ஆன்மிகம்

இஸ்லாம் வாழ்வியல்: முப்பது நன்மைகள்

இக்வான் அமீர்

இன்முகத்துடன் பேசுவதும் ஓர் அறச்செயல்தான் என்கிறார் நபிகளார். அடுத்தவர் கேட்காத அளவுக்கு மிகவும் மெல்லிய குரலிலோ அல்லது அடுத்தவர் காதுகளைப் பொத்திக் கொள்ளும் விதமாக உரத்தக் குரலிலோ பேசுவதைத் தவிர்த்திட வேண்டும்.

அறிந்தவரோ, அறியாதவரோ உரையாடலைத் துவங்குவதற்கு முன் சலாம் கூற வேண்டும். இது அன்பை வளர்க்கும்.

நபிகளாரின் திருச்சபைக்கு வந்த ஒருவர், “தங்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும் இறைவனின் தூதரே!” என்று சலாம் சொல்லிவிட்டு அமர்ந்தார். நபிகளார் அங்கிருந்தவர்களிடம், இவருக்குப் பத்து என்று அவரது செயலுக்குரிய மதிப்பீட்டைச் சுட்டினார்.

அடுத்து வந்தவரோ, “தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் பொழியட்டுமாக இறைவனின் திருத்தூதரே!” என்று முகமன் கூறிவிட்டு அமர்ந்தார். அவரது நற்செயல் மதிப்பீடு 20 என்றார் நபிகளார்.

மூன்றாவதாக அங்கு வந்தவரோ, “தங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும், நல்லருளும் பொழிவதாக இறைவனின் திருத்தூதரே!” என்றவாறு அமர்ந்தார். “முப்பது நன்மைகள்!” என்று முழுமையாக முகமன் தெரிவித்த மனிதருக்கு மதிப்பீட்டை அளித்தார் நபிகளார்.

ஒரு முழுமையான முகமனுக்காக 30 நன்மைகள் இறைவனிடம் கிடைக்கும் என்ற மதிப்பீட்டை இழப்பதற்கு யார்தான் சம்மதிப்பார்கள்?

முகமன் தெரிவிக்கும்போது, கைகுலுக்குங்கள். அவரது நலம் விசாரியுங்கள். இது நெருக்கத்தை ஏற்படுத்தும். அந்தச் செயல் நமது அக்கறையை வெளிப்படுத்தும்.

உரையாடலின் முக்கியத்துவம் உணர்ந்து, மன ஓர்மையுடன் எதிரிலிருப்பவர் விளங்கிக் கொள்ளும் விதமாக, எளிய வார்த்தைகளால் அவருக்குப் புரிய வைக்க வேண்டும் என்ற அக்கறையோடு பேசுவதே சிறந்தது.

இறைவனின் படைப்பில் ஒரு வாய்தான் என்பதை அறிந்து குறைவாகப் பேசுங்கள். இரண்டு காதுகள் இருப்பதால் அடுத்தவர் சொல்லை அதிகமாக கேளுங்கள். அந்தரங்கத்தைப் பொதுவெளியில் ஒருநாளும் பேச வேண்டாம். அது ஒருக்காலும் பாதுகாக்கப்படுவதில்லை என்ற உண்மையை அறிவது அவசியம்.

உரையாடல் முடிந்ததும், மீண்டும் முகமன் கூறி விடைபெற வேண்டுமென்கிறார் நபிகள்.

SCROLL FOR NEXT