கேள்விக்கான மணிவாசகரின் பதில், துருவ நட்சத்திரமாக நமக்கு வழிகாட்டுகின்றது.

ஏழ்மை எதனால்?

பொருட்செல்வம் இல்லாதவன் இவ்வுலகில் மட்டுமே ஏழை. இறைவனின் திருநாமமாகிய ஐந்தெழுத்தை எண்ணாமல் வாழ்ந்துவிட்டதால், பேரின்ப அருட்செல்வத்தை இழந்து, தாம் ஏழ்மை அடைந்ததாக வருந்துகிறார் மணிவாசகப் பெருமான். “எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும்! என் ஏழைமை அதனாலே!” என்பதே அற்புதமான அத்திருவாசக வரிகள்.

“இறைவன் திருவடியைப் புகழும் செல்வமே உண்மையான செல்வம்” என்னும் பொருள்தரும் “செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே” என்று திருஞானசம்பந்தர் அருளிய தமிழ்மறை இதை உறுதி செய்கின்றது. நிலைத்த அருட்செல்வத்தைப் பெற, சிவபெருமானின் ஐந்தெழுத்துத் திருநாமத்தையும், திருவடியையும் எப்போதும் வணங்கும் எண்ணம் நமக்கு ஏற்படவேண்டும்.

தினமும் ஐந்துமுறை இறைவனைத் தொழவேண்டும் என்னும் இசுலாமியச் சிந்தனையும், வாரத்தில் ‘ஞாயிறு’ என்னும் ஒரு நாளையாவது இறைச்சிந்தனைக்காகவே வைக்கவேண்டும் என்னும் கிறித்துவச் சிந்தனையும் எவ்வளவு அற்புதமான வழிகாட்டல்கள்! இறைச்சிந்தனையாம் மல்லிகை எத்தோட்டத்தில் மலர்ந்தாலும் தரும் மணம் ஒன்றல்லவா!

இறைவனின் திருவருள் பெற, பயன் கருதாத இறைத்தொண்டாம் நல்வினைகள் செய்திருக்கவேண்டும்; அதற்கு வழிகாட்டும் அருட்கலைகளை அறிந்த ஞானிகளோடும் தாம் சேரவில்லை; அத்தகைய பேறு தமக்கு இல்லை; மண்ணுலகிலே பிறந்து, தொண்டு செய்யாமல் வெற்று வாழ்க்கை வாழ்ந்து, இறந்து மண்ணோடு மண்ணாய்ப் போவதற்கே தமக்குத் தகுதி உள்ளது; இருந்தும், சிறப்பு மிக்க அண்ணல் இறைவன், தகுதியற்ற தம்மையும் ஆண்டுகொண்டு, இறையடியவர்களுடன் சேர்த்துக்கொண்ட அதிசயத்தை விளக்க, ‘அதிசயம் கண்டாமே’ என்று உருகுகிறார் பெருமான் மணிவாசகர்.

எண்ணிலேன் திருநாமம் அஞ்சு எழுத்தும்! என் ஏழைமை அதனாலே!

நண்ணிலேன் கலை ஞானிகள் தம்மொடு, நல் வினை நயவாதே!

மண்ணிலே பிறந்து, இறந்து, மண் ஆவதற்கு ஒருப்படுகின்றேனை!

அண்ணல், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!

(திருவாசகம்:அதிசயப்பத்து-6)

இதுவரை வீணான வாழ்நாளை எண்ணி வருந்தாமல், எஞ்சியுள்ள வாழ்நாளில் இறையருளைப் பெற இயலும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையைத் தரும் நமக்கான திருவாசகம் இது.

இறைத்தமிழ் திருவாசகம்

எதிர்பாராததும், நினைப்புக்கு அப்பாற்பட்டு நடப்பதையுமே அதிசயம் என்போம். வாதவூரார் முதலமைச்சர் பதவியைத் துறந்து மணிவாசகரானது அதிசயம்; மணிவாசகருக்காக, நரிகளைப் பரிகளாக்கியதும், இறைவனே கொற்றாளாக வந்து, பிட்டுக்கு மண் சுமந்ததும் பெரும் அதிசயமாகும். இதுவரை நாம் அனுபவித்த இயல், இசை, நாடகம் என்னும் முப்பரிமாண முத்தமிழ், என்புருக்கித் தேனூறும் திருவாசக இன்பத்தமிழாக அமைந்து ‘இறைத்தமிழ்’ என்னும் நான்காம் பரிமாணத்தைப் பெற்றதும் அதிசயம் தானே!

இறைவனே எழுத்தனானான்

திருவாசகத்தின் இறைத்தமிழில் மயங்கி, இறைவனே தன் கையால் திருவாசகத்தைப் படியெடுத்து வைத்துக்கொண்டான்; எதற்காக? ‘இறைவனின் பேரூழிக்காலத் தனிமைக்குத் துணையாக’ என்பார் பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார்.

கடையூழி வரும் தனிமை கழிக்க அன்றோ அம்பலத்தின்

உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே! – தமிழ்த்தாய் வாழ்த்து.

