இஸ்ரவேலர்களுக்கேன்று ஒரு ராஜா தோன்று வதற்கு முன் அவர்களது தலைவர்களாக நியாயாதிபதிகளே இருந்தனர். அவர்களது ஆட்சிக்காலத்தில் கானானின் ஒரு பகுதியாக இருந்த யூதேயா மிக மோசமான ஒரு பஞ்சத்தைச் சந்தித்தது. எனவே அங்கே வாழ்ந்த பெரும்பாலான குடும்பங்கள் விளைச்சல் செழித்த பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து சென்றார்கள். அப்படி யூதேயாவின் பெத்லெகேம் நகரத்தை விட்டு, எலிமெலேக்கு என்பவர் தனது மனைவி நாகோமியுடனும், அவர்களது இரண்டு மகன்களாகிய மக்லோன், கிலியோன் ஆகியோருடன் சற்றுத் தொலைவில் இருந்த மலை நாடான மோவாபுக்குச் சென்று அங்கே குடியேறி வசிக்க ஆரம்பித்தார்.
ஆண்களை இழந்த நகோமி
மோவாப் வளமான மலைநகரமாக இருந்தாலும் அங்கே வாழ்ந்துவந்த மக்கள் பரலோகத் தந்தையாகிய யகோவாவை வழிபடவில்லை. எனினும் அங்கே வசித்துவந்த மோவாபிய மக்கள் யகோவா பற்றி அறிந்திருந்தனர். இதனால் அங்கே பஞ்சம் பிழைக்க வந்த இஸ்ரவேலர்களை மோவாபியர்கள் எதிர்க்கவில்லை. மகன்கள் வளர்ந்து பெரியவர்களான போது நகோமியின் கணவனான எலிமெலேக்கு மரித்துப் போனார். மனமுடைந்த நகோமி, தன்னைக் காக்க மகன் இருப்பதை எண்ணி மனதைத் தேற்றிக்கொண்டாள்.
அவளது மகன்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் மோவாப் இனப் பெண்களை மணந்துகொண்டனர். மூத்தவன் மனைவியின் பெயர் ஓர்பாள். இளையவன் மனைவியின் பெயர் ரூத். திருமணத்துக்குப்பின் அவர்கள் பத்து ஆண்டுகள் மோவாபில் மகிழ்வுடன் வாழ்ந்தனர். ஆனால் அடுத்த பெரிய இழப்பாக நகோமியின் மகன்கள் இருவரும் மரித்துப்போனார்கள், நகோமி தன் குடும்பத்திலிருந்த அனைத்து ஆண்களையும் இழந்ததில் மனமுடைந்துபோய் தனிமரம் ஆனதைப் போல் உணர்ந்தாள். அதற்கு மேலும் அந்த மலைநாட்டில் வசிக்க அவள் விரும்பவில்லை. எனவே முதுமை தன்னை முடக்கு முன் தனது சொந்த ஊராகிய பெத்லகேமுக்குச் சென்றுவிட முடிவெடுத்தாள்.
பின்தொடர்ந்த இருவர்
அதற்குமுன் இள வயதில் கணவர்களை இழந்துவிட்ட தன் மருமகள்களின் பாதுகாப்பு கருதி தாய் வீட்டுக்குச் சென்றுவிடுவதே நல்லது என்று நினைத்தாள். இருவருக்கும் கண்ணீர் மல்க முத்தமிட்டுக் கிளம்பினாள். சிறிது தூரம் நடக்க ஆரம்பித்ததும் தன்னை இரு பெண்கள் பின் தொடர்வதைக் கண்டு திரும்பிப் பார்த்தாள். நகோமியைப் பின்தொடந்து வந்துகொண்டிருந்த அந்த இருவர் வேறு யாருமல்ல; ஓர்பாளும் ரூத்தும்தான்.
உன் மக்களே என் மக்கள்
அதிர்ச்சியடைந்த நகோமி அவர்களை அருகில் அழைத்து, “என் பிள்ளைகளே, நீங்கள் திரும்பிப் போய் உங்கள் தாயாரின் வீட்டில் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது. நீங்கள் இருவரும் மறுமணம் செய்துகொண்டு வாழுங்கள். உங்களைப் பரலோகத் தந்தை ஆசீர்வதிப்பார்” என்று மீண்டும் முத்தமிட்டுக் கட்டித் தழுவி அனுப்புகிறாள். அதைக் கேட்ட ஓர்பாள் அங்கிருந்து தனது தாய்வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தாள். ரூத்தும் அவ்வாறே செல்வாள் என்று நகோமி எதிர்பார்த்தாள். ஆனால், ரூத் போகவில்லை.
