ஆன்மிகம்

முக்தி தரும் கண்ணன்

பிருந்தா கணேசன்

கண்ணனை ஆன்மிகக் குருவாகவும் சாரதியாகவும் கண்டான் காண்டீபன். மானம் காத்த தெய்வமாகக் கண்டாள் பாஞ்சாலி. நண்பனாகக் கண்டான் குசேலன். தங்களை ஆகர்ஷிக்கும் கிருஷ்ணனாக ,காதலனாகக் கண்டனர் கோபிகையர். பாரதியோ சேவகனாக கண்டான். ஆனால், அவனை மன்னனாக இன்றளவும் காண்கின்றனர் துவாரகாபுரி மக்கள்.

துவாரகை, கட்ச் வளைகுடா அருகில் உள்ளது. வடமேற்குக் கோடியில் புள்ளியைப் போல் அமைந்துள்ளது. நம்முடைய தெற்குக் கடற்கரையிலிருந்து செல்வதற்கு பல மணி நேரம் பிடிக்கும். மோட்சதாயிகா(முக்தி தருபவன்) என்று போற்றப்படுபவனை தரிசிப்பது என்றால் லேசான விஷயமா எனா? பண்டைய வேத சாஸ்திரங்கள், இந்தப் புண்ணிய தலம் கிருஷ்ணருடைய ராஜ்ஜியமாக இருந்ததாகத் தெரிவிக்கின்றன. அவர் தன்னுடைய யாதவ குலத்தை ஜராசந்தனிடமிருந்து காப்பதற்கு, மதுராவை விட்டு இங்கு வந்து கடலில் ஓர் பொன்னாலான நகரத்தை விஸ்வகர்மாவின் உதவியுடன் நிர்மாணித்தார். அதற்கு குசஸ்தலி (அ )துவாரவதி என்றும் பெயரிடப்பட்டது. அதுவே பின்னால் துவாரகா என்று மாறியது. யாதவர்களும் கிருஷ்ணரும் மறைந்த பின்னர் அந்தப் பிராந்தியமே கடலில் மூழ்கியது. கிருஷ்ணரின் மாளிகை மட்டுமே மிஞ்சியது.

இன்றைய துவாரகை

கிருஷ்ணனின் கொள்ளுப் பேரனான வஜ்ரனபி என்பவன் அந்த மாளிகைக்கு அருகிலேயே ஒரு கோவிலைக் கட்டினான். இன்றைய துவாரகை கோமதி நதியும் அரபிக் கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைதியாக அமர்ந்துள்ளது. செழிப்பான வியாபாரத் தலமாக இருந்த இந்த இடம், தற்போது தேசத்தின் ஒரு ஓரத்தில் சிறு புள்ளியாக, சிற்றூராக இருந்து வருகிறது. இருப்பினும் லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்வசம் இழுக்கும் உன்னதத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. காசியைப் போலவே இதற்கும் அகன்ற படித்துறைகள் உண்டு.

கோபுர உச்சியில் கிருஷ்ணனின் கொடி

கோமதி நதியில் முழுக்கு போட்டு விட்டு கோவிலை நோக்கிச் செல்கிறோம். இதற்கு இரண்டு வாயில்கள். மார்க்கெட்டிலிருந்து வரும் மோட்சத் துவார் எனப்படும் பிரதான வடக்கு வாயில் வழியாக உள்ளே நுழைகிறோம். ஊரிலேயே மிக உயர்ந்து நிற்கும் இதன் கோபுரம் தூரத்திலிருந்தே தெரிகிறது. கோவிலைச் சுற்றிலும் மதில் சுவர். ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட சாரதா பீடம் கோவில் வளாகத்திலேயே உள்ளது. கோவில் நிர்வாகமும் அதன் பார்வையில்தான். கோபுர உச்சியிலிருந்து 52 கஜம் அகலமுள்ள கொடி, பத்து கிலோமீட்டர் தூரம் வரை தெரியுமாம். மென்மையான சுண்ணாம்பு கற்களான இந்த கோவில், கருவறை, ரேழி மற்றும் ஒரு பெரிய மண்டபமும் அதைச் சுற்றிலும் மூன்று தலைவாசல்களும் கொண்டுள்ளது.

