கடவுளின் வழிநடத்துதலை ஏற்று, மோசே தனது குடும்பத்துடன் எகிப்து நோக்கிப் பயணித்தார். பாலைவனத்தில் வந்துகொண்டிருந்தபோது ‘கடவுளின் மலை’என்ற இடத்தில் மோசேயை சந்தித்து வரவேற்றார் ஆரோன். அவர் எகிப்தில் வசித்து வந்த மோசேயின் சகோதரர். அவர் தேர்ந்த பேச்சாளரும்கூட. கடவுள் ஆரோனின் கனவில் தோன்றி மோசே எகிப்துக்குத் திரும்பி வருவதைப் பற்றிக் கூறியிருந்தார். பிறகு மோசேயிடம் “எகிப்தில் என் மக்களை மீட்க நீ போராடும்போது, ஆரோன் உனது இரண்டு கரங்களைப் போல் துணையாக இருப்பான்.
இஸ்ரவேல் மக்களிடமும் பாரவோனிடமும் பேசுவதற்கு அவன் உன்னோடு வருவான். அரசனின் முன்னால் நீ ஒரு பேரரசனைப் போலிருப்பாய்; உனக்குரிய பேச்சாளனாக ஆரோன் இருப்பான்” என்று கடவுள் ஓரேப் மலையில் மோசேவுக்கு ஏற்கெனவே கூறியிருந்தார். இப்போது ஆரோன் எதிர்கொண்டு வந்து தன்னைச் சந்தித்ததும் தனது கடவுள் எத்தனை வல்லமை மிக்கவர் என்பதில் மோசே மேலும் விசுவாசம் வைத்தார்.
மக்களைவிட மறுத்த அரசன்
மோசேயும் ஆரோனும் முதலில் இஸ்ரவேல் மக்களிடம் பேசினார்கள். இஸ்ரவேலர்களும் பரலோகத் தந்தையாகிய யகோவா தேவனின் மேல் விசுவாசம் கொண்டார்கள். பிறகு, மோசேயும் ஆரோனும் பார்வோன் மன்னனிடம் சென்று அவனைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், “உலகைப் படைத்த இஸ்ரவேல் மக்களின் கடவுளாகிய யகோவா, தேவனுக்குப் பாலைவனத்தில் போய் பண்டிகை கொண்டாடி அவரை கவுரவப்படுத்துவதற்கு மூன்று நாட்கள் விடுப்பு அளித்து எங்கள் மக்களைப் போகவிடுங்கள்” என்று கோரிக்கை வைத்தனர்.
இதைக் கேட்ட மன்னன் “நீங்கள் கூறும் கடவுள் யார் என்றுகூட எனக்குத் தெரியாது. அவருக்கு நான் ஏன் கீழ்ப்படிய வேண்டும்? நான் இஸ்ரவேலரை எங்கும் போக அனுமதிக்க மாட்டேன்” என்றான். மோசேயும் ஆரோனும் ஏமாற்றதுடன் திரும்பி வந்தனர். ஆனால் அரசன் எச்சரிக்கையடைந்தான். தங்கள் கடவுளை வணங்குவதற்காக வேலையிலிருந்து விடுப்பு எடுக்க இஸ்ரவேலர்கள் அனைவரும் விரும்புகிறார்கள் என்பதை அறிந்த மன்னனுக்கு பயங்கரக் கோபம் வந்தது.
இதனால் இஸ்ரவேல் மக்களை முன்பைவிடவும் கடினமாக உழைக்கும்படி கட்டாயப்படுத்தினான். அரசன் நம்மை மேலும் வாட்டுவதற்கு மோசேயும் ஆரோனுமே காரணம் என்று நினைத்த இஸ்ரவேலர்கள் பொறுமையிழந்து பேசத் தொடங்கினார்கள். இதனால் மோசேயையும் ஆரோனையும் வசைபாடத் தொடங்கினார்கள்.
சிறந்த தேசத்தை அளிப்பேன்
இதைக் கண்டு மிகுந்த மன உளைச்சலில் இருந்த மோசேயிடம் கடவுள் மீண்டும் பேசினார். “பார்வோனிடம் மீண்டும் போய் இஸ்ரவேலர்களைப் போகவிடும்படியாகக் கூறு” என்றார். ஆனால் மோசே, “இஸ்ரவேல் மக்களே எனக்குச் செவிசாய்க்க மறுக்கிறார்கள்! எனவே பார்வோனும் நான் சொல்வதைக் கேட்க மாட்டான். நான் பேசத் திறமையில்லாதவன்” என்று வருந்திப் பதில் கூறினான்.
அதற்குக் கடவுள், “மோசேயே மனம் தளராதே… உனது முன்னோர்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரைத் தேர்ந்தெடுத்து நான் அவர்களுக்குக் காட்சியளித்தேன். நான் அவர்களோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டேன். கானான் தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்தேன். அவர்கள் அத்தேசத்தில் வாழ்ந்தார்கள். ஆனால் அது அவர்களின் சொந்த தேசமல்ல. அதனால் அவர்களுக்கு ஒரு விசேஷமான தேசத்தை அளிப்பதாக வாக்களித்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நேரம் நெருங்கிவிட்டது.
என் மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருப்பதை இனியும் நான் அனுமதிக்க மாட்டேன். எகிப்திலிருந்து அவர்களை மீட்டு அழைத்து வரும் நான், அவர்களுக்கு வாக்களித்த புதிய தேசத்துக்கு வழிநடத்துவேன். அது என்றென்றைக்கும் அவர்களுடையதாக இருக்கும். இதையே நீ இஸ்ரவேலர்களுக்கு எடுத்துச் சொல்” என்றார். கடவுளின் உத்தரவுக்கு மோசேயும் ஆரோனும் கீழ்ப்படிந்தனர். அவ்வாறே இஸ்ரவேலர்களுக்குச் சொல்ல, அவர்கள் இழந்த நம்பிக்கையை மறுபடியும் பெற்றுக்கொண்டார்கள்.
விடாமுயற்சி
80 வயதுக் கிழவனாக இருந்த மோசேயும் 83 வயதுக் கிழவனாக இருந்த ஆரோனும் தங்கள் முதுமை குறித்த பயமின்றிச் செயல்பட்டனர். இதனால் இஸ்ரவேலர்களின் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவர்கள் ஆனார்கள். கடவுளின் உத்தரவை ஏற்று மீண்டும் பார்வோனைச் சந்தித்தனர். அப்போது ஆரோன் தனது கைத்தடியைக் கீழே போட்டார், அது ஒரு பெரிய பாம்பாக மாறியது. பார்வோனுடைய அவையில் இருந்த கண்கட்டி வித்தைக் கலைஞர்களும் தங்கள் கோல்களைக் கீழே போட்டார்கள், அவையும் பாம்புகளாக மாறின.
ஆனால், ஆரோனின் பாம்போ, அந்தக் கலைஞர்கள் உருவாக்கிய பாம்புகளைப் பிடித்து விழுங்கியது. அப்படியிருந்தும் அசைந்துகொடுக்காத பார்வோன் இஸ்ரவேல் மக்களைப் போக விடவில்லை. எனவே, பார்வோனுக்கு கடவுள் பாடம் புகட்ட முடிவுசெய்தார்.