ஆன்மிகம்

படிப்பாற்றல் தரும் அழகிய திருமுகம்

செய்திப்பிரிவு

ஹயக்ரீவர் ஜெயந்தி: செப்டம்பர் 13

மது, கைடபர் என்ற அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். படைக்கும் தொழிலை வேதத்தின் துணை கொண்டு நடத்திவந்தார் பிரம்மா. இந்நிலையில் வேதத்தைத் திருடிக்கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டனர் அசுரர்கள். தேவர்களால் மீட்க இயலாத வேதத்தை மகாவிஷ்ணு, ஹயக்ரீவ குதிரை முகத்துடன் மனித உருவம் தாங்கி, அசுரர்களுடன் போரிட்டு மீட்டார்.

அவரது உக்கிரகத்தைத் தணிக்க, அன்னை லஷ்மி அருகில் வர ஆனந்தமடைந்தார் ஹயக்ரீவர். தனது மடியில் மகாலஷ்மியை அமர்த்திக் கொண்டதால், லஷ்மி ஹயக்ரீவர் என்று அழைக்கப்பட்டார். வேதத்தை மீட்ட பெருமாள் ஆனதால் இவரைத் துதித்தால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம் என்பது ஐதீகம். லஷ்மி ஹயக்ரீவ ஜெயந்தியை முன்னிட்டு, பல விஷ்ணு கோயில்களில் சிறப்பு திருமஞ்சனம், ஆராதனை, அர்ச்சனை ஆகியவை நடைபெறும். சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அருள்மிகு சத்யநாராயணா கோயிலில் செப்டம்பர் 13-ம் தேதியன்று சிறப்பு அர்ச்சனை நடைபெறுகிறது.

ஏலக்காய் மாலை

பெருமாள் கோயில்களில் காணப்படும் ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக்கொண்டால் கல்வி அறிவு ஏற்படும். நூற்றியெட்டு மணி ஏலக்காய்களைக் கொண்ட மாலையைக் கோத்து, நாற்பத்து எட்டு வாரங்கள் லஷ்மி ஹயக்ரீவருக்குச் சாற்றி வர, கல்வி கேள்விகளில் மிகச் சிறந்த முறையில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை. ஏலக்காய் மாலையை வீட்டிலேயே தயாரிக்கலாம். ஏலக்காய்கள் மூழ்கும் வண்ணம் தூய்மையான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பத்து நிமிடம் ஊறினாலே போதுமானது.

நீரை நீக்கிவிட்டு, அந்த மாலையை சிறிய டப்பாவில் போட்டு இறுக மூடி எடுத்துச் செல்ல வேண்டும். கோயிலில் அந்த டப்பாவைத் திறந்தவுடன் வரும் ஏலக்காய் வாசனையே லஷ்மி ஹயக்கிரீவருக்கான வாசனை திரவிய நிவேதனம். நல்ல கல்வி, ஞானம், உயரிய வருவாய், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகிய அனைத்தும் உரிய காலத்தில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஸ்ரீ ராமானுஜர் பூஜித்த ஹயக்ரீவர்

பகவத் ராமானுஜர் ஸ்ரீ பாஷ்யம் என்ற கிரந்தத்தை விசிஷ்டாத்வைத கொள்கையின்படி எழுதுவதற்காக காஷ்மீரம் சென்றார். அங்கு சரஸ்வதி பண்டாரம் என்ற ஸ்தாபனத்தில் இருக்கும் விருத்தி கிரந்தத்தைக் கொண்டு ஸ்ரீ பாஷ்யம் எழுத முற்பட்டார். அதற்கு தமது சீடரான கூரத்தாழ்வானுடன் சென்றார்.

எனினும் பிற சமயவாதிகளின் எதிர்ப்பால் அவரால் விருத்தி கிரந்தத்தை சில நாட்கள் கூட, தன் பொறுப்பில் வைத்திருக்க முடியவில்லை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டார்கள். இதனால் மிக வருத்தமடைந்த ராமானுஜர், கூரத்தாழ்வாரிடம் அது பற்றி தமது கவலையை தெரிவித்தார்.

ஆனால் அந்தக் கிரந்தத்தை தாம் இரவு முழுவதும் கண் விழித்து படித்துவிட்டதாகவும் அதை இப்போழுதே தெரிவிக்கவா அல்லது இரண்டு ஆறுகளின் கரைகளின் நடுவில் சொல்லவா என்று பதில் அளித்தாராம். இரண்டாற்றுக்கு நடுவில் என்பது காவிரி கொள்ளிடம் நதிகளுக்கிடையே அமைந்துள்ள ஸ்ரீ ரங்கம். ராமானுஜருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உடன் ஆழ்வாரின் உதவியுடன் ஸ்ரீ பாஷ்யத்தை எழுதி முடித்தார். இதையறிந்த சரஸ்வதி மாதா ராமானுஜரை மிகவும் பாராட்டி அவருக்கு “ஸ்ரீ பாஷ்யகாரர்” என்று திருநாமமிட்டு தனது ஆராதனைத் தெய்வமான லஷ்மி ஹயக்ரிவரின் விக்ரஹ மூர்த்தியையும் அவருக்குப் பரிசளித்தாராம்.

அதே ஹயக்ரிவ மூர்த்தி தான் வழிவழியாக ஆராதிக்கப்பட்டு ஸ்வாமி தேசிகனை அடைந்து பின்னர் மைசூர் பரகால மடத்தைச் சேர்ந்ததாகக் கூறுவார்கள். அந்த லஷ்மி ஹயக்ரிவ மூர்த்தியை மைசூர் பரகால மடத்தில் இன்றும் தரிசிக்கலாம்.

ஹயக்ரீவர் சுலோகம்

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம்

ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே

அர்த்தம்:

‘ஞானமுள்ள ஆனந்தமயமான தேவர், தூய்மையானவர், ஸ்படிகம் போன்ற தேகத்தை உடையவர். சகல கல்வி கலைகளுக்கு ஆதாரமானவர். இவற்றை எல்லாம் கொண்ட ஸ்ரீஹயக்ரீவரை உபாசிக்கிறேன்’ என்பது பொருள்.

SCROLL FOR NEXT