கோவிலில் நுழைந்து நடுவில் நிற்கிறோம். ஒரு கோஷ்டி பஜனை செய்கிறது. மற்றொன்று நாம சங்கீர்த்தனம். எதிர்ப் பக்கத்தில் கீதையும் சஹஸ்ரநாமமும் சிறார்களால் பாராயணம் செய்யப்படுகின்றன. எல்லாம் மடத்தின் ஏற்பாடுகள். ஒருபுறம் பிரதான கோபுரம். மற்றொரு புறம் அதை விடச் சிறிய கோபுரம். ஐந்து அடுக்குகளைக் கொண்டது பிராதன கோபுரம். விண்ணை முட்டும் இந்தக் கோபுரங்களின் அலங்கரிக்கப்பட்ட அமைப்பு அசர வைக்கிறது.

துவாரகையின் அரசனுக்கு ஜே

ஐந்து அடுக்குள்ள கோவிலின் கருவறை ஜகத் மந்திர் என்று பெயர் பெற்று 72 தூண்களின் மேல் நிற்கிறது. பக்தர்கள் கூடும் அரங்கம் இங்கேதான் உள்ளது. இதன் நேர்த்தியான சிற்பக் கலை ரசிக்க வைக்கிறது. கோவிலின் கீழ்பகுதி 16-ம் நூற்றாண்டையும், கோபுரங்களை உடைய மேற்பகுதி 19-ம் நூற்றாண்டையும் சார்ந்தவை. கோவிலின் வெளிப்புறம் அற்புதமான செதுக்கல்களையும் அதற்கு மாறாக உள்புறம் எளிமையாகவும் தோற்றமளிப்பது தான் இதன் சிறப்பம்சம்.

அடுத்து வருவது கருவறை. “துவாரகாதீசனுக்கு (துவாரகையின் அரசன்) ஜெய்!” என்ற கோஷம் விண்ணை பிளக்கிறது. கிருஷ்ணர் சங்கு சக்ர கதாபாணியாக பத்மத்துடன் ராஜ அலங்காரத்தில் ஜொலிக்கிறார். இங்கு அச்சுதனுக்கு திரிலோக சுந்தர் என்ற பெயரும் உண்டு. சதுர்புஜனின் விக்கிரகம் 2.25 அடி உயரம். பள பளவென்ற கருப்புக் கல்லால் ஆனது. தாய் தேவகியின் சன்னிதி, கிருஷ்ணரின் சன்னிதியை எதிர்நோக்குகிறது. அவரின் அருகேயே சந்தான கிருஷ்ணரும்,சின்ன கிருஷ்ணரும் உள்ளனர். அவர் பூக்களாலும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.

கோவிலின் பின்வாசல் வழியாக வெளியே வருகிறோம். 56 படிகள். இறங்கினால் கோமதி நதி. கோமதி களிப்புற ஓடிக் கொண்டிருக்கிறாள். கால்வாயாக ஓடிக் கடலில் கலக்கிறாள். தண்ணீர் சிறிது உப்புக் கரித்தாலும் பரிசுத்தமாக உள்ளது. படித்துறையில் நடந்து சென்றால் பல கோவில்களை தரிசிக்கலாம். சிறிது தூரம் சென்று திரும்பிப் பார்த்தால் கோவில், ஆழியிலிருந்து எழுவது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.

துவாரகா செல்லும் வழி

ஆகாய மார்க்கம்: ஜாம்நகர்தான் அருகிலுள்ள விமான நிலையம். அல்லது அகமதாபாத்வரை பறந்து சென்று அங்கிருந்தது ரயிலிலோ தரை மார்க்கமாகவோ செல்லலாம்.

ரயில்: சென்னையிலிருந்து நவஜீவன் எக்ஸ்பிரஸ் பிடித்து மறுநாள் அகமதாபாத்திலிருந்து துவாரகைக்கு ரயிலில் செல்லலாம்.

SCROLL FOR NEXT