இறைவனை ‘நீதியே’ என்றழைத்தார் மணிவாசகர்; “வேண்டுதல்-வேண்டாமை இல்லாது, அனைத்து உயிர்களையும் மக்களாகப் பாவித்து, சமமாகக் கருதுதல் நீதி! அவரவருக்கு உரியன கிடைக்குமாறு செய்தல் நீதி! எடுப்பதும் கொடுப்பதும் அதிகமில்லாமலும் குறைவில்லாமலும் நடப்பது நீதி! இன்ப துன்பங்களில் பாதிக்கப்படாமல் ஒரு நிலையாய் நிற்பது நீதி! நீதியே உலகத்தின் இயங்கு முறைகளை உருவாக்குகின்றது. அரச நீதிகள் தவறினாலும், இயற்கையாய் அமைந்த நீதிகள் ஒருபோதும் தவறியதில்லை!” என்று நீதியை வரையறுப்பார் தவத்திரு.குன்றக்குடி அடிகளார்.

இறைநீதியும் மனிதநீதியும்

“ஆதிகால மனித வாழ்க்கையில் கூட்டு வாழ்க்கையும், கூட்டு உழைப்பும் இருந்தது; ஆக்கிரமிப்போ, சுரண்டல்களோ இல்லாத நீதி இருந்தது. ‘கடவுளுடன் பேரம் பேசும் பரிகார முறைகள்’ அறிவு வளர்ந்த மனிதர்களால் உருவாக்கப்பட்டது; அவை பாவச்செயல்களைப் பெருக்கின; ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’ என்று இயற்கை நியதிகளையும், நீதியையும் மாற்றும் சட்டங்களை உருவாக்கினான் மனிதன்; அதையும் வளைத்து மாற்றத் தயங்குவதில்லை” என்பார் அடிகளார்.

இறைநீதியோ, வேண்டுதல் வேண்டாமை இன்றி, அனைவருக்கும் பொதுவானது. அறிவின் தலைவன் நான்முகன்; செல்வத்தின் தலைவன் திருமால்; நீதியே வடிவான சிவபெருமானின் திருமுடியையும், திருவடியையும் இவ்விருவரின் அறிவாலோ, செல்வத்தாலோ காணமுடியவில்லை. இதை “பங்கயத்து அயனும், மால் அறியா நீதியே” என அருட்பத்து ஒன்றாம் பாடலில் அருளினார் மணிவாசகர்.

முதலமைச்சராக அரசாணையை நிறைவேற்றும் கடமையில், நீதி சாராதவைகளும் அடக்கம். குதிரைகள் வரும் என்று அரசனுக்குச் செய்தி சொன்னதும் நீதிக்கு முரணானது. இவையெல்லாம் மணிவாசகரின் சிந்தனையைப் பாதித்த விடயங்கள்; எனவே, “நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்” என்றார்.

தாம் நீதியைச் சார்ந்து நடக்கும் இறையன்பர்களுடன் உறவு கொண்டிருந்தால், அவர்கள் தம்மை நீதி தவறாத தொண்டுநெறிக்கு வழிகாட்டியிருப்பார்கள்; அவ்வாறும் தாம் நடக்கவில்லை என்பதை “நினைப்பவரோடும் கூடேன்” என்றார். நீதி சாராத வாழ்க்கை, தீ வினைகளை ஈட்டி, பிறந்து இறந்து உழலும் நிலையையே தரும்; இதை “ஏதமே பிறந்து இறந்து உழல்வேன் தனை” என்னும் திருவாசகவரி உணர்த்துகிறது.

தாயின் கருணை

அத்தகைய கீழ்நிலையை அடைந்துவிட்ட தம்மைக் காக்க தொடக்கம் முடிவு அற்ற (அநாதி) நிரந்தமாய் உள்ள இறைவன், ஆதியானான்; அம்மையப்பனாக வந்து ‘என் அடியான்' என்று அறிவித்து ஆட்கொண்டான்; தன் அடியவருடன் கூட்டி அதிசயம் நிகழ்வித்தான் என்றார் மணிவாசகர்.

நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்! நினைப்பவரொடும் கூடேன்!

ஏதமே பிறந்து, இறந்து, உழல்வேன் தனை, ‘என் அடியான்’ என்று

பாதி மாதொடும் கூடிய பரம்பரன்! நிரந்தரமாய் நின்ற

ஆதி! ஆண்டு, தன் அடியரில் கூட்டிய, அதிசயம் கண்டாமே!

(திருவாசகம்: அதிசயப்பத்து-2)

நீதி தவறி வாழ்ந்ததை மன்னிக்கும் கருணை அன்னைக்கே உரிய பண்பு; இதைக் குறிப்பிடவே, “பாதி மாதுடன் கூடிய பரம்பரன்” என்றார் பெருமான்.

சக மனிதனை நேசிப்பது; போற்றுவது; தொண்டு செய்வது; பிறர் பொருளைக் கவராமல் இருப்பது; பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புவது; இவையே நீதியான இறைவனை அடைய, முறையான வாழ்க்கை நெறிகள்; இவைகளைச் சிக்கெனக் கடைப்பிடித்து முழுவிடுதலை (முத்தி) என்னும் நிலைப்பேறு பெறுக! என்கிறது இத்திருவாசகம்.

நம்முள்ளே ஆடும் இறைவனின் ஆனந்தக் கூத்தைத் தரிசிக்கும் தேர்ந்த மணிவாசகங்களை அடுத்த வாரம் சுவைக்கலாம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

SCROLL FOR NEXT