திருப்பதி எழுமலையான் கோயிலில் கடந்த 5 நாட்களாக நடைபெற்ற தெப்ப திருவிழா நிறைவுபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதியில் ஆண்டுதோறும் 5 நாட்கள் தெப்ப திருவிழா மிகவும் விமரிசையாக நடத்துவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு கடந்த 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை தெப்போற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது.
கோயில் அருகே உள்ள சுவாமி புஷ்கரணியில் (குளம்) நடைபெற்ற இவ் விழாவில் முதல் நாள் இரவு ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். 2-வது நாள் ருக்மணி சமேதமாய் ஸ்ரீகிருஷ்ணர் தெப்பத்தில் உலா வந்தனர். மூன்றாம் நாள் முதல் கடைசி மூன்று நாட்களும் உற்சவரான மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தரிசனத்துக்கு 16 மணி நேரம் காத்திருப்பு
திருப்பதியில் கடந்த சனிக்கிழமை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக திங்கட்கிழமை வைகுண்டம் க்யூ காம்ப்ளக்சில் 26 கம்பார்ட்மெண்ட்களில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சர்வ தரிசனத்திற்கு 16 மணி நேரமும் அலிபிரி மலை வழிப்பாதையில் கால்நடையாக சென்று திவ்ய தரிசனம் செய்யும் பக்தர்கள் 8 மணி நேரமும் ரூ.300 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்கள் 6 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஞாயிற்றுகிழமை மட்டும் பக்தர்கள் ரூ.2.73 கோடியை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.