ஆன்மிகம்

நிதாகன் கதை

ரமண மகரிஷி

ரிபு என்ற முனிவரிடம் நிதாகன் என்பவன் சீடனாக இருந்தான். ஆனாலும் எங்கும் பரந்து ஏகமாய் நிற்கும் பரப்பிரம்மத்தின் சத்திய நிலை பற்றிய ஞானம் அந்த நிதாகனுக்கு இன்னும் கிடைக்கவேயில்லை. அவன் நன்றாகப் படித்தவன்; அறிவாற்றல் உடையவன். ஆனாலும் மெய்ஞானம் வரவில்லை. நகரத்தில் நிதாகன் வாழ்ந்தான். கர்மங்களில் ஈடுபட்டிருந்தான்.

அவனைச் சோதனை செய்வதற்காக ஒருநாள் ரிபு முனிவர் ஒரு பட்டிக்காட்டானைப் போல வேடம் புனைந்து அவனிடம் சென்றார். அந்தச் சமயத்தில் அரசன் வீதியில் பவனிவந்து கொண்டிருந்தான். அந்தப் பவனியை நிதாகன் மிகவும் சிரத்தையோடு கவனித்துக் கொண்டிருந்தான். பட்டிக்காட்டானாகச் சென்ற ரிபு முனிவர் நிதாகனைப் பார்த்து, “இது என்ன இவ்வளவு ஆரவாரம்? இவ்வளவு கூட்டம்?” என்று கேட்டார்.

“ராஜா பவனி போகிறார்” என்று நிதாகன் சொன்னான்.

“ராஜாவா, பவனி போகிறாரா? யார் ராஜா?” என்று ஆச்சரியத்தோடு பட்டிக்காட்டானாக வந்த முனிவர் கேட்டார்.

“அதோ யானைமேல் அமர்ந்திருக்கிறாரே, அவரே ராஜா” என்று விடை கூறினான் நிதாகன்.

“ராஜா யானை மேல் இருக்கிறாரா? இரண்டு பொருட்களைக் காண்கிறேன். அந்த இரண்டு பேரில் யார் ராஜா? யார் யானை?”

நிதாகனுக்குச் சிரிப்பு வந்தது.

“என்ன இது? நான்தான் காட்டினேனே! ராஜாவையும் யானையையும் தெரிந்துகொள்ள முடியவில்லையா? அட பைத்தியக்காரா! மேலே இருக்கிறவர் ராஜா; கீழே இருப்பது யானை” என்றான்.

“கோபித்துக் கொள்ள வேண்டாம். எனக்குத் தெரியவில்லை. அதுதானே கேட்கிறேன்?”

“இப்போது தெரிந்துவிட்டதா?”

“ நான் இன்னும் முட்டாளாகவே இருக்கிறேன். உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். ராஜா மேலே, யானை கீழே என்றாயே; மேல், கீழ் என்றால் என்ன? அதுவே எனக்குத் தெரியவில்லையே!”

“ அட அடி முட்டாளே! பிரம்மாண்டாமான யானையைக் காட்டினேன்; ஆடையணி அணிந்த அரசனையும் காட்டினேன். மேலே இருக்கிற ராஜாவை உனக்குத் தெரிந்து கொள்ள முடியவில்லை. மேல், கீழ் என்பதே தெரியவில்லை. கண்ணால் கண்டும் உனக்கு விளங்காவிட்டால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. எங்கே குனி” என்றான் நிதாகன். அவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

பட்டிக்காட்டான் மறுபேச்சு பேசாமல் குனிந்தான். அவன் தோளின் மேல் நிதாகன் ஏற்றிக்கொண்டான். “ இப்போதாவது புரிகிறதா உனக்கு? நான்தான் ராஜா; நீதான் யானை. நா மேலே இருக்கிறேன். நீ கீழே இருக்கிறாய்; விளங்குகிறதா?” என்று படபடப்பாகக் கேட்டான்.

பட்டிக்காட்டான் நிதானத்தை இழக்கவில்லை. “ இல்லையே! இன்னும் தெளிவாகவில்லையே! யானை, ராஜா இரண்டும் முதலில் விளங்கின. இப்போது மேல், கீழ் என்பவையும் ஒருவாறு புரிகின்றன. ஆனால் மற்றொரு சந்தேகம் அல்லவா வந்துவிட்டது? நான் மேல், நீ கீழ் என்றாயே: நான், நீ – இந்த இரண்டும் எனக்குப் புரியவில்லை. இந்த இரண்டும் எவற்றைக் குறிக்கின்றன? கிருபையோடு இதையும் விளக்க வேண்டும்” என்று கேட்டான்.

அதுவரைக்கும் நிதாகனுக்குச் சுலபமாக இருந்தது. பட்டிக்காட்டானைக் கண்டு ஏளனமாக இருந்தது. கோபமும் வந்தது. ‘நான், நீ’ என்ற வேறுபாட்டை விளக்க வேண்டும். என்று பட்டிக்காட்டான் கேட்டவுடனே அவனுக்கே மலைப்பாகப் போய்விட்டது. ‘ நான், நீ என்று பேசினேன். எளிதிலே காட்டிவிட்டேன். நான், நீ- இந்த இரண்டையும் எப்படிக் காட்டுவது? நான் இவற்றை உணர்ந்தேனா? என்னையே நான் உணரவில்லை போலத்தானே இருக்கிறது? ஆம்: நான் என்பதே இன்னும் எனக்குத் தெளிவாகவில்லை?

நிதாகன் சிந்தனையில் ஆழ்ந்தான். அப்போதுதான் அவனுக்கு உண்மை விளங்கிற்று. “இங்கே நிற்பவன் பட்டிக்காட்டான் அல்ல. எனக்கு உண்மையை உணர்த்த வந்த ஞான குரு. இப்படி என்னைச் சுமந்தாவது உண்மையை உணர்த்தும் கருணை நம்முடைய குருநாதர் ரிபுவுக்குத்தான் உண்டு. இவர் நம் குருநாதரே” என்று தோன்றியது.

உடனே கீழே குதித்திறங்கிய சீடன் குருவின் காலைப் பற்றிக் கொண்டான். நீ, நான் என்ற பேதம் உடம்புக்கே உரிதென்பதை ரிபு இப்படியாகத் தனது சீடனுக்கு உணர்த்தினார்.

SCROLL FOR NEXT