ஒரு மன்னன், சூஃபியாக இருந்த ஷா இபின் ஷோஜா என்பவரின் மகளைத் தனக்குத் திருமணம் செய்துதரும்படி கேட்டான். மன்னன் தன் மகளைப் பெண் கேட்கிறான் என்றபோதும், அதற்கு அவர் மகிழ்ந்து கூத்தாடவில்லை. அதனால் மன்னனுக்கு உடனடியாக அவர் ஒப்புதல் தரவில்லை. திருமணம் குறித்து முடிவுசெய்ய மன்னனிடம் மூன்று நாள் அவகாசம் கேட்டார். தன் மகளுக்குத் தகுதியானவனாக வேறொருவன் இருப்பான் என்று அவர் நினைத்தார். ஆதலால் அவன் யார் என்று தேடிப் பார்க்க அந்த மூன்று நாட்கள் அவகாசத்தை எடுத்துக்கொண்டார்.
அந்தக் கால இடைவெளியைப் பயன்படுத்தி ஒவ்வொரு பள்ளிவாசலாகச் சென்று தன் மகளுக்குரிய மணமகனைத் தேடலானார். மூன்று திர்ஹாம் பணம் மட்டுமே உடைமையாக வைத்திருந்த ஒரு பக்தனைக் கண்டார் சூஃபி ஷோஜா. உடனே, தாமதமின்றித் தன் மகளை அந்த ஏழை பக்தனுக்கே மணமுடித்துக் கொடுத்தார்.
கணவனின் வீடு சென்ற புதுப்பெண் அங்கே காய்ந்து வறண்டு போயிருந்த ஒரு ரொட்டித் துண்டு இருப்பதைக் கண்டு திடுக்கிட்டாள். அதுபற்றிக் கணவனிடம் விசாரித்தாள். “இதை இரவுச் சாப்பாட்டுக்காக மிச்சம் வைத்திருக்கிறேன்” என்றான் அவன். ஆத்திரமடைந்த சூஃபியின் மகள், “இது எனக்குச் சரிப்படாது. நான் என் பிறந்த வீட்டுக்கே போகிறேன்” என்றாள்.
“ சூஃபி ஷோஜாவின் பெண் ஒரு ஏழைக்கு மனைவியாக இருக்க முடியாது என்று எனக்கு முன்பே தெரியும்; நீ போய்வா.” என்று விடை கொடுத்தான்.
“அல்லாஹ்வின் பக்தனுக்கே என்னைக் கல்யாணம் செய்விப்பேன் என்று இருபது வருஷமாக என் தந்தை என்னிடம் சொல்லிவந்தார். ஆனால், அல்லாஹ்வை நம்பாமல் அடுத்த வேளை உணவுக்கு மிச்சப்படுத்திவைக்கும் ஒரு மனிதருக்கல்லவா அவர் என்னை மனைவியாக்கி இருக்கிறார்.” என்று புதுப்பெண் வருத்தப்பட்டு வாதாடினாள்.
தன் மனைவியின் இந்தப் பரிகாசத்தை உணர்ந்தவுடன் அந்த ஏழைப் பக்தன் மனம் வருந்தி, “அப்படியென்றால் நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?” என்று கோரினான்.
“இந்த வீட்டில் நான் இருக்க வேண்டும்; அல்லது அல்லாஹ்வை நம்பாமல் நீ மிச்சப்படுத்தி வைத்திருக்கிற அந்த ரொட்டி இருக்க வேண்டும். என்ன சொல்கிறாய்?” என்று அவள் அவனிடம் திருப்பிக் கேட்டாள்.
கடைசியில், அவள்தான் இருந்தாள் அந்த வீட்டில்!