“ஒர்பாள் போய் விட்டாள், நீயும் அவளுடன் திரும்பிப் போ” என்றாள் நகோமி. ஆனால் ரூத், “உங்களை விட்டுப் பிரிந்து போகும்படி என்னைக் கட்டாயப்படுத்தாதீர்கள்! தயவுசெய்து என்னை உங்களோடு வரவிடுங்கள். நீங்கள் எங்கே போகிறீர்களோ அங்கே நானும் போவேன், நீங்கள் எங்கே வாழ்கிறீர்களோ அங்கே நானும் வாழ்வேன். உங்களின் மக்கள் என் மக்களே. உங்களின் கடவுளே என் கடவுள். நீங்கள் மரிக்கும் இடத்தில் நானும் மரிப்பேன், அங்கேயே நானும் அடக்கம் பண்ணப்படுவேன்” என்று உறுதியாகக் கூற அதைக் கேட்டு நெகிழ்ந்த நகோமி, ரூத்தின் அன்பில் கரைந்துபோனாள். ரூத், இஸ்ரவேல் இனத்தைச் சேர்ந்த பெண் அல்ல. ஆனால் யகோவாவைப் பற்றி அறிந்து அவரை வழிப்பட்டு வந்தாள் ரூத்.
தாயும் மகளும்
நகோமியும் ரூத்தும் பெத்லகேமை அடைந்து விடுகிறார்கள். விவசாயக்குடும்பத்தில் பிறந்த ரூத், வயல்களில் வேலைசெய்து தனது மாமியார் நகோமியை நன்கு கவனித்துக்கொள்கிறாள். இவர்கள் தாயும் மகளுமா, இல்லை மருமகளும் மாமியாருமா என்ற சந்தேகம் எழும் வண்ணம் பாசம் கொண்டவர்களாக நகோமியும் ரூத்தும் இருக்கிறார்கள். வாற்கோதுமை அறுவடைக் காலம் நெருங்கியபோது போவாஸ் என்பவர் தன் வயல்களில் வாற்கோதுமையைப் பொறுக்கிக்கொள்ள ரூத்தை அனுமதிக்கிறார். இந்த போவாஸ் எரிக்கோ பட்டணத்தில் ஏகக்கடவுள் மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களுக்கு உதவிய பாலியல் தொழிலாளிப் பெண்ணான ராகேப்பின் மகன்.
நகோமியிடம் பேரன்பு வைத்திருக்கும் ரூத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட போவாஸ் ஒருநாள் அவளை அழைத்தார். “உன்னைப் பற்றி நன்கு அறிவேன். நீ சிறந்த உழைப்பாளி. அன்பே உருவானவள். உனது மாமியார் நகோமியிடம் நீ எந்தளவு அன்பு வைத்திருந்தால் உன் பெற்றோரையும் சொந்த ஊரையும் விட்டுவிட்டு, முன்பின் தெரியாத இந்த மக்களுடன் இங்கே வாழ வந்திருப்பாய். உனக்கு பரலோகத் தந்தை நன்மை செய்வாராக” என்று வாழ்த்தினார். அந்த வாழ்த்துதலில் அன்பு இருந்ததை ரூத் கண்டாள். அவர்கள் இருவரும் நகோமியின் சம்மதத்துடன் விரைவிலேயே திருமணம் செய்துகொண்டார்கள்.
தன்னைக் கண்போலக் காத்துக்கொண்ட ரூத்துக்கு மறுமணத்தை ஆசீர்வதித்தற்காகக் கடவுளுக்கு நவோமி நன்றி கூறினாள். ரூத்துக்கும் போவாஸுக்கும், ஓபேத் என்ற மகன் பிறந்தபோது நகோமி மேலும் சந்தோஷப்பட்டாள். அன்பே உருவான அந்தக் குடும்பத்தைக் கடவுள் மேன்மேலும் ஆசீர்வதித்தார்.