பாலகனாகவும், வள்ளி தெய்வானையுடன் திருமணக் கோலத்திலும் முதிர்ந்த பருவத்து தண்டாயுதபாணியாகவும் முருகப் பெருமான் காட்சி கொடுக்கும் அபூர்வத் தலம் இது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் உள்ளது வடசென்னிமலை முருகன் கோயில். சுமார் 300 ஆண்டுகள் பழைமையானது. வடமரை என்ற ஊரைச் சேர்ந்தவர் அப்பன்ன சுவாமிகள். வைணவத்தின் மீது அதீத பற்றுகொண்டவர். இருப்பினும் வடசென்னிமலையில் சுயம்புவாகக் காட்சி கொடுத்த முருகன் மீதும் அளவுகடந்த பற்று வைத்திருந்தார். தான் போற்றி வணங்கும் முருகப் பெருமானுக்குக் குழந்தை உருவச் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்யப் பிரியப்பட்டார் அப்பன்ன சுவாமிகள். அதற்காகக் காஞ்சி மகா பெரியவரிடம் சென்று ஆலோசனை கேட்டார். மகா பெரியவரும், ‘திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் வைத்தியநாத சிற்பி என்றொருவர் இருக்கிறார் அவரிடம் போய் சொல்; உனக்கு பாலகன் குமரன் சிலையை வடித்துக் கொடுப்பார்’ என்று சொன்னார்.
சஞ்சலமான அப்பன்ன சுவாமிகள்
அப்போதே அப்பன்ன சுவாமிகள் திருவண்ணாமலை சென்றார். வைத்தியநாத சிற்பியையும் சந்தித்தார். சிற்பிக்குப் பார்வையும் தெரியாது, வாய் பேசவும் வராது என்பது அப்புறம்தான் தெரிந்தது. கண் தெரியாதவர் எப்படிச் சிலை வடிப்பார் என்று சந்தேகப்பட்ட அப்பன்ன சுவாமிகள், ஒருவேளை காஞ்சிப் பெரியவரின் சோதனையா இது என்று நினைத்து சஞ்சலமானார்.
எனினும், எது நடந்தாலும் சரி என முடிவுக்கு வந்தவர், குழந்தை வேலன் சிலையை வடித்துத் தருமாறு வைத்தியநாத சிற்பியிடம் உரக்க வேண்டினார். அதற்கு, சைகையால் சம்மதம் தெரிவித்த சிற்பி, ஏழு நாட்கள் கழித்து மீண்டும் வந்து தன்னைச் சந்திக்கும்படிச் சைகையாலேயே சொல்லி அனுப்பினார்.
அதன்படியே ஏழு நாட்கள் கழித்துத் திரும்பி வந்தார் அப்பன்ன சுவாமிகள். அதற்குள்ளாக அற்புதமான குழந்தை வேலன் சிலையை அழகாக வடித்து முடித்திருந்தார் சிற்பி. இது எப்படி சாத்தியமானது என வியந்து நின்ற அப்பன்ன சுவாமிகள், குழந்தை வேலன் சிலையை பயபக்தியுடன் சிற்பியிடமிருந்து பெற்றுச் சென்று வடசென்னிமலை முருகன் கோயிலில் பிரதிஷ்டை செய்தார்.
வடசென்னிமலை முருகன் கோயில் மேமுருகனை முப்பரிமாணங்களில் பார்த்து தரிசிக்கலாம். அத்தகைய அற்புதத் திருத்தலம் இது.