ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி கொண்டாடப்படும் நாள் அன்றுதான் வர்த்தமான மகாவீரர் நினைவும் அனுசரிக்கப்படுகிறது. இரண்டுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லாமல், எப்படி இரண்டும் ஒரே நாளில் வரும்? இரண்டுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்கிறார்கள் தமிழ் அறிஞர்கள்.
தீபாவளி சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட பண்டிகை என்கிறார் சமண-பவுத்த அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.
சொற்பொழிவு
சமணர்களின் இருபத்தி நாலாவது மற்றும் கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகர அரசனுடைய அரண்மனையில் தங்கியிருந்தபோது, அங்கே கூடியிருந்த மக்களுக்கு அறவுரை வழங்கினார். இரவு முழுவதும் அவர் வழங்கிய சொற்பொழிவு அதிகாலையில்தான் முடிவடைந்தது. அதனால் சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் வீடுகளுக்குச் செல்லாமல், அவரவர் இருந்த இடத்திலேயே தூங்கிவிட்டனர்.
அப்போது வர்த்தமான மகாவீரர், அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே வீடுபேறு அடைந்தார் (இறந்தார்). உலகுக்கு ஞானஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை நினைவுகூர்ந்து வழிபடும் வகையில், அவர் இறந்த நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி விழா கொண்டாடும்படி பாவாபுரி அரசர் ஏற்பாடு செய்தார். மகாவீரரின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. அந்தப் பண்டிகைதான் தீபாவளி (தீபம் - விளக்கு, ஆவளி - வரிசை).
ஒற்றுமைகள்
“சமண சமயம் வீழ்ச்சியடைந்த பிறகு, சமணர்கள் பெருமளவில் இந்து மதத்தில் சேர்ந்தனர். அதற்குப் பிறகும் தீபாவளியைக் கொண்டாடிவந்தனர். அதைத் தொடர்ந்து இந்துக்களும் தீபாவளியைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.” என்று மயிலை சீனி. வேங்கடசாமி தனது ‘சமணமும் தமிழும்' என்ற நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
மகாவீரர் அதிகாலையில் வீடுபேறு அடைந்ததால்தான், தீபாவளியும் அதிகாலையில் கொண்டாடப்படுகிறது. அத்துடன், “தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் இருக்கிறது. தமிழகத்தில் நீத்தார் நினைவை அனுசரிக்கும்போது, இறுதி நாளைக் குறிக்கும் சடங்காக எண்ணெய் தேய்த்துக் குளிப்பது இருக்கிறது.
அதை ஒட்டியே தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் தீபாவளி என்ற சொல் தமிழ்ச் சொல்லும் அல்ல” என்று பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் தன்னுடைய ‘அறியப்படாத தமிழகம்' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அம்சங்களே தீபாவளிக்கும், மகாவீரர் நினைவு நாளுக்கும் இடையே உள்ள ஒற்றுமை.