ஆன்மிகம்

கங்கையில் ஓடும் ஈரம்

சென்னிமலை தண்டபாணி

குருதேவர் சிவானந்தர் “சேவைசெய், அன்புகாட்டு, கொடு” என்பார். அவருடைய சீடர் சுவாமி சிதானந்தர், தனது குருதேவரின் சொற்படியே வாழ்ந்தவர். பறவைகள், விலங்குகள், பூச்சிகள் என்று எல்லா உயிரினங்களின் மேலும் பேரன்பு கொண்டு தொண்டாற்றியவர். அன்றைய காலகட்டத்தில் கங்கைக் கரையில் ஏராளமான தொழுநோயாளிகள் பரிதாபகரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட அவர்களைக் கவனிப்பார் இல்லை. 1943-ம் ஆண்டு சிவானந்தா இலவச மருத்துவமனையின் பொறுப்பாளராக சுவாமிஜி பொறுப்பேற்றார். அதன் பின் அவர் செய்த தொண்டுகள் எண்ணிலடங்காதவை.

தொழுநோயாளிகளுக்காக குருதேவர் அருளால் தனியே குடியிருப்புகளை உருவாக்கினார். அவர்களுக்குரிய உணவு, உடை, மருத்துவ வசதிகள், அவர்களின் குழந்தைகளுக்குக் கல்வி என்று பல விதங்களிலும் தொண்டாற்றினார். அவர்களோ தெய்வமே இறங்கி வந்து தொண்டு புரிகிறது என்று மனம் கசிந்தார்கள். உலகெங்கும் பல இயக்கங்கள் தொழுநோயை ஒழிக்க அரும்பாடுபட்டன.

1973-ம் ஆண்டு ஆங்கிலத் தொழுநோயாளிகள் நிவாரண இயக்கத்தின் இயக்குநர் பிரான்சிஸ் ஹாரிஸ் ரிஷிகேசத்தில் சுவாமிஜியைச் சந்தித்தார். தங்கள் இயக்கத்தின் மூலம் சேகரிக்கும் நிதியைத் தொழுநோய் நிவாரணத்துக்காக ஒரு நிறுவனத்துக்கு மட்டுமே தர முடியும்; என்ன செய்யலாம் என்று விவாதித்தார். அதன் முடிவில் சுவாமிஜியைக் கடவுளாகக் கருதிய அன்னை சைமோனட்டாவின் கருத்துப்படி, ‘சிதானந்தா சர்வதேச தொழுநோயாளிகள் நிவாரண நிதி’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் துவக்கப்பட்டது. இந்த நிறுவனம் தொழுநோயாளிகளுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அவர்களின் மீது சுவாமிஜி கொண்டிருந்த கருணைக்கு அளவில்லை.

தாலிவாலா தொழுநோயாளிகள் குடியிருப்பில் வாழ்ந்தவர் கிரிதாரி என்பவர். முற்றிய தொழுநோயாளி. கால்கள், விரல்கள், மூக்கு யாவும் அழுகிப்போய்விட்டன.அவரால் நகரக்கூட முடியாது; உணவு உண்ண முடியாது. அனைவருமே வெறுத்து ஒதுக்கினார்கள். ஆனால் சுவாமிஜியோ அவரை இருபது ஆண்டுகளுக்கு மேலாகத் தானே கவனித்துவந்தார்.

குருதேவரின் செய்திகள்

சிதானந்தர் ஒருமுறை உலகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். குருதேவரின் செய்திகளை உலகெங்கும் பரப்புவதற்காகவே அந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஆசிரமவாசிகள் அனைவரும் திரண்டு வந்து வழியனுப்ப நின்றனர். சுவாமிகளுக்குச் சட்டென்று கிரிதாரியின் நினைவு வந்தது. வேகவேகமாக அவரைக் கண்டு விடைபெற்றுவரச் சென்றார். அழுகிப்போன கைகளால் சுவாமிஜியைக் கண்கலங்க வணங்கிய கிரிதாரி தான் இறப்பதற்குள்ளாவது சுவாமிகள் திரும்பி வர வேண்டும் என்று தழுதழுத்தார். ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பினார் சுவாமிஜி. வெளிநாடுகளில் இருந்து அவருக்குண்டான மருந்துகளையும் அன்பளிப்புகளையும் சிதானந்தர் அனுப்பிக்கொண்டே இருந்தார்.

நாளுக்கு நாள் கிரிதாரியின் உடல்நிலை மோசமாயிற்று. உணவை உட்கொள்ள மறுத்தார். சுவாமிகளைக் காணாமல் இறக்கிறோமே என்று அழுதார். போர்வையால் தன்னை மூடிக்கொண்டு கிடந்தார். அவர் இறந்துவிட்டார் என்றே பலரும் எண்ணினர். அப்போது சுவாமிஜியின் மீது பக்தி கொண்ட அன்னை யான்லீபா அவரைக் காண வந்தார். கிரிதாரியின் நிலை கண்டார். சுவாமிகள் விரைவில் திரும்பிவிடுவார் என்றும் அதுவரை உயிரோடு இருக்க வேண்டும் என்றால் பழச்சாறாவது குடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கிரிதாரி அதை ஏற்றுக்கொண்டார்.

சுவாமிஜியின் படத்துக்கு மாலையிட்டு அவர் முன் வைத்தார் அன்னை லீபா. அதைப் பார்த்துக்கொண்டே கண்ணீர் விட்டபடி சுவாமிஜிக்காக ஏங்கி அழுதார். என்ன அதிசயம்.தனது பயணத் திட்டத்தில் திடீரென்று சில மாறுதல்கள் செய்தார் சுவாமிஜி. இரண்டரை மாதங்களுக்கு முன்பாகவே ஆசிரமத்திற்குத் திரும்பினார். கிரிதாரியின் நிலையறிந்தார். புதிய போர்வை ஒன்றை வாங்கிக்கொண்டு கிரிதாரியின் குடிசைக்குச் சென்றார். மரணத்தின் மடியில் கிடந்த கிரிதாரி மனமுருகத் தன் குருவைத் தரிசித்தார். அவரைக் கருணையோடு பார்த்த சுவாமிஜி “கிரிதாரி இப்பொழுது நீங்கள் இந்த உடலை விட்டு விட்டு அமைதியாக வெளியேறிச் செல்லலாம்” என்றார்.

புதிய போர்வை

கிரிதாரி மவுனமாகக் கண்களை மூடினார். சில நொடிகள்தான். உலக வாழ்விலிருந்து விடைபெற்றார். சுவாமிஜி கொண்டு வந்த புதிய போர்வையால் அவர் உடல் போர்த்தப்பட்டு எரியூட்டப்பட்டது. கருணை மகனின் பேரன்பில் கிரிதாரி நனைந்து கிடந்த காலம் இன்னும் ஈரமாகவே ஓடிக்கொண்டிருக்கிறது கங்கையில்.

SCROLL FOR NEXT