ஒரு நாள் ஞானி ஒருவரின் முன் கடவுள் தோன்றிப் பின்வருமாறு கேட்டார்
``ஏ..ஞானியே எனக்கு இந்தப் பூலோக மனிதர்களுடன் கண்ணாமூச்சி விளையாட வேண்டுமென்று விருப்பமாக இருக்கிறது. அவர்கள் கண்ணுக்கு அகப்படாமல் சில காலம் எங்காவது ஒளிந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.”
“அப்படியா? விசித்திரமாக இருக்கிறதே உங்கள் ஆசை..” என்றார் ஞானி.
“ஆமாம்....நான் சமுத்திரங்களுக்கு அடியாழத்தில் போய் ஒளிந்து கொள்ளட்டுமா? அல்லது பல கோடி அண்டங்களுக்கு அப்பாலுள்ள கிரகம் ஒன்றில் போய் ஒளிந்து கொள்ளட்டுமா? வேறு மறைவிடம் ஏதாவது சொல்லமுடியுமா? நான் எங்கே ஒளிந்து கொள்ளலாம்?”
சற்று யோசித்து விட்டு ஞானி சொன்னார் “கடவுளே! நீர் வேறெங்குமே ஓட வேண்டாம்... மனிதர்களின் மனத்துக்குள் ஒளிந்துகொள்ளுங்கள். அவர்கள் கண்டு பிடிக்கவே மாட்டார்கள்!!!”