ஆன்மிகம்

குறுந்தகட்டில் தேவாரம்

யுகன்

ஸ்ரீ பன்னிரு திருமுறையில் ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் எழுதப்பட்ட பதிகங்களே மூவர் தேவாரம் என்று அழைக்கப்படுகின்றன. மூவர் தேவாரத்திலிருந்து ஏறக்குறைய 120 பதிகங்களைக் கணினித் தேவாரம் என்னும் பெயரில் ஒலிக் குறுந்தகடாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டது புதுச்சேரியைச் சேர்ந்த ஐ.எஃப்.பி. என்னும் பிரெஞ்சுக் கலாச்சார மையம்.

24 பண்கள் 274 தாளங்கள்

அம்பினை தீந்தினை யாவும் எனத் தொடங்கும் பதிகம் முதல் விண்ணுமாம் மேகங்கள் என்னும் பதிகம் வரை 122 பதிகங்களைப் பாரம்பரியமாக தேவாரத்தை தினம் தினம் பாடும் ஓதுவார்களைக் கொண்டே பதிவுசெய்து, ஏறக்குறைய 6 மணி நேரம் ஒலிக்கும் எம்.பி.3 குறுந்தகடாகவும் (கணினியில் பயன்படுத்தும் வகையில் சிடிராம் வடிவிலும்) அளித்திருக்கின்றனர். பதிகங்கள் அனைத்தும் பண்டைய பண்கள் முறையிலும் தாள முறையிலும் உருவாகியிருப்பது சிறப்பு. இந்த குறுந்தகட்டில் 24 பண்களும் 274 தாளங்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஒரு குறிப்பு உள்ளது.

பாடல் பெற்ற தலங்கள்

ஒவ்வொரு பதிகத்துக்கும் உரிய பாடல் பெற்ற தலங்களின் ஒளிப்படங்களும் இந்தக் குறுந்தகட்டில் காணக்கிடைக்கின்றன. இந்த ஒளிப்படங்களையும் பதிகங்களின் ஆங்கில வடிவத்தையும் தொகுத்திருப்பவர் வி.எம். சுப்பிரமணிய அய்யர். 317 ஒளிப்படங்கள் இந்த வகையில் இந்தக் குறுந்தகட்டில் இடம்பெற்றிருக்கின்றன. பொதுவாக தேவாரம் புத்தக வடிவில் இரண்டு பிரிவுகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. பண்களை அடிப்படையாக வைத்துத் தொகுக்கப்பட்டிருப்பது ஒரு வகை. பாடல் பெற்ற தலங்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டிருப்பது இன்னொரு வகை. இந்தக் குறுந்தகட்டில் இரண்டு வகையிலிருந்தும் தேவாரப் பதிகங்கள் பாடப்பட்டிருக்கின்றன.

1997-ல் கணினித் தேவாரம் திட்டமும், தேவாரத்தை மொழிபெயர்க்கும் திட்டமும் புதுச்சேரியில் 70-களில் தொடங்கப்பட்டன. மறைந்த வி.எம்.சுப்பிரமணிய அய்யரின் பிரசுரமாகாத ஆங்கில மொழிபெயர்ப்பை (கையால் எழுதப்பட்ட 3,500 பக்கங்கள்) புதுச்சேரியின் ஐஎஃப்பி நூலகத்திலும், பாரீஸின் EFFEO நூலகத்திலும் வைத்திருந்தனர். கடந்த 2007-ல் வெளிவந்திருக்கும் இந்த கணினித் தேவாரம் ஆன்மிகத்தில் தோய்ந்த பக்தர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஒருங்கே உதவும்.

SCROLL FOR NEXT