ஆன்மிகம்

மொகரம்: சிவகங்கையில் இந்துக்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

ராமேஸ்வரம் ராஃபி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே முதுவன் திடல் கிராமத்தில் இந்துக்கள் தீ மிதித்து மொகரம் பண்டிகையை கடைபிடித்தனர்.

உலகம் முழுவதும் மொகரம் பண்டிகை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முஸ்லிம்கள் கடைபிடித்தனர்.

கர்பாலா என்ற இடத்தில் நபிகள் நாயகம் முகமதுவின் பேரனான இமாம் உசைன் குடும்பத்தினர் இஸ்லாமிய மத கட்டளையைப் பாதுகாக்கும் பொருட்டு தங்களின் இன்னுயிரை ஈந்து தியாகம் புரிந்த நாளே மொகரமாக முஸ்லிம்கள் ஒருபிரிவினர் கடைபிடிக்கின்றனர்.

முஸ்லிம்கள் மட்டுமே கொண்டாடுவதாக அறியப்பட்ட இந்தப் பண்டிகையை காலம் காலமாக இந்துக்களும் கடைபிடிக்கின்றனர் என்பது மதநல்லிக்கத்திற்கு எடுத்துக்காட்டான ஒன்றாகும்.

திருப்புவனம் அருகே முதுவன் திடல் என்ற கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் ஆண்டுதோறும் முகரம் பண்டிகையை ஒட்டி தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி வருகிறார்கள்.

முதுவன் திடலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான முஸ்லிம்கள் வசித்து வந்தனர். இதனையொட்டி இந்த ஊரில் முஸ்லிம்களும், இந்துக்களும் இணைந்து ரம்ஜான், தீபாவளி உள்ளிட்ட இரு மதப்பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கமாக இருந்து வந்தது.

இங்கள்ள பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் பிரசித்தி பெற்று விளங்குகிறது. நாளடைவில் இங்கு வசித்த முஸ்லிம்கள் அனைவரும் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்திற்கு இடம்பெயர்ந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது.

ஆனாலும் இங்குள்ள இந்துக்கள் அனைவரும் முஸ்லிம்களின் பண்டிகையான மொகரம் பண்டிகையை தவறாது கொண்டாடுகின்றனர். பாத்திமா நாச்சியார் பள்ளிவாசலையும் பராமரித்து வருகிறார்கள்.

மொகரம் பண்டிகை அன்று அதிகாலை 3 மணிக்கு பாத்திமா நாச்சியார் பள்ளிவாசல் முன்பு 15 அடி ஆழத்தில் குழி வெட்டி அதில் தீ வளர்த்து மிதித்து தங்களின் நேர்த்த்க்கடனை ஆண்களும், சிறுவர்களும் பூர்த்தி செய்தார்கள். பெண்கள் அனைவரும் தீ மிதித்த பின்னர் முக்காடு போட்டுக்கொண்டு தங்கள் தலையில் தீ கங்குகளை அள்ளி கொட்டி பூ மெழுகுதல் என்ற நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து சப்பரம் ஊர்வலமும் நாச்சியார் பள்ளிவாசலைச் சுற்றி நடைபெற்றது.

முஸ்லிம்கள் மட்டுமே கடைபிடிக்கும் மொகரம் பண்டிகையை முதுவன் திடல் கிராமத்து இந்து சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் தீ மீதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

SCROLL FOR NEXT