தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் ஆலயம்
தங்கத் திருப்பேரை எனும் திருநாமத்துடன் தோன்றிய பூமகள், தனது தங்கத் திருமேனிக்குக் கரிய நிறம் வேண்டி தாமிரபரணி நதிக் கரையில் பெருமாளை வேண்டி தவமிருந்த திருத்தலம் இது.
திருமகளின் கோரிக்கை
சிவந்த பொன் மேனியாய் தகிக்கும் தன்னைவிட கரிய திருமேனி கொண்ட பூதேவியிடம் பெருமாள் அதிகம் காதல் கொண்டிருப்பதைக் கண்ணுற்ற திருமகள், தன்மீதும் பெருமாளின் பார்வையை திருப்ப வைக்க உபாயம் தேடினாள். அதற்காக துர்வாச முனிவரை சந்தித்து, பூமகளின் கரிய மேனியைத் தகிக்கும் தங்கத் திருமேனியாக்கும்படி கோரினாள்.
திருமகளுக்கு பதிலேதும் தராமல் திருமாலை சந்திக்கப் புறப்படுகிறார் துர்வாசர். அவர் அங்கு போன நேரத்தில் திருமாலின் திருமடியில் சயனித்திருந்த பூமகள், துர்வாசர் வந்ததை கவனிக்காமல் இருந்து விட்டாள். இதனால் கோபமுற்ற துர்வாசர், “கரியம் நிறம் இருப்பதாலும் அதனால் திருமால் உன்மீது மையல் கொண்டிருப்பதாலும் தானே உனக்கு இந்த கர்வம்” என்று சொல்லி பூமகளின் கரிய மேனியை திருமகளைப் போன்று தகிக்கும் தங்க நிறமாக்கிச் சபித்தார்.
துர்வாசர் சொன்ன விமோசனம்
தனது தவறை உணர்ந்த பூமகள், தன்னை பொறுத்தருள வேண்டினாள். தனக்கு சாப விமோசனம் பெற வழிகேட்டாள். அதற்கு, “தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அரிபதம் எனும் திருப்பதி சென்று திருப்பேரை எனும் பெயர் தங்கி திருமாலை வழிபட்டு வந்தால் மீண்டும் கரிய திருமேனி அடைவாய்” என பூமகளின் விமோசனத்திற்கு வழி சொன்னார் துர்வாசர்.
அதன்படியே, தற்போது திருநெல்வேலி- திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் தென் திருப்பேரையில் தங்கத் திருப்பேரை எனும் திருநாமத்துடன் தோன்றினாள் பூமகள். இங்கிருந்தபடியே தாமிரபரணி நதிக்கரையில் பெருமாளை நோக்கித் தவமிருந்தாள். ஒரு பங்குனி உத்திரத் திருநாளன்று நதியில் நீராடிய பூமகளின் கைகளில் மீன் வடிவ குண்டலங்கள் இரண்டு கிடைத்தன. அவற்றைக் கொண்டு சென்று பெருமாளின் காதுகளில் அணிவித்தாள் பூமகள்.
இதனால் உள்ளம் குளிர்ந்த திருமால் அப்போதே பூமகளுக்கு காட்சி கொடுத்து அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டார். அப்போது பூமகளின் செந்நிற மேனி மறைந்து பழையபடி கரிய நிறமும் வந்தது. பூமகள் அணிவித்த நீளமான மீன் குண்டலங்களை அணிந்திருப்பதால் இங்கே கோயில் கொண்டிருக்கும் பெருமாள் பிற்காலத்தில் நெடுங்குழைக்காதர் என அழைக்கப்பட்டார். பூமகளின் பெயர் கொண்டு அரிபதமும் தென் திருப்பேரை என்றாகிப் போனது.
விலகி நிற்கும் கருடன் சந்நிதி
கருடன் சந்நிதி பெருமாளுக்கு நேர் எதிரே அமையாமல் சற்றே விலகி அமைந்திருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. வேத மந்திரங்களையும் விழாக்கள் நடைபெறும் ஓசைகளையும், குழந்தைகள் விளையாடும் ஓசைகளையும் பெருமாள் தினமும் கேட்க விரும்பியதாலேயே இப்படி கருடன் சந்நிதி சற்று விலகி அமைந்திருப்பதாக இத்தலம் பற்றிய பாடல்களில் சொல்லப்பட்டுள்ளது. இது நவதிருப்பதிகளில் ஏழாவது திருப்பதியாகவும் 108 திவ்ய தேசங்களில் 53-வது திவ்யதேசமாகவும் விளங்குகிறது.
தை கணு உற்சவம்
பூமகள் இங்கு அவதரித்த பங்குனி மாதத்தில் பத்து நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவம், 21 நாட்கள் கொண்டாடப்படும் மார்கழி அத்யயன் உற்சவம், தை மாதத்தில் நான்கு நாட்கள் களைகட்டும் தை கணு உற்சவம் ஆகியவை மகர நெடுங்குழைக்காதர் திருத்தலத்தின் முக்கிய திருவிழாக்கள்.