ஆன்மிகம்

உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி

ஜி.விக்னேஷ்

தீபாவளி பண்டிகை - அக்டோபர் 22

தீபாவளியைக் கொண்டாடும் முறையானது இல்லத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் அமைந்துள்ளது. புத்தாடை, பட்டாசு, பட்சணம், பூஜை என அனைத்து வயதுப் பிரிவினரையும் ஆனந்தப்படுத்தும் அருமையான பண்டிகை. தீபாவளிப் பண்டிகையைப் பெற்றுத் தந்ததே பூமா தேவிதான்.

வடநாட்டில் தீபங்களை வரிசையாக வீடுகளில் வைப்பதைத் தீபங்களின் ஆவளி என்பார்கள். இதுதான் தீபாவளி என்றானது. தீபாவளி கொண்டாடுவதற்கான விஷ்ணு புராணக் கதை பிரபலமான ஒன்றுதான். இதில்தான் இன்னின்னவாறு தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்றும் அசுரனான நரனை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பூமித் தாயாரின் வேண்டுதல் உள்ளது.

நரன் என்றால் மனிதன். மனித உருவில் அசுரனாக வந்து அட்டூழியம் செய்த நரகாசுர வத நிகழ்வினை ஆண்டுக்கு ஒரு முறையேனும் நினைவில் ஏற்றிக்கொள்ளுதல் நலம் பயக்கும் என்பது ஐதீகம்.

கிருஷ்ணர் துவாரகையில் இருந்தபோது, இந்திரன் தன் வெள்ளை யானையின் மீது அமர்ந்து இந்திர லோகத்திலிருந்து வந்தான். கிருஷ்ணரிடம் நரகாசுரனின் அட்டூழியங்களைப் பட்டியலிட்டான். அரிஷ்டன், தேனுகன், கேசி, கம்ஸன், குவலயாபீடம், பூதனை ஆகியோரைக் கொன்ற கிருஷ்ணரின் மாட்சிமையைப் பாராட்டினான். ஏனெனில் துஷ்டர்கள் மடிந்ததால் துவாரகையில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள முனிவர்களும் மகரிஷிகளும் யாகங்கள் செய்ய ஏதுவாக இருந்தது.

நரகாசுரன், அசுரர்களையும் அரசர்களையும் துன்புறுத்தி அவர்களைச் சேர்ந்த பெண்களைச் சிறைப்படுத்தி வைத்திருக்கிறான். மந்தர பர்வதத்தின் மணி பர்வதம் என்ற மலையையும், அதிதி தேவியின் அபூர்வமான இரு அமிர்த குண்டலங்களையும் பறித்துச் சென்றுவிட்டான். இவ்வாறெல்லாம் இந்திரன், கிருஷ்ணரிடம் புகார் பட்டியலிட்டான்.

தர்மத்தைக் காக்கும் நேரம் வந்துவிட்டது என்று முடிவு செய்த கண்ணன் சத்யபாமாவுடன், கருடன் மீதேறிப் போரிடச் சென்றார். நரகாசுரனின் தலைநகரமான ப்ராக்ஜ்யோதிஷபுரத்தை அடைந்த கிருஷ்ணன், முரன் அமைத்திருந்த ஈட்டியால் அமைக்கப்பட்ட மதில் சுவரைத் தகர்த்தார். பின்னர் முரனையும் அவனுடைய ஏழாயிரம் அசுரர்களையும் கொன்றார். அதனால் முராரி என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார்.

பின்னர் ஹயக்ரீவன், பஞ்சஜனன் ஆகிய நரகாசுரனின் தளபதிகளையும் கொன்று குவித்து, நரகாசுரனின் தலைநகருக்குள் பிரவேசித்தான். நரகாசுரனுக்கும், கிருஷ்ணருக்கும் கடும் போர் நிகழ்ந்தது. கும்பல் கும்பலாக அசுரர்கள் மடிந்து வீழ்ந்தார்கள். அவனது அஸ்திரங்களைத் தனது திருவாழியினால் செயலிழக்கச் செய்தார். தனது சக்கரத்தைக் கொண்டு நரகாசுரனின் தலையைச் சீவினார். யுத்தம் முடிந்தது.

நரகாசுரனின் தாய் பூமா தேவி, அதிதியின் குண்டலங்களை எடுத்துவந்து கிருஷ்ணனிடம் சமர்ப்பித்தாள். அப்போது ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறாள். வராக அவதாரத்தின் பொழுது, அவரின் கோரைப் பற்களின் ஸ்பரிசம் பூமி உருண்டையின் மீது பட்டதால்

பிறந்தவன் மகா பலசாலியான நரகாசுரன். ஆனால் யாகங்களை அழித்துத் தேவர்களுக்கு அவிர்பாகம் கிடைக்காமல் செய்ததால் துன்பமடைந்தான். “தர்மத்தைக் காத்த கிருஷ்ணா, நரகாசுரனின் சந்ததியினரையும் நீயே காக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தாள் பூமா தேவி.

நரகாசுரன் மாண்ட நாளான சதுர்த்தியை, நரக சதுர்த்தியாக உலக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும். இதன் மூலம் தலைக்கனம் எடுத்து, பிறரைத் துன்புறுத்தினால் நரகாசுரன் கதிதான் ஏற்படும் என்பதைப் பூலோகத்தார் என்றும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக வேண்டி விரும்பி இந்த வரத்தைக் கேட்டுப் பெற்றாள்.

நரகாசுரன் அடைத்து வைத்திருந்த 16,108 தேவ கன்னியரை விடுவித்தார் கிருஷ்ணர். மேலும் மணி பர்வதம், பத்தாயிரம் குதிரைகள், நான்கு தந்தங்கள் கொண்ட அபூர்வ யானைகள், வருணனுடைய அதி அற்புதமான மழையைத் தரும் குடை ஆகியவற்றுடன் சத்யபாமா சமேதராகக் கருடன் மீதேறி இவற்றை எல்லாம் ஒப்படைக்க தேவலோகம் சென்றார்.

SCROLL FOR NEXT